பொங்கல் திருநாள் கட்டுரை

pongal thirunaal katturai in tamil

இந்துக்கள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாட கூடியவர்களாக காணப்படுகின்றனர். இவ்வாறு இவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் மிகவும் முக்கியமானதொரு பண்டிகையாக பொங்கல் திருநாள் காணப்படுகின்றது.

அதாவது தமிழர்களின் நன்றி மறவாத தன்மை, விசுவாசம் என்பவற்றை பறைசாற்றுவதாக இந்த பொங்கல் திருநாள் அமைந்திருப்பதனை நாம் காண முடியும்.

பொங்கல் திருநாள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • பொங்கல் திருநாளின் வரலாறு
  • தைப்பொங்கல்
  • மாட்டுப் பொங்கல்
  • பொங்கல் திருநாளின் சிறப்புக்கள்
  • முடிவுரை

முன்னுரை

தமிழர் திருநாள் என சிறப்பித்துக் கூறப்படும் ஒரு பண்டிகையாக பொங்கல் திருநாள் காணப்படுகின்றது. அதாவது தமிழர்களின் கலாச்சாரத்தை இந்த உலகிற்கு உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாக இந்த திருநாள் காணப்படுகின்றது.

வேளாண்மையாய் அடிப்படையாகக் கொண்டு தன்னுடைய ஜீவனோபாயத்தை கழிக்க கூடிய தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர்.

பொங்கல் திருநாளின் வரலாறு

தைப்பொங்கல் திருவிழாவானது உலகில் வாழக்கூடிய அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரியமாக தமிழர்கள் சூரிய நாட்காட்டியை தங்களுடைய நாட்காட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதன்படி சூரியன் மகர ராசியில் நுழையும் போது சூரியனின் நீண்ட பயணத்தின் தொடக்கத்தை கொண்டாடும் விதத்தில் தை மாதம் இந்த பொங்கல் திருவிழாவை தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

வேளாண்மை செய்யக்கூடிய உழவர்கள் தங்களுடைய அறுவடைகள் முடிந்த பின்னர் சூரிய பகவானுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையிலே இப்பண்டிகை கொண்டாடப்படுவதனால் இது உழவர் திருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.

யோகி பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுவதனை காணலாம்.

இந்த வகையில் பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பழமையான ஒரு பண்டிகை எனவும் இது பற்றிய அதிகமான பதிவுகள் சோழர் காலத்தில் கிடைக்க பெற்றுள்ளதாகவும் ஆராய்ச்சிகளின் வழி தெரியவந்துள்ளன.

தைப்பொங்கல்

பொங்கல் பண்டிகையின் பிரதானமான தினம் தைப்பொங்கல் தினமாகும். அதாவது தை மாதம் முதலாம் திகதி இது கொண்டாடப்படுகின்றது.

இந்த நாள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டுக்கு முன் கோலங்கள் இட்டு, அதன் நடுவே அடுப்புக் கூட்டி புதுப்பானையில் பொங்கல் பொங்குவர். அதன் பின்னர் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக புது தானியங்கள், புது காய்கறிகள், கரும்பு மற்றும் பொங்கல் அனைத்தையும் சேர்த்து படையல் போட்டு பூஜைகளை நிகழ்த்துவார்கள்.

இவ்வாறு பூஜைகள் முடிந்த பின்னர் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கலை உண்டு மகிழ்ந்து இந்த தைப்பொங்கலைக் கழிப்பர்.

மாட்டுப் பொங்கல்

தைப்பொங்கலுக்கு மறுநாள் உழவர்களுக்கு, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பட்டி பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் என்பது கொண்டாடப்படுகின்றது.

இந்நாளில் மாடுகள் குளிக்க வைக்கப்பட்டு, அதன் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அதனை அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபடுவர்.

அத்தோடு தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு அம்சமான ஜல்லிக்கட்டும் இந்த மாட்டுப்பொங்கல் தினத்தில் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொங்கல் திருநாளின் சிறப்புக்கள்

நாம் வாழக்கூடிய இந்திய தேசத்தில் கொண்டாடப்படும் மிகவும் பழமையான விழாக்களில் ஒன்றாக இந்த பொங்கல் காணப்படுகின்றது.

எமக்கு உணவளிக்கக்கூடிய விவசாயத்துக்கும், அதற்கு உதவக்கூடிய சூரியனுக்கும், இதனைச் செய்யக்கூடிய உழவர்க்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக ஒட்டுமொத்த இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் ஒரு பண்டிகையாக இந்த பொங்கல் காணப்படுகின்றமையானது அதன் சிறப்பையே எமக்கு எடுத்து உணர்த்துகின்றது.

அத்தோடு இப்பண்டிகையானது இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழக்கூடிய தமிழர்களாலும் கொண்டாடப்படுவதினால் இது உலக அளவில் கொண்டாடப்படக்கூடிய சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை என்றே குறிப்பிட முடியும்.

முடிவுரை

தற்கால நவீன வளர்ச்சிகளின் காரணமாக தொலை தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி பெற்று வருவதனால் பொங்கல் திருநாளுக்கான வாழ்த்துக்களும், குறுஞ்செய்திகளும் உலகெங்கும் பரவுகின்றன.

தமிழர்களின் நன்றி மறவாத தன்மையை இந்த உலகுக்கு பறைசாற்றக்கூடிய பொங்கல் திருநாள் எப்பொழுதுமே சிறப்பானது என்பது, யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

You May Also Like:

யோகா பற்றிய கட்டுரை

சித்திரை புத்தாண்டு கட்டுரை