தமிழ்நாட்டின் முதலமைச்சராக விளங்கிய கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நடைமுறைப்படுத்திய அனைத்து திட்டங்களுமே தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையிலேயே தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் என சிறப்பு பெயர் பெற்றவராக இவர் விளங்குகின்றார்.
தொலைநோக்கு சிந்தனையாளர் கலைஞர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- வரலாற்றுச் சாதனையாளர் கலைஞர்
- கல்வியில் அபிவிருத்தி
- பெண்களின் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள்
- விவசாய விருத்தி
- முடிவுரை
முன்னுரை
தமிழக அரசியல் வரலாற்றில் தன்னுடைய தொலைநோக்கு சிந்தனைகளின் மூலம் தனக்கான அழியாத ஓர் இடத்தை பிடித்துக் கொண்டவரே கலைஞர் மு.கருணாநிதி ஆவார்.
தன்னுடைய பேராற்றலினாலும் பெரும் பணிகளினாலும் அயராத உழைப்பினாலும் ஆற்றல்மிக்க உருவாக்கங்களினாலும் தனக்கென தனியானதொரு முத்திரை பதித்தவர். அந்த வகையில் நாம் கலைஞர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனை பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
வரலாற்றுச் சாதனையாளர் கலைஞர்
1969ஆம் ஆண்டு அண்ணா மறைந்ததற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை காக்கும் பெரும் சுமை கலைஞருக்கு 45 வயதிலேயே ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் சுமார் 50 ஆண்டுகள் கட்சியின் தலைவராகவும், 62 ஆண்டுகள் சட்டமன்ற பணியிலும் ஐந்து முறை முதலமைச்சர் பணியிலும் 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு நாடகம், சின்னத்திரை, அரசியல் களம், திரைப்படம் என அவர் எழுத்துத் துறையிலும் இவரது பணி தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம், கலைக் கல்வியை வளர்க்கும் நோக்கில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களும் அவருடைய சாதனைகளையே எடுத்துக்காட்டுகின்றன.
கல்வியில் அபிவிருத்தி
மாணவர்களின் கல்வியை உயர்த்தும் வகையிலும் ஊக்குப்படுத்தும் வகையிலும் கல்வி சார் நலத்திட்டங்கள் பலவற்றை கலைஞர் முன்னெடுத்து உள்ளமையோடு பல்வேறு பல்கலைக்கழகங்களையும் உருவாக்கியுள்ளார்.
பெண்களின் கல்வியே நாட்டின் முன்னேற்றம் என தூரநோக்குடன் சிந்தித்த கலைஞர் இலவச கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் பெண்களின் கல்வியை அதிகப்படுத்தினார்.
இவ்வாறான இவருடைய செயற்பாடுகளின் மூலம் இன்று பல லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்களின் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள்
பெண்கள் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட காலப்பகுதியில் பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்ட கலைஞர் அவர்கள் எதிர்காலத்தில் பெண்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்ற தூரநோக்குடன் செயல்பட்டார்.
அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடுகளை அறிமுகம் செய்தார். மற்றும் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற தூர நோக்குடன் எட்டாம் வகுப்பு வரை கற்கும் ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அத்தோடு காவல்துறையில் பெண்களும் இணைவதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினார். இதன் விளைவாகவே இன்று மகளிர் காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளமையைக் குறிப்பிடலாம்.
விவசாய விருத்தி
விவசாய துறைக்கு பங்களிக்கும் வகையில் ஆறுகள் குளங்கள் கால்வாய்கள் போன்றவற்றை தூர் வாரும் திட்டத்தை கலைஞர் அவர்கள் மேற்கொண்டுள்ளதோடு உழவர்களின் விவசாயப் பொருட்களுக்கு உரிய விலைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், பல்வேறு உழவர் சந்தைகளையும் உருவாக்கியுள்ளார்.
அத்தோடு 1996 தொடக்கம் 2001 வரை 32 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழகத்தில் அமைத்தார்.
அத்தோடு விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டங்களையும் முன்னெடுத்தார். அதாவது விவசாயிகளுக்கு முதன்முதலாக இலவச மின்சாரம் வழங்கியவர் என்ற பெருமையும் கலைஞரையே சாரும்.
முடிவுரை
விமர்சனமே இல்லாத அரசியல் தலைவர்கள் உலகில் எங்கும் இல்லை. அந்த வகையில் கலைஞரை தனிப்பட்ட முறையில் தாக்கிய விமர்சகர்களும் பலர் உள்ளனர்.
ஆனாலும் அவர் தன்னுடைய செயல்பாடுகளிலும் மக்களுக்கான தன்னுடைய சேவைகளிலும் ஒரு போதும் தளர்ந்து விடவில்லை.
கலைஞருடைய செயல்திட்டங்கள் ஒவ்வொன்றும் தொலைநோக்கு பார்வையுடன், சிந்தனையுடன் மேற்கொள்ளப்பட்டமையினால் அவ்வாறான செயல்திட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இன்றைய மக்கள் சமூகத்துக்கு பல்வேறு வகையிலும் நன்மை பயர்த்துள்ளமையை குறிப்பிட்டே ஆக வேண்டும்.
You May Also Like: