சிறு சேமிப்பு கட்டுரை

siru semippu katturai in tamil

எமது எதிர்கால வாழ்வை சிறந்ததாக மாற்றுவதற்கான ஒரு வழியே சிறு சேமிப்பாகும். நாம் சிறிதாக சேமிப்பவையே பின்னர் எம் வாழ்வின் பாரிய விடயங்களுக்கு உதவக் கூடியதாக காணப்படும். மேலும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உறுதுணையாகவும் சிறு சேமிப்பே திகழ்கின்றது.

சிறு சேமிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சிறு சேமிப்பின் அவசியம்
  • சிறு சேமிப்பின் நன்மைகள்
  • சிறு சேமிப்பிற்கான வழிமுறைகள்
  • இன்றைய கால கட்டத்தில் சிறு சேமிப்பு பழக்கவழக்கம்
  • முடிவுரை

முன்னுரை

சிறு சேமிப்பானது நம் தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை சிறந்த முறையில் சேமித்து வைப்பதாகும். சிறு துளி பெரு வெள்ளம் என்ற பழமொழியானது சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தினை எமக்கு எடுத்தியம்புகின்றதோடு எதிர்காலத்தை வளமாக்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் சிறு சேமிப்பே காணப்படுகின்றது.

சிறு சேமிப்பின் அவசியம்

நாம் எமது வாழ்வை சிறப்பாக வாழ்வதற்கு சேமிப்பானது அவசியமாகும். நாம் இன்று மேற்கொள்ளும் சிறிய சேமிப்பு நாளை எம்மை பல கஷ்டங்களிலிருந்து காத்து எமது வாழ்வை உயர்த்துவதற்கும், கடனை தவிர்ப்பதற்கும் துணை புரிகின்றது.

எல்லாக் காலங்களிலும் தலை நிமிர்ந்து சிறப்பாக வாழ சிறு சேமிப்பே வழியமைத்து தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கடினமான சூழ்நிலைகளில் எமக்கு உதவக் கூடியதாக நாம் சேமிக்கும் சேமிப்பானது காணப்படும்.

சிறு சேமிப்பின் நன்மைகள்

எமது வாழ்வில் வரும் பல கடினமான சூழலை தவிர்ப்பதற்கு சிறு சேமிப்பு உதவுகின்றது. பொருளாதார பிரச்சினைகளை சரி செய்து கொள்ளவும் தொழில் ரீதியில் முன்னேற்றம் அடைந்து கொள்ளவும் சிறு சேமிப்பே துணை புரிகின்றது.

எமது வாழ்வானது எப்போது முடிவடையும் என்பதை அறியாது நாம் உலகில் பயணித்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் அவசரமான தேவையின் போது பணமே தேவைப்படுகின்றது.

இத்தகைய பணத்தினை நாம் சேமித்து வைப்பதானது எம்மை மட்டுமன்றி எமது எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்விற்கும் வழிவகுக்கும். ஆபத்துக்களின் போது பிறரிடம் கையேந்தாமல் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு சிறு சேமிப்பே உதவுகிறது.

சிறு சேமிப்பிற்கான வழிமுறைகள்

நாம் பணத்தினை வங்கியில் வைப்புச் செய்வதன் மூலம் சேமித்து வைக்க முடிவதுடன் வட்டியும் கிடைக்கும்.

எமது வருமானத்தில் சிறுதொகையை சேமிப்புக்கு என ஒதுக்கிவிட்டு செலவுகளை மேற்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிறு தொகை என அலட்சியம் செய்யாமல் சிறு தொகையாயினும் சேமிப்பு செய்யும் போது அது எதிர்காலத்தில் பெரும் தொகையாக மாறும்.

இன்று எமது சிறார்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டு பாடசாலைகளின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பாடசாலை சிறு சேமிப்பு திட்டமானது மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவக் கூடியதாகவே காணப்படுகின்றது.

இன்றைய கால கட்டத்தில் சிறு சேமிப்பு பழக்கவழக்கம்

இன்று ஒவ்வொரு தனிமனிதனும் தான் சேமிப்பவற்றை வங்கிகளிலும் பல்வேறு காப்புறுதி நிறுவனங்களிலும் வைப்பிலிட்டு சிறு சேமிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இன்னும் சிலர் இன்றைய கால கட்டத்தில் தான் உழைப்பவற்றை வீண் செலவிற்காக செலவளித்து வருகின்றனர். இந்நிலையிலிருந்து விடுபட்டு அனைவரும் தனது வாழ்வில் சிறு சேமிப்பை பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

ஓர் சிறு எறும்பு கூட சிறு சேமிப்பினை உணர்ந்ததன் காரணமாகவே அது இன்று சிறப்பாக வாழ்கின்றது. ஒவ்வொரு மனிதனும் எதிர்கால தேவை கருதி இன்றே சிறு சேமிப்பினை துவங்குவது எம் வாழ்வை அழகாக மாற்றும்.

முடிவுரை

சிறு சேமிப்பு பழக்கமானது பிறரிடம் கையேந்தும் நிலையிலிருந்து எம் அனைவரையும் காக்கக் கூடியதாகும். இன்றே நாம் ஒவ்வொருவரும் சிறு சேமிப்பை துவங்குவதோடு மட்டுமல்லாது எமது சிறார்களுக்கும் சிறு சேமிப்பை கற்றுக் கொடுத்தல் வேண்டும்.

You May Also Like:

சிறுசேமிப்பு பேச்சு போட்டி

மழை நீர் சேமிப்பு வாசகங்கள்