போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை

pothai porul katturai in tamil

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்பார்கள். இன்றைய இளைஞர் சமுதாயமும், இளம் மாணவ சமுதாயமும் சமூக சீர்கேடுகளுக்கு உள்ளானால் நாளைய எதிர்காலம் உலகிற்கே கேள்விக்குறி தான்.

ஏனெனில் தற்போது மாணவர்களை வழிகெடுக்க பலவிதங்களில் நாகரீகம் மாறியுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த போதைப்பொருள் ஆகும்.

போதைப்பொருளும் மாணவர்களும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • போதைப்பொருள்
  • போதைப்பொருட்களின் செயல்பாடு
  • போதைப் பழக்கம் ஏற்பட காரணம்
  • போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புகள்
  • கட்டுப்படுத்தும் வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

சமூகத்திற்கும், தனிப்பட்ட மனித ஆரோக்கியத்திற்கும் சீர்குலைவை ஏற்படுத்தக்கூடிய விடயங்களுள் இந்த போதைப் பழக்கமும் ஒன்று ஆகும். வயது மற்றும் பாலின வித்தியாசமின்றி இது சமூகத்திற்கிடையே பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.

அதிக போதைப்பொருளை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும். இதனை சீர்படுத்த பல சட்ட விதிமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதனை முற்றாக ஒழிப்பது மிகப்பெரும் சவாலாக தான் உள்ளது.

போதைப்பொருள்

ஒரு குறித்த நோயை குணப்படுத்தவோ அல்லது கண்டறியவோ அல்லது வருமுன் தடுக்கவோ பயன்படுத்தப்படும், இரசாயன பொருள் மருந்து எனப்படுகிறது.

இம்மருந்தினை வைத்திய ஆலோசனையின்றி பயன்படுத்தும் போதும், தகுந்த பாவனை முறையின்றி, தவறான நோக்கத்துடனோ அல்லது அறியாமலோ அளவுக்கு மீறி, பாவனை காலப்பகுதியையும் வைத்திய பரிந்துரையையும் கவனத்தில் கொள்ளாமல் பயன்படுத்தும் போதும், நோயே இல்லாது வெறுமனே சந்தோச துக்கங்களுக்காக பயன்படுத்தும் போதும் இம்மருந்தானது துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது.

அதுவே போதைப் பொருளாகவும் மாறுகிறது. ஆகவே போதைப் பொருளாக பயன்படுத்தப்படும் எல்லா மருந்துகளுமே ஏதோ ஒரு வகையில் இரசாயனங்களாகவே இருக்கும்.

போதைப்பொருட்களின் செயல்பாடு

பயங்கரமான இரசாயனமாக இருக்கக்கூடிய போதைப்பொருட்கள் எந்த மருத்துவ பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவதில்லை. எனினும் உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக மிக அதிகளவில் அடிமைப்படுத்தக் கூடியதாக உள்ளது.

சிலது மருந்தாக பயன்படுத்தப்பட்டாலும் அதைவிட அதிகமாக துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது. மிக அதிக அளவில் உடலியல், உளவியல் ரீதியாக அடிமைப்படுத்த கூடியதாகவும் உள்ளது.

சாதாரண அளவிலும் நடுத்தர அளவிலும் அடிமைப்படுத்த கூடிய மருந்துகளும் உண்டு. இன்னும் சிலது, வலி நிவாரணிக்கான மருந்தாக இருக்கிறது. இதில் அடிமைப்படுத்தக் கூடிய தன்மை மிக மிக குறைவு அல்லது இல்லை.

போதைப் பழக்கம் ஏற்பட காரணம்

போதைப் பொருளை பயன்படுத்தும் போது அது தீங்கினை விளைவிக்க கூடியது என்று தெரிந்தும் அதனையே தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். காரணம் இது ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது.

போதையில் ஆழ்ந்துள்ள போது தனக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியாது. அதனை தடுக்கவும் முடியாது. ஏனெனில் அதற்கு அடிமையாக்கப்படுகிறது.

சக்தி அதிகரிப்பது போன்று உணர்த்தும். ஆரம்பத்தில் புத்துணர்ச்சி உடையதாக தோன்றும். உடலில் நோய்கள் அதிகரிக்கும் போதும் ஆரோக்கியமாக இருப்பது போல் உணர்த்தும். இதனால் சிறுவர்களும் மாணவர்களும் கூட போதைக்கு அடிமைப்படுகிறார்கள்.

போதைப்பொருளினால் ஏற்படும் பாதிப்புகள்

அடிமைப்படுத்தக்கூடிய இந்த போதைப்பொருட்கள், உடம்பின் மத்திய நரம்புத் தொகுதியை பாதிப்படையச் செய்கிறது. இது மனிதனின் நடத்தையில் மாற்றத்தினை கொண்டு வரும், அல்லது உளவியலில் மாற்றத்தை கொண்டு வரும்.

அதாவது உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சிலது வலிகளை உணராமல் செய்யும். அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும். தூண்டலுக்கு பொருந்தாத துலங்களையும், தூண்டலே இல்லாமல் துலங்களையும் காட்டக்கூடிய தன்மையை உருவாக்கும்.

இரத்த அழுத்தம் கூடும். கோபம் கூடும். சந்தோஷபடாத நிலை ஏற்படலாம். விரும்பியோ விரும்பாமலோ குறித்த போதைப்பொருள் தேவை எனும் நிலை உருவாகலாம்.

மேலும் உடல் சூடு அதிகரிக்கலாம். இருதயம் சார்ந்த நோய்கள் ஏற்படலாம். ஒரு செயலை திரும்ப திரும்ப செய்யும் நிலை. மயக்க நிலை ஏற்படலாம்.

இதனால் ஆரம்பத்தில் ஆர்வம் தூண்டப்பட்டு போதைக்கு அடிமையான பின்னர் அதனை விட்டு வெளிவர முடியாமல், உடல் சோர்வையும் நோயையும் கொண்டு வந்து மாணவர்களின் கல்வியில் மந்த நிலையை ஏற்படுத்துகிறது. அத்தோடு போதைக்கு அடிமையான நிலையில் எதை செய்கிறோம் என்று அறியாமல் பல சமூக சீர்கேடுகளுக்குள்ளாகின்றனர்.

கட்டுப்படுத்தும் வழிகள்

மனித சூழலும் குடும்பச் சூழலும் நண்பர்களும் இன்னும் சில பிரச்சினைகளாலும் இந்த போதைக்கு பழக்கப்படலாம். எனவே போதையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அந்த சூழலையும் மனநிலையும் மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

அதேசமயம் போதைவஸ்து பாவனை இல்லாதவர்களும் இனிமேல் அதனை பழகாமல் இருக்க, அதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடத்தில் ஏனையவரிடத்திலும் ஏற்படுத்துதல் அவசியமாகும்.

முடிவுரை

இன்றைய மாணவ தலைமுறையினை சீர்கெடுக்கும் இந்த போதைப்பொருட்களை பற்றிய ஆர்வத்தை குறைத்து, மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மன அழுத்தத்தையும் சோர்வையும் கொடுக்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் வெற்றிகரமாக முகங்கொடுக்க வழி செய்வதோடு தவறான வழியில் இட்டுசெல்லும் சூழலிடமிருந்தும் நபர்களிடம் இருந்தும் விலகி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி போதைக்கு அடிமையாதலிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.

போதைப் பொருளை ஒழிப்போம். மாணவ சமுதாயத்தை காப்போம். எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்.

You May Also Like:

மாணவர் ஒழுக்கம் கட்டுரை

போதை பொருள் விழிப்புணர்வு பேச்சு போட்டி