அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்துக்களால் கொண்டாடப்படும் சிறந்த விழவாகவும், முப்பெரும் தேவியரை வழிபடக்கூடியதொரு வழிபாடாகவும் திகழ்கின்ற நவராத்திரி பற்றியே இன்று பேசப்போகின்றேன்.
நவராத்திரி என்பது துர்கா தேவியை வழிபடக்கூடிய ஒரு அற்புதமான இந்து பண்டிகையாகும். நவராத்திரி என்பது இரவுகள் என்பதனை சுட்டி நிற்கின்றது. இந்த விழாவானது 9 நாட்கள் இடம்பெறக்கூடியதாகும்.
இது சக்தியை போற்றக்கூடிய ஒரு விரதமாக காணப்படுகிறது. நவராத்திரியானது ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் ஆனால் இந்தியாவில் சில பகுதிகளில் வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரியானது கொண்டாடப்படுகின்றது.
மகிசாசுரனின் அழிவும் நவராத்திரியும்
மகிசாசுரன் என்ற அரக்கன் தவம் இருந்து அதனூடாக சிவபெருமானை மகிழ்வித்து பல மாய, மந்திர சக்திகளை பெற்றுக்கொண்டான். யாராலும் அழிக்கமுடியாத ஒரு நிலையை பெற்றுக்கொண்டதோடு ஒரு கன்னிப்பெண்ணினாலே தனக்கு அழிவு ஏற்படும் என்ற வரத்தினையும் பெற்றுக்கொண்ட இவன் தேவர்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கினான்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே துர்காதேவி இந்த அரக்கனுடன் ஒன்பது நாள் போர் செய்து 10ம் நாள் துர்காதேவியால் கொல்லப்பட்டான். இவ்வாறு போர் நடைபெற்ற 9 நாட்களுமே நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்பண்டிகையானது முப்பெரும் தேவிகளை வழிபடும் ஒரு சிறப்பு மிக்க பண்டிகையாகவே திகழ்கின்றது.
இந்த 9 நாட்களிலும் மூன்று நாட்களாக பிரித்து லட்சுமி, சக்தி, சரஸ்வதி என முப்பெரும் தேவிகளை வணங்கி வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த நவராத்திரி நாட்களில் விரதம் இருந்தும் அம்மனை வழிபடுவது சிறப்பிற்குரியதாகும்.
இது ஒரு விரதத்துடன் கூடிய பண்டிகை நாளாகவும் காணப்படுவதோடு இந்த சிறப்பு மிக்க நாளில் வீட்டில் கொலு வைத்து நெய் வைத்தியம் போன்ற பிரசாதங்களை படைப்பது வழக்கமாகும் இவ்வாறாகவே நவராத்திரியானது கொண்டாடப்பட்டு வருகின்றது.
முக்கியத்துவமிக்க நவராத்திரி
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளுள் முப்பெரும் தேவிகளை முன்னிறுத்தி 9 நாட்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்ற ஒரு பண்டிகையாகவே இது காணப்படுகின்றது.
நவராத்திரி நாட்களில் பிரசாதமாக உட்கொள்ளப்படும் உணவுகளானவை உடலிற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக காணப்படுவதோடு இந்நாளில் முப்பெரும் தேவிகளின் அருளானவை கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்வதற்கு இந்நாளானது துணை செய்கின்றது.
நவராத்திரி நாட்களில் அரிசி மாவை பயன்படுத்தி கோலம் போடுவதினூடாக குடும்பம் ஒற்றுமை, செல்வம் போன்றவை பெருகும்.
மேலும் இந்நாளில் வாசலில் மாவிலைகட்டி பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் ஐஸ்வர்யமானது உண்டாகும். இந்நாளானது திருமண யோகங்கள் கைகூடி வரக்கூடிய ஒரு நாளாகவும் திகழ்கின்றது.
நவராத்திரி விரதம்
நவராத்திரியை முன்னிட்டு பல பெண்கள் விரதத்தினை கடைப்பிடிக்கின்றார்கள். அந்த வகையில் சிலர் ஒன்பது நாட்களும் விரதத்தினை கடைப்பிடிக்க கூடியவர்களாக காணப்படுகின்றனர்.
நவராத்திரி விரதம் இருக்ககூடிய நாளில் அதிகாலையில் விழித்தெழுந்து நீராடி முப்பெரும் தேவிகளை வணங்கி வழிபாடுகளில் ஈடுபடல் வேண்டும். விரதம் இருக்கும் காலங்களில் அசுத்தங்கள் இல்லாது சுத்தத்தினை பேணிக் கொள்வதோடு மனதில் தூய எண்ணத்துடன் செயற்படல் வேண்டும்.
நவராத்திரி விரதமானது வெவ்வேறு வகையில் கடைப்படிக்கப்பட்டு வருகின்றது. அதாவது சிலர் ஒன்பது நாட்களிலும் ஒரு வேளை உணவை உண்டு விரதம் இருக்கின்றனர்.
இன்னும் சிலர் காலையில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு மாலையில் பூஜையை முடித்ததன் பின்னர் இரவில் சாப்பிடக்கூடியவர்களாக காணப்படுவர். மகிசாசுரனை அழித்த சக்தியை போற்றும் விதமாக கொண்டாடப்படுகின்ற ஒரு சிறப்புமிக்க விரதமாகவே நவராத்திரி விரதம் காணப்படுகின்றது.
You May Also Like: