ஒரு நாட்டினை பலவீனப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவே வறுமை காணப்படுகின்றது. இந்த வறுமையினால் பிடிக்கப்பட்ட மக்களையும், நாட்டினையும் மீள கட்டி எழுப்புவது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.
எனவே ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் அந்நாட்டினை வறுமை கோட்டுக்கு வராத வகையில் தற்பாதுகாப்பு செய்வதோடு, நாட்டில் வறுமை நிலை தென்படுமே ஆனால் அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான முன் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருத்தல் அவசியமானதாகும். ஒரு நாட்டின் சுபிட்சமான செயற்பாடுகளுக்கு, வறுமைக்கு ஓர் வணக்கம் கூறி விடுதலே நன்றானதாகும்.
வறுமைக்கு ஓர் வணக்கம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வறுமை என்றால் என்ன
- வறுமை ஏற்படுவதற்கான காரணங்கள்
- வறுமை ஒழிப்பு முயற்சிகள்
- இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்கள்
- முடிவுரை
முன்னுரை
உலக வாழ் அனைத்து மக்களாலும் விரும்பத்தகாத ஒன்றாகவே வறுமை காணப்படுகின்றது. அதாவது இந்த வறுமை உலகில் வளர்ந்த நாடுகளிலும் பார்க்க, வளர்ந்து வரக்கூடிய நாடுகளிலே அதிகமான பாதிப்பை செலுத்துகின்றன.
இந்தியா, இலங்கை, மாலைதீவு போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் தற்காலங்களில் அதிகமான வறுமை நிலையினைக் காணலாம். இக்கட்டுரையில் வறுமை பற்றிய தெளிவுகளை அறிந்து கொள்வோம்.
வறுமை என்றால் என்ன
உலகில் வாழக்கூடிய ஒரு தனியன் தன்னுடைய வாழ்க்கை தரத்தினை தீர்மானிக்க கூடிய காரணிகளினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை அல்லது இழந்த நிலையையே வறுமை என குறிப்பிட முடியும்.
அதாவது இங்கு வாழ்க்கை தரத்தினை தீர்மானிக்கும் காரணிகளாக உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற காரணிகளினை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
எனவே இவ்வாறான காரணிகளை ஒரு மனிதன் இழப்பானே ஆயின் அங்கு அவன் வறுமைக்கு உள்ளாக்கப்படுகின்றான் என குறிப்பிடலாம்.
வறுமை ஏற்படுவதற்கான காரணங்கள்
உலகில் வளர்ந்து வர கூடிய நாடுகளில் வறுமை என்பது மிக முக்கிய பிரச்சினையாக அடையாளம் காணப்படுகின்றது.
அந்த வகையில் இவ்வாறான நாடுகளில் காணப்படக்கூடிய சாதிக் கட்டமைப்பு, காலனித்துவத்தின் ஆதிக்கம், மக்கள் தொகை பெருக்கம், குறைந்தளவான எழுத்தறிவு வீதம், கல்வி அறிவின்மை, சுயதொழில் ஊக்குவிப்புகள் இல்லாமை, பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், லஞ்சம், ஊழல் அதிகரிப்பு, சமூகக் கட்டமைப்பு, அரசாங்கங்களின் பலவீனம், மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளால் அனைவரும் வெறுக்கக் கூடிய இந்த வறுமை நிலை ஏற்படுகின்றது.
வறுமை ஒழிப்பு முயற்சிகள்
சமூகத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் வறுமையை ஒழிப்பதற்கான தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள முடியும்.
அந்த வகையில் முதற்கட்டமாக தனியன்கள், ஊடகங்கள் என்பன வறுமை தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை ஆற்ற வேண்டும். வறுமையில் வாழக்கூடியவர்களுக்கு பணம், பொருள், உணவு மூலமாக தம்மால் முடிந்த உதவிகளை செய்தல், மற்றும் வறுமையால் கல்வி பெற முடியாத குழந்தைகளுக்கான செலவுகளை தங்களால் முடியுமான அளவு பொறுப்பேற்றல் வேண்டும்.
இன்னும் உலகளாவிய ரீதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அடிப்படை சுகாதார வசதிகளினை வழங்குதல், வறுமை ஒழிப்பு திட்டங்களை அமுலாக்குதல் போன்ற வறுமையை ஒழிப்பு செயற்பாடுகளினை அரசாங்கம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
இந்தியாவில் வறுமை ஒழிப்பு திட்டங்கள்
வறுமையால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களின் நலனுக்காக இந்திய அரசாங்கம் அன்று முதல் இன்று வரை பல்வேறு வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டங்களை அமுல்படுத்திய வண்ணமே உள்ளது.
அந்த வகையில் கல்வி மருத்துவ குடும்ப நலத் திட்டம், தேசிய கிராம வேலை வாய்ப்பு திட்டம், இந்திரா காந்தியின் வறுமை ஒழிப்பு திட்டம், நேரு வேலைவாய்ப்பு திட்டம்-1982, சுய வேலைவாய்ப்பு திட்டம்-1999, மகளிர் குழந்தைகள் மேம்பாடு திட்டம், இளைஞர்களுக்கான பயிற்சி திட்டம், மில்லியன் கிணறுத் திட்டம்,
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம், அந்நியோதயா திட்டம், வேலைக்கு கூலி திட்டம், ஜவகர் ரோஜ்கர் திட்டம் மற்றும் மற்றும் தற்காலங்களில் மாநிலங்களினால் வழங்கப்படக் கூடிய தேசிய சமூக உதவித் திட்டம் போன்ற பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.
முடிவுரை
உலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனதும் நிம்மதியான வாழ்க்கைக்கு வறுமை ஒழிப்பு என்பது அவசியமான ஒன்றாகும்.
அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் இணைந்து தங்களுடைய நாட்டில் காணப்படக்கூடிய வறுமைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பதே சிறந்ததொரு எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.
எனவே வறுமை ஒழிப்பு என்பது எம் அனைவரதும் கடமை, என்பதை உணர்ந்து நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.
You May Also Like: