தைப்பூசத் திருநாளில் சிறப்பு பெறுபவர்களுள் “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன்” என்ற வாசகத்தை கூறிய வள்ளலாரும் ஒருவராக காணப்படுகிறார்.
வள்ளலார் ஒரு புரட்சியாளர் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்ப வாழ்க்கை
- பெண்களுக்கான முக்கியத்துவம்
- இறைவனை அடைவதற்கான வழிகள்
- சமூக பணி
- மருத்துவப் பணி
- முடிவுரை
முன்னுரை
உருவ வழிபாடுகள், சமய சடங்குகள் என்பவற்றை தவிர்த்து, தனக்குள் ஒளிரும் உள்ளொழியே இறைவன் என குறிப்பிட்டு ஆன்மீகத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்திய புரட்சியாளராக வள்ளலார் என்பவர் காணப்படுகிறார்.
பார்ப்பதற்கு சாதுவாகவும், அருள் சிந்தும் மலர் முகமாகவும், கருணையின் கடலாக காணப்படினும் அவர் பாடும் கவிதைகள், பாடல்கள் என்பன சூறாவளி போல மக்கள் மத்தியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
ஆரம்ப வாழ்க்கை
கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் உள்ள மருதூரில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி ராமையா பிள்ளை மற்றும் சின்னம்மை தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் ராமலிங்கம் ஆகும்.
இவர் பிறந்து எட்டு மாதங்களிலே இவரது தந்தையார் காலமானார். சிறிது காலத்தின் பின்னர் அவரது தாயார் அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து தங்கினார்.
சென்னை கந்தகோட்டம் திருவொற்றியூர் கோவில் சென்று தெய்வங்கள் மீது தோத்திரப் பாடல்கள் பாடி மகிழ்ந்தார் வள்ளலார்.
பெண்களுக்கான முக்கியத்துவம்
19 ஆம் நூற்றாண்டு வள்ளலார் பல சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவற்றுள் பெண்களுக்கு கல்வி அவசியம், ஆண் பெண் சமத்துவம் என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
ஆணும் பெண்ணும் வேறுபாடு இல்லாத உயிர்களே ஆவர் என்பதை அவருடைய திரு அகவல் மூலம் பின்வருமாறு விளக்குகிறார்.
“பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த
அருட்பெரும் சோதி”
மேலும் பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்கப்பட வேண்டும். பெண்களும் உண்மைகளை அறிந்து கொண்டு உண்மை கடவுளை வழிபாடு செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.
இறைவனை அடைவதற்கான வழிகள்
தன்னுடைய ஆன்மீக ஆற்றலால் இறை சக்தியை உணர்ந்த ஞானியாக வள்ளலார் காணப்படுகிறார். இவர் இறைவனை நெருங்குவதற்கு மனத்தூய்மை என்ற ஒன்று மாத்திரமே போதுமானது என்கிறார்.
இவர் தனது பிரச்சாரங்களில் கொல்லாமை, சூதுவாதின்மை, பொய்யாமை இவையும் இறைவனை அடைய வழி என வலியுறுத்துகிறார்.
சமூகப் பணி
யாகங்கள், கேள்விகளில் மக்கள் பணத்தை அள்ளி கொடுத்து வீணடிப்பதை கண்டு வருந்திய வள்ளலார் தனது பிரச்சாரங்களில்” பசியில் வாடும் ஏழைகளுக்கு உணவளியுங்கள்”, “உலகத்திலே பிறர் பசி தீர்ப்பது ஆகப்பெரும் அறமாகும்” என வலியுறுத்தினார்.
அதோடு நின்று விடாது வடலூரில் 1867 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அன்னதானம் செய்ய ஆரம்பித்தார். அவர் ஆரம்பித்த அந்த சேவையின் மூலம் இன்று வரை கோடிக்கணக்கானோரது பசி தீர்ந்து வருகிறது.
மருத்துவப் பணி
வள்ளலார் மாபெரும் ஒரு சித்த வைத்தியராக காணப்பட்டார். அபூர்வமான மூலிகைகளை தனது பாடல்களின் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் அடையாளம் காட்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் நோய் பிணிகளை தீர்த்து வைத்த மகானாகவும் காணப்படுகிறார்.
முடிவுரை
எத்தனையோ மகான்கள் அவதரித்து வாழ்ந்த இந்த புனித மண்ணில் வாழ்ந்த வியக்கத்தக்க மகான்களால் ஒருவராக போற்றப்படும் ராமலிங்க சுவாமிகள் எனப்படும் வள்ளலார் அவர்கள் சித்தர் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டிய மகான் ஆவார்.
ஜீவகாருண்யா ஒழுக்கத்தோடு அன்னதான சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தி மாபெரும் ஆன்மீகப் புரட்சியினை மேற்கொண்டுள்ள இவரது சிந்தனைகளை நாம் கடைபிடித்து செயல்படுதல் வேண்டும்.
You May Also Like: