உலகில் பல மொழிகள் காணப்பட்ட போதிலும் அவற்றினுள் தனித்தன்மையும், சிறப்பும் மிகுந்த ஓர் மொழியாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. அதாவது காலத்தால் அழியாத சிறப்பு கொண்ட தமிழ் மொழியானது தமிழர்களின் வளர்ச்சியோடு இணைந்து கூடவே வளர்ந்து கொண்டு வருவதனைக் காணலாம்.
தமிழ் மொழி வளர்ச்சி கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- செம்மொழியான தமிழ் மொழி
- தொன்மையான மூத்த மொழி தமிழ்
- தலைசிறந்த இலக்கியப் பெருமை
- இணையத்திலும் தமிழ் மொழி
- முடிவுரை
முன்னுரை
தமிழர்களின் உடலோடும், உணர்வோடும் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே தமிழ் மொழி காணப்படுகின்றது. இதனை “தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற பாரதிதாசனின் கருத்து வெளிப்படுத்துவதனை காணலாம்.
சங்க காலம் தொட்டு இன்று வரைக்கும் தமிழ் மொழி வளர்ந்து கொண்டே வருகின்றது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
செம்மொழியான தமிழ் மொழி
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் ஆதாரமாகவே 2004 ஆம் ஆண்டு செம்மொழி எனும் கௌரவம் அளிக்கப்பட்டது.
அதாவது தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுநிலைமை, தாய்மைத்தன்மை, தனித்து இயங்கும் தன்மை, கலைநயம், இலக்கிய இலக்கண வளம், உயர்ந்த சிந்தனை, மொழிக்கோட்பாடு, கலை பண்பாட்டுத்தன்மை ஆகிய அனைத்து பண்புகளையும் தமிழ் மொழி கொண்டுள்ளமையால் தான் செம்மொழி எனும் கௌரவம் கிடைத்துள்ளது.
தொன்மையான மூத்த மொழி தமிழ்
“பிராகா” எனும் ரஷ்ய நாட்டு இதழின் கருத்துப்படி, உலகில் 6000 மொழிகள் தோன்றியுள்ளதாகவும், அதில் தற்காலத்தில் 2700 மொழி மாத்திரமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் காணப்படக்கூடிய எல்லா மொழிகளை விடவும் தொன்மையான மூத்தமொழியாக தமிழ் மொழி காணப்படுகின்றது. அதாவது 4400 வருடங்கள் பழமை வாய்ந்தது என ஆய்வுகளின் வழி தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் மனித நாகரீகம் வளர்ச்சி அடைவதற்கு முன்னரே, தமிழர்கள் மிகச்சிறந்த ஓர் மொழியுடன் வாழ்ந்துள்ளனர் என தெரிய வருகின்றது.
தலைசிறந்த இலக்கியப் பெருமை
தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்கள் இந்த மொழியின் சிறப்பையும், வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுவதாகவே அமைந்துள்ளன.
எடுத்துக்காட்டாக திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் இன்று பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமையை காணலாம்.
இன்னும் உலா, தேவாரம், பிள்ளைத்தமிழ், காப்பியங்கள், சிறுகதை, கவிதை, கட்டுரை என பல்வேறு இலக்கிய வடிவங்கள் தோற்றம் கண்டு தமிழின் வளர்ச்சிக்கும் வழி வகுத்துள்ளது.
இணையத்திலும் தமிழ் மொழி
இன்று தமிழ் மொழியின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாகவே இணையதளத்தில் பயன்படுத்தப்படுவதை காண முடிகின்றது.
இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளின் ஆதிக்கம் இணையதளங்களில் அதிகமாக காணப்பட்ட போதும், கணினி, தொலைபேசி போன்ற நவீன ஊடகங்களில் தமிழ் மொழி ஆக்கங்கள், இலக்கியங்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றன இணையத்தில் வெளிவருகின்றன. இவை தமிழின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.
முடிவுரை
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்கும் காணோம்”என்ற பாரதியாரின் கருத்துக்கு இணங்க மங்காத புகழ் கொண்ட தமிழ் மொழியின் பெருமைகளை அறிந்து, அந்த தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எம்மால் முடிந்த பங்களிப்புக்களை வழங்குவது எம் அனைவரதும் கடமையாகும்.
You May Also Like: