நோன்பு பற்றிய கட்டுரை

nonbu katturai in tamil

நோன்பு எனும் விரதத்தை கடைப்பிடிப்பவர்களாக முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். இவர்களுடைய மதமாகிய இஸ்லாம் ஐந்து பிரதான தூண்களைக் கொண்டே நிறுவப்பட்டுள்ளது. அவை இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகள் எனப்படுகின்றன. அவற்றில் ஒன்றாகவே நோன்பு திகழ்கின்றது. இந்த நோன்பினை நோற்கும் மாதமாக ரமலான் மாதம் காணப்படுகின்றது.

நோன்பு பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நோன்பு என்றால் என்ன
  • நோன்பின் நோக்கங்கள்
  • நோன்பின் சிறப்புக்கள்
  • நோன்பு காலத்தில் தடுக்கப்பட்ட செயல்கள்
  • நோன்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
  • முடிவுரை

முன்னுரை

இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு என்பது ரமலான் மாதத்தில் நோக்கப்படும் ஓர் கண்ணியமான செயலாகவே அவர்கள் கருதுகின்றனர்.

“விசுவாசம் கொண்டோரே உங்களுக்கு இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டது போன்று உங்களுக்கும் நோன்பு விதிக்கப்படுகின்றது” என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு அமைய முஸ்லிம்கள் மீது இந்த நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளமையைக் காண முடிகின்றது.

நோன்பு என்றால் என்ன

நோன்பு என்ற வார்த்தை அரபு மொழியில் சவ்ம் என்று அழைக்கப்படுகின்றது. அதாவது தடுத்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருளாகும்.

சூரியன் உதயமாகும் நேரத்தில் இருந்து சூரியன் மறையமாகும் நேரம் வரை எதையும் உண்ணாமலும் பருகாமையிலும் எந்த வித தீய செயல்களில் ஈடுபடாமலும் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு விரதமே நோன்பாகும்.

அதாவது இந்த நோன்பு இஸ்லாமிய 12 மாதங்களில் ஒன்பதாவது மாதம் ஆகிய ரமலானில் 29 அல்லது 30 நாட்கள் தொடர்ந்து நோற்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

நோன்பின் நோக்கங்கள்

நோன்பின் பிரதான நோக்கம் அல்லாஹ் மீதுள்ள இறையச்சத்தினை பலப்படுத்துவதாகும்.

அதாவது அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கின்றேன் என்ற எண்ணத்துடன் நோன்பு நோற்றதிலிருந்து நோன்பு திறக்கும் வரைக்கும் நோன்பை முறிக்கக் கூடிய எந்த வகையான காரியங்களிலும் ஈடுபடாமல் தம்மை பாதுகாத்துக் கொள்வது அல்லாஹ் மீதுள்ள இறையச்சத்தை வெளிப்படுத்துகின்றது.

மேலும் பொறுமை கஷ்டங்களை தாங்கிக் கொள்ளுதல், சிக்கனத்தை பேணுதல், உடல் உள ஆரோக்கியத்தை பெறுதல், மற்றும் ஏழைகளின் பசியை உணர்தல் போன்ற நோக்கங்களும் நோன்பின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

நோன்பின் சிறப்புக்கள்

இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கக் கூடிய ரமலான் மாதம் என்பது மிகவும் சிறப்பான மாதமாகும். அதாவது இந்த மாதத்தில் தான் அல்குர்ஆன் உலகுக்கு அருளப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரமலான் மாதத்தில் விண்ணில் உள்ள நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு, சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன இதனால் நோன்பு நோற்பவர்கள் சொர்க்கம் செல்வதற்கு ஏதுவாக அமைகின்றது.

இறைவன் ஒரு சிறிய செயலுக்கும் பல மடங்கு நன்மைகளை தரக்கூடிய மாதமாகவும் விசேடமான பாவமன்னிப்பு வழங்கக்கூடிய காலமாகவும் இந்த நோன்பு நாட்கள் காணப்படுகின்றன.

நோன்பு காலத்தில் தடுக்கப்பட்ட செயல்கள்

பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு சொல்லுதல், கோள் சொல்லுதல், கேலி செய்தல் மற்றும் வீண் பேச்சுக்களில் ஈடுபடுதல் போன்றவற்றுடன் சம்பந்தமான விடயங்களை இஸ்லாம் நோன்பு காலங்களில் தடை செய்துள்ளது.

மேலும் தீய செயல்களில் ஈடுபடுதல், பிறர் பொருளை அபகரித்தல், சண்டைகளில் ஈடுபடுதல், பொது சொத்துக்களை நாசமாக்குதல், உடலால் பிறருக்கு துன்பம் விளைவித்தல் போன்ற செயல்களையும் இஸ்லாம் இந்த நோன்பு காலத்தில் தடை செய்துள்ளது.

நோன்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

நோன்பு எனும் விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் ஆன்மீக ரீதியிலும், உலகியல் ரீதியிலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் சொர்க்கத்தினை அடைந்து கொள்ளுதல் என்பது ஆன்மீக நன்மையாகும்.

மனதினை கட்டுப்படுத்தி தீய செயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், ஏழைகளின் பசியினை உணர்ந்து கொள்ள முடிதல், பிறரையும் மதிக்க கற்றுக் கொள்ளுதல், மற்றும் உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் நோன்பு நோற்பதனால் நீங்குகின்றன இதனால் உடலியல் ரீதியிலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

முடிவுரை

இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு விரதத்தினை அவர்கள் கை கொள்வதன் மூலம் அவர்களுடைய உடல், உள ஆரோக்கியம் பேணப்படுவதோடு, அவர்களுடைய மனதின் தூய்மையும் பாதுகாக்கின்றது.

இதனால் சமூகத்தில் ஏற்படக்கூடிய வீணான பிரச்சனைகளும், செயல்களும் தடுக்கப்படுகின்றன. எனவே இந்த நோன்பு காலங்களின் சிறப்பினை மேற்கண்டவாறு நாம் புரிந்து கொள்ளலாம்.

You May Also Like:

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு கட்டுரை