புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

இன்றைய உலகில் பலரிடம் கெட்ட பழக்க வழக்கங்களில் ஒன்று புகைப்பிடித்தல். புகைப் பிடிப்பதால் பல பிரச்சனைகள் உடலுக்கும் உளவியல் ரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்றைய இந்த பதிவில் புகைப் பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்ப்போம்.

புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்

1. ஆயுட்காலம் குறைதல்

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் ஆயுட்காலம் குறைவடையும். குறிப்பாக ஒரு நிமிடம் புகைப் பிடிப்பதால் ஆயுட்காலத்தில் 14 நிமிடங்கள் குறையும். இவ்வாறு எப்பொழுதும் புகைப் பிடிப்பதனால் பத்து அல்லது பதினொரு ஆண்டுகள் ஆயுட் காலத்தில் இழக்க வேண்டி ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் புகை பிடிப்பதால் பாதிப்புற்று நோயுற்று உயிரிழப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2. உளவியல் ரீதியிலான பாதிப்பு ஏற்படும்

குறிப்பாக புகைப்பிடிப்பதால் உடல் ஆரோக்கியம் தவிர உளவியல் ரீதியிலான பாதிப்புக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

அதாவது மன அழுத்தம், மனத்தளர்ச்சி, தன்னம்பிக்கை இன்மை, தாழ்வு மனப்பான்மை போன்ற பல தரப்பட்ட உளவியல் பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உள ஆரோக்கியம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

3. ஒருவரைப் பார்த்து இன்னொருவர் பழகுதல்

புகைப்பிடிக்கும் பழக்கம் பெற்றோர்களுக்கு காணப்படுமாயின் அவர்களைப் பார்த்து பார்த்து பிள்ளைகளும் நாளடைவில் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகின்றனர். ஏனெனில் பல குழந்தைகள் இங்கு பெற்றோரையே தமது முன்மாதிரியாகக் கொண்டு வளர்கின்றனர்.

4. சில மருந்துகள் உடலில் ஒத்துழைக்காது

புகையிலையில் அதிகளவில் நிகோடின் எனப்படும் இரசாயனப் பதார்த்தம் காணப்படுகின்றது. தினமும் புகைப் பிடிப்பதால் உடலில் நிகோடினின் அளவு அதிகரிக்கும். இந்த இரசாயன பதார்த்தம் அதிகளவில் சேர்வதால் நாம் வேறு நோய்களுக்காக மருந்துகள் உட்கொண்டாலும் அவை செயற்படாமல் போய்விடும்.

5. புற்று நோய் ஏற்படும்

புகையிலையில் நிகோடின் தவிர பல அதாவது நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் காணப்படுவதால் அவற்றில் உள்ள 69 வகையான இரசாயனப் பதார்த்தங்கள் புற்று நோயை ஏற்படுத்த வல்லவை.

குறிப்பாக நுரையீரல், வாய், தொண்டை, கணையம், கழுத்து, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, போன்ற உடல் பாகங்களில் புற்று நோயை ஏற்படுத்த கூடியது.

6. ஆண்மைக் குறைவு

புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு ஆண் உறுப்பிற்கு செல்லும் இரத்தோட்டம் குறைவடையும். இவை பின்னாளில் அவ் உறுப்பில் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. இது ஆண்மைக் குறைவு உருவாக காரணமாகின்றன.

7. மாரடைப்பு மற்றும் இருதய நோய்

புகைப் பிடிப்பதால் உலகமெங்கும் உள்ள சனத்தொகையில் 60% -70% ற்கும் மேற்பட்டோர் மாரடைப்பு நோய் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.

குருதியில் காணப்படுகின்ற ட்ரைகிளிசரைட் எனும் கொழுப்புக்களை தூண்டுவதால் குருதியில் உள்ள நல்ல கொழுப்புக்களைக் குறைந்து குருதியின் ஒட்டும் தன்மை அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு, இருதய நோய், குருதிக் குழல் நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

8. முதுமைத் தோற்றம்

தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்களது உடல் சோர்வுற்று தளர்வுற்று தோல் சுருக்கம் அடைந்து காணப்படும். இதனால் இவர்கள் விரைவாக இளமைத் தோற்றத்தை இழந்து வயதானவர் போன்ற முதுமைத் தோற்றத்தை அடைகின்றனர்.

9. மூளை வளர்ச்சி குறையும்

பள்ளிப் பருவ மாணவர்களாயின் அவர்கள் தொடர்ச்சியாக புகைப்பிடித்து வர அவர்களது மூளையின் நினைவுத்திறன், கவனிப்பு திறன், படிக்கும் திறன், சுய கட்டுப்பாடு போன்ற ஆற்றல்கள் மங்கி மூளையின் செயற்பாட்டு திறன் குறைகின்றது.

10. பொருளாதார பிரச்சனை

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அந்த தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். எனவே இதற்காக அதிகளவு பணத்தை செலவு செய்கின்றனர். இதனால் தங்களுடைய சேமிப்பு, உழைப்பு எல்லாவற்றையும் வீணாக்குகின்றனர். இதனால் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள் அவர்களது குடும்பத்தில் கட்டாயம் உருவாகும்.

புகைப் பிடிப்பதால் மேலே குறிப்பிட்டது போன்ற பல தீமைகள் ஏற்படுகின்றன. எனவே இந்த தீய பழக்கத்தில் இருந்து வெளியே வருதல் கட்டாயமாகும்.

You May Also Like:

சுய ஒழுக்கம் என்றால் என்ன

சப்ஜா விதை நன்மைகள்