முத்தலாக் என்றால் என்ன

முத்தலாக்

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனிநபர் சட்டம் மூலமாகவே ஆளப்படுகின்றார்கள். திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்டவை அதில் அடங்கும்.

முஸ்லீம்களைப் பொறுத்த வரையில் ஷரியத் சட்டங்களே தனிநபர் சட்டமாக உள்ளது. அதில் விவாகரத்து என்பது ஆண்களுக்கான உரிமையாக “தலாக்” சொல்வதாகவும், பெண்கள் “குலா” சொல்லியும் விவாகரத்துச் செய்யலாம்.

முத்தலாக் என்றால் என்ன

இந்திய இஸ்லாமிய ஆண்கள் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கான வழிமுறை தலாக் ஆகும்.

இதன்படி ஓர் இஸ்லாமிய ஆண் தனது மனைவியிடம் “தலாக்” (விவாகரத்து என்பதற்கான அரபிச் சொல்) எனும் அரேபிய வார்த்தையை மூன்று முறை தெரிவிப்பதின் மூலம் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றவராகிவிடுவார் இதுவே முத்தலாக் எனப்படுகின்றது.

முத்தலாக் தடைச் சட்டம்

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றமானது உடனடி முத்தலாக் முறையை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்த நடைமுறையைத் தடை செய்யுமாறு அரசைக் கேட்டுக் கொண்டது.

அதன்படி முத்தலாக் 2019, ஜுலை 25-ம் தேதி இந்திய மக்களவையிலும் 30-ம் தேதி மாநிலங்களவையிலும் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உடனடி முத்தலா மூலம் பல முஸ்லிம் பெண்கள் திருமண உறவை இழந்து முழுமையாக கணவனால் பழிவாங்கபட்டு வாழ்கிறார்கள்.

ஆனால் புதிய சட்டத்தின்படி முஸ்லீம் பெண்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படுகின்றது.

மேலும் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்துச் செய்ய முயன்றால் அந்தக் கணவன் குற்றவாளியாகக் கருதப்படுவார். அதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

கணவன் சிறைக்கு செல்ல நேரிட்டால், மனைவிக்கும் குழந்தைகளுக்குமான ஜீவனாம்சத்தை அளிக்க உத்தரவிடலாம் என்று கூறுகிறது. இதுதான் முத்தலாக் சட்டத்தின் உள்ளடக்கமாகும். இது, ஒரு மாத இடைவெளியில் “தலாக்” சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையைப் பாதிக்காது.

இச்சட்டத்தின் மூலம் மின்னஞ்சல் வழியாகவோ, குறுஞ்செய்தி வழியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ தலாக் தெரிவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்னோ அல்லது அவரது இரத்த ரீதியான உறவினரோ இது தொடர்பாகப் புகார் அளிக்கலாம்.

ஜாமீனில் வெளிவர இயலாத வகையிலும் வழக்குப் பதிவு செய் முடியும். அதையும் மீறி முத்தலாக் கூறிய கணவன் வெளியே வர வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தின் அடிப்படையில் மட்டுமே பிணையில் விடுவிக்க இயலும்.

தலாக் பற்றி குரான் என்ன சொல்வது

ஒரே சந்திப்பில் மூன்று முறை தலாக் சொல்வது குர்-ஆனில் உள்ள விதிகளுக்கு எதிரானது ஆகும்.

“தலாக்-அல்-அசான்” மூலம் ஓர் ஆண் தனது மனைவியை விவாகரத்து செய்வதானால், ஒரு முறை தலாக் சொல்வதற்கும் மறுமுறை சொல்வதற்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இது அவர்களின் மன மாற்றத்திற்கு வழங்கப்படும் கால அவகாசம் ஆகும்.

மேலும் தலாக் சொல்லும் போது இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று தலாக் சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். மற்றையது இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

இதில் உடன்பாடு எட்டாவிட்டால் மட்டுமே தலாக் செய்யும் முடிவுக்கு வரவேண்டும். அவ்வாறு தலாக் சொல்லும் போது சாட்சிகள் இருக்க வேண்டும் என்கின்றது.

You May Also Like:

அதிகாலை சீக்கிரம் எழ வழிகள்

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி