செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன

serivuttapatta rice in tamil

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன

உலகளாவிய ரீதியில் வறிய நாடுகளும், வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளும் எதிர் நோக்குகின்ற மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக ஊட்டச்சத்து பிரச்சனை உள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ளது. 60% பள்ளிக் குழந்தைகளுக்கும் 50% கர்ப்பிணிப் பெண்களுக்கும் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் இருப்பதாக உணவு பொது விநியோக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அதிக அளவு இரத்தசோகை, சத்துக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பீகார், அந்தமான் நிகோபார் (ஒன்றியப்பகுதி) மேற்குவங்காளம், அரியானா ஆகியவையே முன்னணியில் உள்ளன.

உணவே மருந்து என்பார். ஆனால் இன்று உணவே நஞ்சாக்கிப் போகின்ற ஆபத்தையே நாம் அனைவரும் சந்தித்து வருகின்றோம். இந்திய நாட்டில் வாழும் நாம் அன்றாட வாழ்வில் அரிசியை பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றோம். அந்த அரிசியை செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றுவதனால் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்க முடியும்.

செறிவூட்டப்பட்ட உணவின் தேவை

ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க சத்துள்ள உணவை வழங்குவது முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தியாவில் பெரும்பாலானோரின் பிரதான உணவாக அரிசி உள்ளது.

தனிநபர் உணவு நுகர்வு ஒரு மாதத்திற்கு 6.8 கிலோ கிராமாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களோடு செறிவூட்டுவதுதான் ஏழைகளது ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன

உணவின் ஊட்டச்சத்தை மேம்படுத்தி உணவினுடைய அத்தியாவசிய நுண்ணூட்ட சத்துக்களை அதிகரிப்பதே செறிவூட்டல் ஆகும். அதாவது பொதுவாக அரிசியைப் பட்டை தீட்டும் போது அதில் உள்ள தனிமங்களும், சத்துக்களும் அழிய வாய்ப்புள்ளது.

எனவே அரிசியில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் முறை தான் செறிவூட்டப்பட்ட அரிசியாகும்.

பொது விநியோகம், மதிய உணவுத் திட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்து தமிழ்நாட்டில் முதல் கட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சியில் தொடங்கப்பட்டது.

ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உணவை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமான பயன்பாட்டு முறையாக இது கருதப்படுகிறது. எனினும் இது அனைவருக்கும் அவசியமானதா என்றால் அது கேள்விக்குறியே!

போசாக்குள்ளவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியைத் தொடர்ந்து உண்டால் தேவைக்கு அதிகமான உணவு உடலில் சேர்ந்து ஆரோக்கியம் சார்ந்து பல பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

எனவே அரசு செறிவூட்டப்பட்ட அரிசியின் தேவை உள்ளவர்களைக் கண்டறிந்து வழங்குவது சிறந்தது. மற்றும் இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது மக்களைத் தாமாகவே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும்.

You May Also Like:

உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை

நவீன விவசாயம் பற்றிய கட்டுரை