அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். வீரத்தின் அடித்தளமாக திகழ்கின்ற வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றியே இன்று நான் பேசப் போகின்றேன்.
பிறப்பும் ஆரம்ப கால வாழ்க்கையும்
வீரம் என்றாலே எம் கண்முன் தோன்றும் ஒருவராகவே வீரபாண்டிய கட்டபொம்மன் காணப்படுகின்றார். இவர் 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.
இவரது பெற்றோர் ஜெகவீர பாண்டியன் மற்றும் ஆறுமுகத்தம்மாள் ஆவார். இவர் சிறு வயதிலேயே வில், வாள், அம்பு எய்தல், யானையேற்றம் போன்றவற்றில் சிறந்த பயிற்சி பெற்றவராகவே காணப்பட்டார்.
இவர் கட்டபொம்மா என்ற வம்சா வழியில் பிறந்தவராவார். தனது 18 வயதில் ஜக்கம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆங்கிலேயரை துணிகரமாக எதிர்த்த வீரர்
இவர் தான் ஆட்சியில் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆரம்பித்தார். தனது நாட்டில் அந்நியர்களாக வந்த ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பது வீரபாண்டிய கட்டபொம்மனிற்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக ஆங்கிலேயர்களிடம் வரி செலுத்தாது அவர்களை எதிர்த்து நின்றார்.
ஆங்கிலேயரின் சார்பில் வரியினை வசூலிப்பதற்கு 1797 ஆம் ஆண்டு ஆங்கிலேய தளபதியான ஆலன் துரை பெரும் படையுடன் போரிட தயாராகி வந்தான். ஆனால் இவரால் வீரபாண்டிய கட்டபொம்மனை தோற்க முடியவில்லை.
பின்னர் ஆங்கிலேயரில் ஒருவரான ஜாக்ஸன் துறை என்பவர் வேண்டுமென்றே வீரபாண்டியனை சந்திக்க வேண்டும் எனக் கூறினார். இதனை அறியாத கட்டபொம்மன் அவர் அழைப்பு விடுத்த இடத்திற்கு சென்றார்.
ஆனால் அங்கு ஜாக்ஸனை இவரால் சந்திக்க முடியவில்லை. இவ்வாறு வேண்டுமென்றே அழைக்கழித்ததோடு இறுதியில் ராமநாதபுரம் என்ற இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்தார்.
ஆனால் வீரத்தில் சிறந்து விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் இவர்களை எதிர்த்து போரிட்டு பாஞ்சாலக்குறிச்சிக்கு திரும்பினார். பல ஆங்கிலேயர்களை தனது வீரத்தால் வீழ்த்திய மாவீரனே வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவார்.
போரும் சிறைப் பிடிப்பும்
கட்டபொம்மனை வீழ்த்தியதன் பின்னரே நாம் சிறப்பாக வரிகளை வசூலிக்க முடியும் என கருதிய ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்பொம்மனிற்கு எதிராக பெரும் போர் தொடுக்க தயாரானார்கள்.
இதனை அறிந்து கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் சிறிதும் பின் வாங்காது தனது படைகளுடன் போரிற்கு தயாரானார். இவ்வாறு இரு ஆங்கிலேயர்களுக்கும் வீரபாண்டிய கட்பொம்மனிற்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்களே வெற்றி பெற்றதோடு ஆங்கிலேயர்களால் கைதும் செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பின்னரும் தான் ஒரு போதும் பின் வாங்கமாட்டேன் என்ற வீர எண்ணம் அவர் மனதில் இருந்தது. ஆங்கிலேயர்கள் இவரை சிறையிலடைத்ததோடு மட்டுமல்லாது இறுதியில் தூக்கிலிட்டார்கள்.
இவ்வாறு தூக்கில் இடும் போது தனது வீரத்தினை விடாது துணிகரமாக தனது மரணத்தினை எய்தினார். இவர் 1799ம் ஆண்டு அக்டோபர் 19ம் திகதி தூக்கிலிடப்பட்டு மரணிக்கப்பட்டார்.
இன்றைய காலப்பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறானது திரைப்படமாகவும் கதைகளாகவும் எம்மை வலம் வந்த வண்ணமே காணப்படுகின்றன.
ஆங்கிலேயர்களை துணிகரமாக எதிர்த்த வீரராக இன்றும் எம் மனதில் நிலைநிற்கக் கூடியவராகவே இவர் காணப்படுகின்றார்.
தமிழக அரசு வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக கயத்தார் எனும் இடத்தில் ஒரு நினைவகம் அமைத்துள்ளதோடு இவரது வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிலையினையும் நினைவுச் சின்னமாக வைத்துள்ளனர். இவரது நினைவாக வீரபாண்டிய கட்டபொம்மன் கலாச்சார சங்கம் என்ற ஓர் அமைப்பும் இன்று வரை தொழிற்பட்டு வருகின்றது.
தன் நாட்டு மண்ணின் பெருமையை காப்பதற்காக தனது உயிரையும் தியாகம் செய்ய துணிந்த வீரனே வீரபாண்டிய கட்டபொம்மன்.
You May Also Like: