விழுமியங்கள் என்றால் என்ன

vizhumiyangal in tamil

மனித வாழ்வை மேம்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படும் பெறுமதிமிக்க வாழ்க்கைப் பண்புகள் விழுமியங்கள் ஆகும். சமூகத்தில் மதிப்புமிக்கவையாக விழுமியங்கள் காணப்படுகின்றன.

விழுமியங்கள் மேன்மையானவை, உன்னதமானவை அவை உயிரிலும் மேலானவை. இவையே இன்றைய சமூகத்திற்கு அவசியமானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன.

விழுமியத்தை ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் பயன்படுத்துவதே இன்றியமையாததாகும். இரக்கம், நீதி, நேர்மை, நம்பிக்கை, எண்ணம், பக்தி போன்றவற்றுடன் விழுமியங்கள் தொடர்புபடுகின்றன.

விழுமியம் தனிநபர், சமூகம், வாழ்க்கை போன்றவற்றை அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியதாகும். விழுமியங்கள் பொதுவாக தனிமனித விழுமியங்கள், பண்பாட்டு விழுமியங்கள் என இரண்டு வகைப்படுகின்றது.

விழுமியங்கள் என்றால் என்ன

விழுமியம் என்ற சொல்லுக்கான பொருளாக மதிப்பு எனப் பரவலாக அறியப்படுகின்றது. எனினும், மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தில் அமைந்ததே விழுமியம் எனலாம். இது ஆங்கிலத்தில் Value என அழைக்கப்படுகின்றது.

சமூகவியலாளர்கள் விழுமியங்கள் பற்றி கூறும் போது உள்ளார்ந்த விருப்பத்தின் அர்த்தங்களைக் கொண்ட பொதுமைப்படுத்தப்பட்ட முடிவு என்று வரையறை செய்கின்றனர்.

பொதுவாக விழுமியம் என்பது எது நல்லது கெட்டது மற்றும் விரும்பத்தக்கது அல்லது, விரும்பத்தகாதது என்பதைப் பற்றிய ஒரு கலாச்சாரத்தின் உறுப்பினர்களால் பகிர்ந்து கொள்ளப்படும் முக்கியமான மற்றும் நீடித்த நம்பிக்கைகள் அல்லது இலட்சியங்கள் விழுமியங்கள் எனலாம்.

மேலும் விழுமியம் என்பது பொதுமக்கள் வாழ்ந்து அறிந்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செல்லும் நெறிகள் குறித்த நம்பிக்கைகள் விழுமியங்கள் எனலாம்.

தனிமனித விழுமியம்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனிமனித விழுமியம் அவசியமானதாகும். தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் சத்தியம், அகிம்சை, அன்பு, அறம், தைரியம், நேர்மை, சமாதானம், ஒழுக்கம் போன்ற விழுமியங்கள் இருத்தல் அவசியமானதாகும்.

இதில் சத்தியம் எல்லா விழுமியங்களுக்கும் அடிப்படையானது. ஆதாரமானது. இது மிகவும் உயர்ந்த விழுமியமாகப் பேசப்படுகின்றது. மனிதர்கள் தர்ம வழியில் செல்லுமாறு தூண்டுவது அஹிம்சை எனும் விழுமியமேயாகும்.

இவ்வுலகில் சிறந்த மனித விழுமியங்களைப் பேணி, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்கின்றவர்கள் யாவரும் வாழ்வில் சிறந்து விளங்குவர்.

நல்ல விழுமியங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவதால், மனித வாழ்க்கைத்தரம் சீரும் செம்மையும் பெறுகின்றது.

மனித விழுமிய உணர்வு மனிதனின் சிந்தையில் ஏற்பட வேண்டும். அதற்கு மனித சிந்தை தூய்மையானதாக விளங்க வேண்டும். தூய சிந்தையிலேயே விழுமிய உணர்வுகள் தோன்ற முடியும். மனிதனுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் மனித விழுமியங்கள் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் எவற்றை இழக்கினும், உயர்ந்த தனிமனித விழுமியங்களை இழக்கலாகாது. ஆதலால் நாம் மனிதர்களே என்று அடையாளம் காட்டும் தனிமனித விழுமியங்களை நாம் போற்றிக் காப்பது மிகமிக அவசியமானதாகும்.

மனிதன் பெறுமதிமிக்கவனாக இருப்பதற்குரிய காரணம் மனிதத் தன்மைகளோடு, மனித விழுமியங்களைப் பேணி மனிதனாக வாழக்கூடிய அதியற்புத ஆற்றல் அவனிடம் இயல்பாகவே காணக்கிடக்கின்றமைதான் என்பதனை நாம் உணர வேண்டும்.

பண்பாட்டு விழுமியங்கள்

பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுவது ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் ஆகும். இவையே மனிதர்கள் இணைந்து வாழ்வதற்கு இன்றியமையாதவையாகும்.

தமிழர்களுடைய விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றின் ஊடாக வெளிப்படுகின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், பழமொழிகள் போன்ற ஆக்கங்களில் விழுமியங்களை நாம் காணக்கூடிதாக உள்ளது. இவையெல்லாம் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றது.

You May Also Like:

படபடப்பு குறைய வழிகள்

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி