ஒரு ஜனநாயக சமூகத்தில் மனிதர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், தனியன்களின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும் பின்பற்றப்படும் கருவிகளாகவே சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பன காணப்படுகின்றன.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- சுதந்திரம் என்றால் என்ன
- சமத்துவம் என்றால் என்ன
- சகோதரத்துவம் என்றால் என்ன
- சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றியின் தேவை
- முடிவுரை
முன்னுரை
நாம் வாழும் சமூகங்களில் பல்வேறு வகையான அரசாங்க முறைகள் காணப்படுகின்றன.
இவற்றுள் ஜனநாயகத் தன்மை மிகுந்த ஒரு அரசாங்க முறையானது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற எண்ணக் கருக்களை தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் இக்கட்டுரையில் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் பற்றி நோக்கலாம்.
சுதந்திரம் என்றால் என்ன
ஒரு தனியன் தன்னுடைய தனித்துவத்தினை பாதுகாத்துக் கொண்டு செயல்படுவதற்கான சூழ்நிலை சுதந்திரம் ஆகும்.
Liber என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததே Liberty எனும் சுதந்திரத்தை குறைக்கும் ஆங்கிலச் சொல்லாகும். ஒரு சமூகத்தில் தனி மனிதனின் உரிமையை உறுதிப்படுத்துவதாகவே இந்த சுதந்திரம் காணப்படுகின்றது.
அதாவது பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், கருத்து வெளியிட்ட சுதந்திரம் மற்றும் விரும்பிய சமயத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் என பல்வேறு வகையிலாக இந்த சுதந்திரம் அனுபவிக்கப்படுகின்றது.
சமத்துவம் என்றால் என்ன
மக்களாட்சிக் கோட்பாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் ஓர் எண்ணக் கருவாகவே சமத்துவம் என்பது காணப்படுகின்றது.
அந்த வகையில் மனிதர்கள் அனைவரும் சாதி, இனம், மதம், பாலினம் போன்ற பாகுபாடுகள் இன்றி சமமாக நடத்தப்படுவதனையே சமத்துவம் எடுத்துக்காட்டுகின்றது. பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் குறைவாக மதிப்பிடப்படும் நிலை சமூகங்களில் காணப்படுகின்றன.
ஆனால் இவ்வாறான நிலைமைகளை களைந்து ஆண், பெண் இருபாலாரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதனை சமத்துவம் என்ற எண்ணக்கரு எடுத்துக்காட்டுவதனை காணலாம்.
சகோதரத்துவம் என்றால் என்ன
ஒரு தனியன் தனக்காக மட்டும் வாழாது பிறருக்காகவும் வாழ வேண்டும். என்பதோடு, பிறரோடும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை எடுத்துச் சொல்வதாக சகோதரத்துவம் காணப்படுகின்றது.
அந்த வகையில் சமூகங்களில் குழப்பங்கள், பிரச்சினைகள்,விவாதங்கள் மற்றும் தேவையில்லாத வாக்குவாதங்கள் என்பவற்றினை தவிர்க்கவும், சமூகங்களின் மத்தியில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையினையும் கட்டி எழுப்பும் முகமாகவும் சகோதரத்துவம் எனும் எண்ணக்கரு வலுப்பெற்றிருப்பதனைக் காண முடியும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றியின் தேவை
ஒரு சமூகத்தில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டுமாயின், அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க கூடிய கருவிகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவற்றின் தேவை மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் எந்த ஒரு சமூகத்தில் இவ்வாறான ஜனநாயக உத்திகள் இல்லையோ அச்சமுகம் சீர்குலைந்ததாகவும், சர்வாதிகார போக்கு உடையதாகவும், முரண்பாடுகள் நிறைந்ததாகவுமே காணப்படலாம்.
எனவே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன சமூகத்துக்கு தேவையான அம்சங்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
முடிவுரை
தற்கால சமூகங்களில் ஒரு தனியன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியமானதாக காணப்படுகின்றதோ, அதே அளவுக்கு அச்சமுகத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பேணுவது ஒவ்வொரு தனியன்களதும் கடமையாகும்.
ஆகவே தங்களுடைய சுதந்திரத்தை அனுபவிப்பதற்காக எந்த ஒரு நபரும் பிறருடைய சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. இதனையே சமத்துவம், சகோதரத்துவம் என்பனவும் உறுதி செய்கின்றன.
அந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்ற எண்ணக்கருக்களைப் பற்றிய தெளிவினை பெற்று செயல்படுவது, சிறந்ததொரு சமூகத்தை கட்டியெழுப்ப உதவும்.
You May Also Like: