பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்

பார்வையற்றோருக்கான எழுத்தை உருவாக்கியவர்

இன்றைய நவீன உலகத்தில் மனிதன் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் சில இயற்கையின் படைப்புக்கள் மற்றும் நடைமுறைகளை நம்மால் மாற்றியமைக்க முடியாது. இரவு, பகல் மாறி மாறி வருவது இதற்கு சிறந்த உதாரணமாகும்.

நமது வாழ்வில் நாம் இந்த மாற்றங்களைக் காண முடிந்தாலும் சிலரது வாழ்வு எப்போதும் இருளால் மட்டும் நிறைந்த உலகமாகவே காணப்படுகின்றது. பார்வையை இழந்தோரது வாழ்வில் வெளிச்சம் என்ற ஒன்றை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

இவ்வாறு பார்வையற்றோரது வாழ்வில் விடியலாய் வந்தவரே லூயி பிரெய்லி ஆவார். இன்றைய இந்த பதிவில் லூயி பிரெய்லி பற்றிய வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம்.

லூயி பிரெய்லின் பிள்ளைப்பருவம்

பிரான்சில் 1809ஆம் ஆண்டு ஜனவரி 4ம் திகதி குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக லூயி பிரெய்ல் பிறந்தார். லூயியின் தந்தை ஒரு தோல் வியாபாரி. தோல்களை வெட்டி தனது கைப்பணியால் கைப்பைகள், பணப்பைகள், காலணிகள் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்வதே தொழிலாகக் கொண்டிருந்தார்.

சிறு வயது முதலே லூயி சுட்டித்தனமாகவும் அனைத்தையும் பயிலுவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பிரெய்லுக்கு மூன்று வயது நிரம்பியிருந்தது. ஒரு சமயம் தந்தை வீட்டில் இல்லாத சமயம் தந்தையின் ஊசியை எடுத்து தோலில் தைத்து பழகி விளையாடிக் கொண்டிருந்த வேளை கண்ணில் ஊசி குற்றி விட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் அந்த ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். சில காலங்கள் கழித்து முதல் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவினால் மற்றைய கண்ணின் பார்வையையும் இழந்தார் லூயி பிரெய்ல்.

நான்கு வயதில் இரு கண்களின் பார்வையை முற்றாக இழந்த போதிலும் கல்வியை கைவிடாமல் படித்தார். அதுமட்டுமல்லாது Chello, organ போன்ற இசைக்கருவிகளை சிறப்பாக வாசிக்கப் பழகியிருந்தார்.

கண்பார்வை இழந்தும் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் பள்ளிக்குச் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக லூயியால் அங்கு தொடர்ச்சியாக கல்வி கற்க முடியாமல் போனது.

லூயியின் “பிரெய்ல்” எழுத்து முறை

லூயி பிரெய்லுக்கு பத்து வயது நிரம்பிய போது அவரது பெற்றோர் அவரை பாரிஸில் காணப்பட்ட பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தனர். அங்கு வாசிக்க மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டதே தவிர எழுத கற்றுக் கொடுக்கப்படவில்லை.

லூயியால் அந்த கல்வி முறை இலகுவாகக் கற்க முடியாமல் சிரமப்பட்டார். இதனால் தாம் கற்பதற்கு இலகுவான எழுத்துமுறை ஒன்றைத் தாமே சுயமாக உருவாக்க வேண்டும் என சிந்திக்க தொடங்கினார்.

அந்த சமயத்தில் Charles barbier என்ற இராணுவ வீரர் இவர் கற்ற பள்ளிக்கு விஜயம் செய்திருந்தார். இவர் இரவு வேளைகளில் வாயால் பேசாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக 12 புள்ளிகளைக் கொண்டு எழுத்து முறை ஒன்றை உருவாக்கி இருந்தார்.

ஆனால் அந்த முறை சிரமமானது என இராணுவத்துறை அதை ஏற்றுக்கொள்ளாமையால் பார்வை அற்றோருக்காவது இந்த முறை பயன்பட வேண்டும் என எண்ணி அதனைப் பற்றி லூயியின் பள்ளியில் விளக்கியிருந்தார்.

பிரெய்லுக்கு இவரது எழுத்து முறை மிகவும் பிடித்துப்போய் இந்த எழுத்து முறையை மென்மேலும் ஆராய்ந்து இறுதியாக ஆறு புள்ளிகளால் ஆன எழுத்து எழுத்து முறையை தனது 15ஆவது வயதில் கண்டுபிடித்தார்.

அந்த எழுத்து முறை ‘பிரெய்ல் முறை’ என்று என அவரது பெயராலேயே அழைக்கப்பட்டது. இதில் 64 முறைகள் காணப்பட்டன. தொடர்ச்சியான ஆய்வின் பின்னர் மேலும் கணிதத்திற்கும் இசைக்கும் எழுத்து வடிவங்களை கண்டுபிடித்தார். 1829ல் பிரெய்ல் தாம் கண்டுபிடித்த எழுத்து முறையை விளக்கி புத்தகம் ஒன்றையும் வெளியிட்டார்.

ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்த சமுதாயம் பின்னாளில் பார்வையற்றோரது நலனைக் கருத்தில் கொண்டு ‘பிரெய்ல்’ முறையை புழக்கத்திற்கு கொண்டு வந்தது. பிரெய்ல் ஆசிரியராகி தாம் கற்ற பள்ளியிலேயே பணி புரிந்தார்.

திடீரென காச நோய் ஏற்பட்டு 1852ல் தனது 43வது வயதில் உயிர் நீத்தார். லூயி உயிரோடு இருக்கும் போது கண்டுபிடித்த பார்வையற்றோருக்கான ‘பிரெய்ல்’ எழுத்து முறை அவர் இறந்து 100 ஆண்டுகளின் பின்னரே பிரெஞ்சு அரசாங்கத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டு 1952ல் லூயியின் உடல் புதைத்த இடத்தில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு தேசிய வீரர்களுக்காக கட்டப்பட்ட ‘Pantheon’ அரங்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இரு கண்களை இழந்தும் விடா முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து தன்னைப் போன்ற பார்வை அற்றோரும் கல்வி கற்க வேண்டும் என்று தூர நோக்கில் சிந்தித்து பிரெய்ல் எழுத்து முறையைக் கண்டுபிடித்த லூயி பிரெய்ல் போற்றத்தக்கவரே.

You May Also Like:

வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை

அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்