நேர்காணல் என்றால் என்ன

nerkanal enral enna

நேர்காணல் என்பது இன்றைய உலகில் தனித்துவமான துறையாக வளர்ந்துள்ளது. இது பேட்டி, செவ்வி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஒருவரின் ஆளுமைத் திறன், தனித்துவம், சிந்தனைகள் முதலானவற்றை நேர்காணல்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். பத்திரிகை சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் இடம்பெறும் நேர்காணல்களின் ஊடாக புதிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது.

இது ஒரு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாக அமையும். மேலும் கேள்வி பதில் முறையிலான உரையாடலாக அமையும். இன்று மின்னஞ்சல்கள் வாயிலாக நேர்காணல்கள் நிகழ்த்தப்பட்டு, மின்னிதழ்களில் வெளியிடப்படுவதையும் காண்கிறோம்.

நேர்காணல் என்றால் என்ன

நேர்காணல் (Interview) என்பது கேள்விகள் கேட்டு பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் ஆகும்.

அதாவது நேர்காணல் என்பது பொதுவாக கேள்விகள் கேட்கும் ஒருவரும் பதில்கள் தருபவர் ஒருவருமாக ஒன்றுக்கு ஒன்று உரையாடலாகவே இருக்கும்.

நேர்காணல் நோக்கங்கள்

இருவரோ சிலரோ பலரோ கூடி உரையாடுவது நேர்காணல் ஆகாது. வெளியிடும் நோக்கத்தில் வினாக்கள் எழுப்ப, அதற்கு தக்க விடைகள் கிடைக்கும் போதே அது நேர்காணல் ஆகும்.

நேர்காண்பவர் நேர்காணல் பற்றிய நோக்கத்தை தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். பொதுவாக நேர்காணலிற்கான நோக்கங்கள் பல உண்டு.

நடப்பினை அறிதல், நிகழ்ச்சியின் விவரங்களை வெளிக்கொண்டு வரல், பிறரது கருத்துக்களை வெளிப்படுத்தல் போன்றவை நேர்காணலின் நோக்கங்களாகும்.

நேர்காணலின் வகைகள்

நேர்காணலில் பல வகைகள் உண்டு. அவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நேர்காணல்கள் பற்றி அறிந்து கொள்வோம். முதலில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நேர்காணலின் சில வகைகள் பற்றி அறிவோம்.

பாரம்பரிய நேர்காணல்

இது நமக்கு மிகவும் பழகி போன ஒரு நேர்காணல் முறையாகும். நாம் எந்த பணிக்கு விண்ணப்பிக்கிறோமோ அந்த நிறுவனத்தை சார்ந்தவர்களில் யாரேனும் ஒருவர் நேர்காணலை நடத்துவார்கள்.

தொலைபேசி அல்லது நிகழ்நிலை நேர்காணல்

நவீன யுகத்தின் புத்தம் புதிய வகையாகும். ஒருவேளை ஒரு நிறுவனம் வெளிநாட்டைச் சேர்ந்ததாக இருந்து அந்த நிறுவனத்தின் ஒரு கிளை மட்டும் நாம் வசிக்கும் இடத்தில் இருந்தால் வெளிநாட்டில் உள்ள முதலாளிகள் நிகழ்நிலை மூலம் நேர்காணலை நிகழ்த்தி தேர்வு செய்து உள்ளூரில் நியமனம் செய்யப்படும் முறையாகும்.

சில நிறுவனங்கள் பேச்சுத் திறனை மட்டுமே எதிர்பார்க்கின்றனர். எனவே அவர்கள் அதே நகரிலோ அலுவலகத்திலோ இருந்தாலும் தொலைபேசி நேர்காணலையே விரும்புகின்றனர். இது மொழி நுட்பம் மற்றும் பேசும் பாணியை அறிவதற்கான நேர்காணல் முறையாக இருக்கலாம்.

மேலும் பிரபல்யமான ஒரு நபரையோ அல்லது பல நபர்களையோ மற்றும் சில நிகழ்வுகளுக்கான காரணங்களையும் நேர்காணல் செய்யும் சில வகைகளை பார்ப்போம்.

ஆளுமை விளக்க நேர்காணல்

பல அபூர்வமான சாதனைகள் செய்தவரையோ, புகழ் பெற்ற ஒருவரையோ ஆளுமைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் நேர்காணல் செய்யும் வகையாகும். முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களின் நேர்காணல் இவ்வகையைச் சார்ந்ததாகும்.

செய்தி நேர்காணல்

இதன் நோக்கம் செய்தியைப் பெறுவது மட்டுமேயாகும். இதற்கு ஏற்கனவே தயாரித்து வைத்த கேள்விகளே கேட்கப்படும். உதாரணமாக ஒருவர் போராட்டம் செய்தால் அதற்கான காரணங்களை அறிந்து வெளியிடுவதற்கான நேர்காணலை கூறலாம்.

நேர்காணல் செய்பவருக்கு இருக்க வேண்டிய பண்புகள்

தான் சந்திக்கவுள்ள ஆளுமை குறித்த புரிதல் உள்ளவராக இருப்பது அவசியம். அவரது துறையில் பரிச்சயம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், முன் கூட்டியே தயாரித்த கேள்விகளுடன் நேர்காணலை முகங்கொள்ள இயலும்.

அதே வேளை நேர்காணப்படும் ஆளுமை வெளிப்படுத்தும் தகவல் – கருத்து என்பன சார்ந்து இடையிட்ட கேள்விகளை சந்தர்ப்பத்துக்கு அமைவாக முன்வைக்கும் ஆற்றல் நேர்காண்பவரிடம் இருப்பது அவசியமாகும்.

முன் வைக்கப்படும் கேள்விகள் தெளிவானவையாக இருக்க வேண்டும். பார்வையாளர்களை சென்றடையும் வகையில் எளிமையான மொழி நடையில் நேர்காணல் இருக்க வேண்டும்.

நேர்காணல் பெறப்படுபவர் தனது தரப்பு விடயங்களைப் போதிய திருப்தியுடன் வெளிப்படுத்த அவகாசம் வழங்க வேண்டும். நாகரிகமான முறையில் கேள்விகளை தொடுக்க வேண்டும்.

மேலும் எத்தகைய ஒளிவுமறைவுகளும் அற்ற தொடர்பாடல் என்பதனை உத்தரவாதப்படுத்தும் வகையில் அவரது கண்ணை நேராக நோக்கியபடி வினாக்களைத் தொடுப்பது அவசியம் அதேவேளை அவர் சொல்பவற்றை அதே போன்ற அக்கறையுடன் செவிமடுப்பதும் அவசியம்.

நேர்காணல் செய்பவருக்கு இருக்க கூடாத பண்புகள்

இடையே புதிய கேள்விகளை முன்வைக்கும் போது அது அவசியமற்ற குறுக்கீடாக அமைய கூடாது.

அதே வேளை தேவையற்ற பேச்சுக்களால் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்தல். நேர்காணல் தருபவரை இழிவு செய்ய கூடாது மற்றும் அவரிற்கு அடிமை போலவும் நடக்க கூடாது. விவாதம் செய்வதை தவிர்த்தல் அவசியம்.

அடிக்கடி இடையில் குறுக்கிடவோ, கூறும் கருத்துக்களை அலட்சியப்படுத்தவோ கூடாது. மேலும் தாமாக நேர்காணலை முடித்துக் கொள்ள கூடாது. விடயப்பரப்புச் சார்ந்த கலைச்சொற்கள் வாசகரைக் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்க கூடாது.

You May Also Like:

மொழிபெயர்ப்பு என்றால் என்ன