தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை

thillaiyadi valliammai katturai in tamil

ஆங்கிலேயர்களது அடக்குமுறைகளுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக போராடிய பலர் உள்ளனர். அவர்களுள் ஆண்களுக்கு நிகராக நின்று போராடிய ஓர் வீரமங்கையாகவே இந்த தில்லையடி வள்ளியம்மை விளங்குகின்றார்.

தில்லையாடி வள்ளியம்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • இளமைக்காலம்
  • அறப்போராட்டம்
  • சிறை வாழ்க்கை
  • காந்தியடிகளின் கருத்து
  • அரசு வழங்கிய சிறப்புகள்
  • முடிவுரை

முன்னுரை

பெண்களும் சலித்தவர்கள் அல்ல என்பதனை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட மங்கையர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் வேலுநாச்சியார், ராணி லட்சுமி பாய் போன்ற பெண்கள் இந்தியாவினுள் விடுதலைக்காக போராட, நாடு கடந்தும் இந்தியர்களுக்காக போராடிய பெண்களுள் மிகவும் முதன்மையான ஒருவராகவே இந்த தில்லையடி வள்ளியம்மை காணப்படுகின்றார்.

இளமைக்காலம்

இந்தியாவில் தஞ்சை மாவட்டத்தில, தில்லையடி எனும் ஊரை பிறப்பிடமாகக் கொண்ட முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோர் வணிகத்தின் நிமித்தம் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்தனர். அங்கு 1898 ஆம் ஆண்டு இவர்களுக்கு மகளாக பிறந்தவரே வள்ளியம்மை ஆவார்.

இவர் சிறு வயது முதலே இந்தியாவின் மீதான பற்றும், காந்தியடிகளின் அகிம்சாவழி போராட்டத்தில் கவரப்பட்ட தன்மையுமே இவரை தன்னுடைய இளமைக் காலத்திலேயே விடுதலை போராட்டங்களில் ஈடுபடத் தூண்டியது.

அறப்போராட்டம்

1913 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றமானது, நாட்டின் திருமணப்பதிவு சட்டப்படியும், கிறிஸ்தவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பானது அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு எதிரானதாக காணப்பட்டமையினால் தங்களுடைய உரிமைகளை மீட்பதற்காக அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தினை தலைமை தாங்கிய காந்தியடிகளின் உரிமை முழக்கத்தினால் கவரப்பட்ட வள்ளியம்மை, சிறுவயதிலேயே போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டார். இதன் விளைவாக 1913 ஆம் ஆண்டு வால்க்ஸ்ரஸ்ட் எனும் இடத்தில் நடைபெற்ற அறப்போரின் போது வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.

சிறை வாழ்க்கை

அறப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வள்ளியம்மைக்கு தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம் 3 மாத கால கடும் சிறைக்காவல் தண்டனை விதித்தது. சிறையில் இவருக்கு கல்லும், மண்ணும் கலந்த உணவு வகைகளே வழங்கப்பட்டன.

இதனால் இவருடைய உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை, ஆகவே உயிருக்கு போராடிய நிலைமையிலேயே சிறையில் இருந்து வள்ளியம்மை விடுதலை பெற்றார்.

காந்தியடிகளின் கருத்து

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக கடமையாற்றிய நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு அறப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

அப்போராட்டங்கள் முனைப்பாக பங்கு பற்றிய சிறுமையாக தில்லையாடி வள்ளியம்மை காணப்பட்டமையினால், காந்தியடிகள் கூறுகையில் தனக்கு விடுதலை உணர்வை முதல் முதலில் ஊட்டிய பெருமை வள்ளியமையையே சாரும் என்கிறார்.

மேலும் இளம் வயதிலேயே இந்தியர்களது உரிமைகளுக்காக போராடி உயிர் திறந்த வள்ளியம்மையின் இறப்பானது, தன்னுடைய சகோதரியின் இழப்பை விட மிகவும் வருத்தத்துக்குரியதாகும் என்றும் மேலும் தென்னாபிரிக்கா சத்தியக்கிரகம் எனும் நூலில் இவர் வள்ளியம்மையின் பெயர் தென்னாப்பிரிக்கா வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம்.

அரசு வழங்கிய சிறப்புகள்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய வள்ளியம்மை அவர்கள், 1914 ஆம் ஆண்டு கடும் காய்ச்சலினால் தன்னுடைய 16 வது வயதில் மரணம் எய்தினார். இவ்வாறு இந்தியர்களது உரிமைகளுக்காக போராடிய வீரமங்கையை போற்றி தமிழ்நாடு அரசு தில்லையடியில் அவரது சிலையை நிறுவியுள்ளது.

மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் சென்னையில் உள்ள தன்னுடைய 600 ஆவது விற்பனை மையத்துக்கு தில்லையடி வள்ளியம்மை மாளிகை என பெயர் சூட்டி உள்ளது.

மேலும் தில்லையடியில் வள்ளியம்மை ஞாபகார்த்த மண்டபம் ஒன்றும், அதற்கு எதிரே நினைவுத்தூண் ஒன்றையும் இந்திய தமிழ்நாட்டு அரசு நிறுவி உள்ளமையினைக் காணலாம்.

முடிவுரை

இந்திய மக்களின் நலனுக்காகவும், உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி, தன்னுடைய இளம் வயதிலேயே மரணத்தை தழுவிய வீர மங்கையாகவே இந்த தில்லையடி வள்ளியம்மை காணப்படுகின்றார். இவருடைய சேவை அளப் பெரியது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

You May Also Like:

விடுதலைப் போரில் சுபாஷ் சந்திர போஸ் கட்டுரை