பல்லின சமூகத்தினைக் கொண்ட இந்திய நாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒன்று கிரிமினல் சட்டம் மற்றொன்று சிவில் சட்டமாகும்.
இதில் கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அதாவது கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் சம்பவங்களில் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அனைவருக்கும் ஒரே தண்டனை தான் வழங்கப்படுகின்றது.
அதேநேரம் சிவில் சட்டம் மட்டும் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்களைக் கொண்டுள்ளன. அதாவது தனி நபர்களுக்கான சிவில் சட்டம் மதங்களுக்கு மதம் மாறுபடும்.
திருமணம், விவாகரத்து, வாரிசு, சொத்துரிமை, தத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட சிவில் விவகாரங்கள் குறித்து இந்த சட்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. இவை தொடர்பாக பல்வேறு மதங்களுக்குப் பல்வேறு சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
குறிப்பாக திருமணம் சார்ந்து “முஸ்லீம் பெண்கள் திருமணச் சட்டம்”, கிறிஸ்தவர்களுக்கு “கிறிஸ்தவர் திருமணச் சட்டம்”, “இந்து திருமணச் சட்டம்” முதலானவற்றைக் கூறலாம்.
இந்நிலையில் அனைத்துத் தரப்பினருக்குமான ஒரே சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பொது சிவில் சட்டமானது இந்தியாவில் பெரிதும் விவாதிக்கப்பட்ட விடையங்களில் ஒன்றாக உள்ளது.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன
பொது சிவில் சட்டம் என்பது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சமத்துவமாக அணுகக் கூடிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரு முறையாகும். இது பொது உரிமைகள் சட்டம் எனவும் அழைக்கப்படுகின்றது.
ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப் பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டங்களை பொது சிவில் சட்டம் என்பது குறிக்கின்றது.
இந்திய அரசியலமைப்பு
பல்வேறு மதங்கள், சமயங்களைப் பின்பற்றுகிற மக்கள், பழங்குடிகள் வாழ்கிற சுதந்திர இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாட்டில் மக்கள் தங்களுடைய சமய நம்பிக்கைகளைப் பாதுகாத்துக்கொள்கிற, பின்பற்றிக்கொள்கிற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது என்ற போதிலும்,
இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டி நெறிமுறைகளின் கீழ் உள்ள 44வது பிரிவில் “இந்தியா முழுமைக்கும் குடிமக்கள் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்” எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குடிமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் என்பது திருமணம், சொத்துரிமை மற்றும் குடும்ப விவகாரங்கள் அனைத்திலும் மதத்தின் அதிகாரத்தை பாதிக்கும் வாதமாக இருக்கும் என பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்றது.
இத்தகையதொரு பொது சிவில் சட்டமானது தற்போது அமிலுள்ள இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பார்சி உள்ளிட்ட தனிநபர் சட்டங்கள் அனைத்துமே ஒவ்வொரு அளவில் முரண்பட்டதாக கூறப்படுகின்றது.
மேலும், இஸ்லாம் அமைப்புகள் பொது சிவில் சட்டம் அரசியலமைப்புக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரானது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்போர் “அரசியல் நிர்ணய சபை விவாதத்திலேயே அம்பேத்கர் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக, 90 சதவிகிதச் சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்கிறபோது, சொத்து, திருமணம் தொடர்பான சட்டங்கள் மட்டும் தனியாக இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளார் என வாதிடுகின்றனர்.
You May Also Like: