இன்று அதிகமாக மனிதர்களை பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக எய்ட்ஸ் விளங்குகின்றது. அதாவது மனித இனத்திற்கே அச்சுறுத்தலாக எய்ட்ஸ் நோய் அமைந்துள்ளதோடு இந்நோயினால் இன்று மகிழ்ச்சியான வாழ்க்கையும் அழிவை நோக்கி செல்கின்றது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- எயிட்ஸ் என்பது
- எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
- நோயின் அறிகுறிகள்
- எயிட்ஸ் நோய் தடுப்பு முறைகள்
- முடிவுரை
முன்னுரை
ஒவ்வொரு மனிதனும் இந்த உலகில் நோய் இன்றி வாழவே ஆசைப்படுவார்கள் அதாவது நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வே எமது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து தரும். அந்த வகையில் இன்று எய்ட்ஸ் நோயானது கட்டுப்படுத்த முடியாத நோய்களுள் ஒன்றாகவே காணப்பட்டு வருகின்றது.
எய்ட்ஸ் என்பது
எய்ட்ஸ் என்பது ஒரு மனிதனிடமிருந்து மனிதனுக்கு குறிப்பாக முறையற்ற உடலுறவால் பரவும் ஒரு பாலியல் நோயாகும்.
இந்நோயினை முதன் முதலில் 1981ம் ஆண்டு அமெரிக்காவே கண்டுபிடித்ததோடு இன்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிக்கும் ஓர் கொடிய நோயாகவே வலம் வருகின்றது.
எய்ட்ஸ் விழிப்புணர்வு அவசியமாகும். அதாவது எய்ட்ஸ் நோயினது பரவலை கட்டுப்படுத்துவதற்காக நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவே எய்ட்ஸ் விழிப்புணர்வாகும்.
எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான பிரதானமான காரணங்களில் ஒன்றே பாதுகாப்பற்ற உடலுறவாகும். இதன் மூலமாக 85வீதம் எச்.ஐ.வி எய்ட்ஸ் பரவுகின்றது.
மேலும் HIV கிருமி தொற்றுள்ள தாயிடம் இருந்து பிறந்த குழந்தைக்கும் இது ஏற்படுகின்றது. அதேபோன்று போதை பழக்கத்தில் ஈடுபடல் மற்றும் சுத்தமற்ற போதை ஊசியை பகிர்ந்து கொள்ளுதல் போன்ற காரணங்களால் இந்த நோயானது பரவுகின்றது.
நோயின் அறிகுறிகள்
எய்ட்ஸ் நோயினால் பாதிப்புக்குள்ளானவர்களிடம் ஆரம்பத்தில் அறிகுறிகள் காணப்படுவதில்லை என்ற போதிலும் காய்ச்சல் வெளிப்படும். அதாவது மூன்று அல்லது ஆறு வாரங்களுக்கு பிறகே அறிகுறிகள் தென்படும்.
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். மேலும் இந்நோய் நிலைக்கு ஆளாகுபவர்கள் காசநோய், நிமோனியா மற்றும் சிலவகை புற்றுநோய்களுக்கும் ஆளாகி காணப்படுவர்.
எய்ட்ஸ் நோய் தடுப்பு முறைகள்
உலகத்தையே உலுக்குகின்ற எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் ஒன்றே பாதுகாப்பான உடலுறவாகும்.
அதாவது மேலத்தேய காலச்சாரங்களை போல எண்ணற்ற தொடர்புகளை பேணாது சிறந்த முறையில் பாதுகாப்பான உடலுறவினை மேற்கொள்ளல்.
மேலும் இரத்த தானம் பெறுகின்ற சந்தர்ப்பங்களில் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதா என்பதனை அறிந்து இரத்த தானத்தை பெற்றுக்கொள்ளல், தொற்று நீக்கிய ஊசிகளை பயன்படுத்தல், எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகளை ஏற்படுத்துதல், திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடாதிருத்தல், எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் தாய் கருவுற்றிருக்கும் போது தக்க சிகிச்சை வழங்குவதன் மூலம் பிறக்கும் குழந்தையை எய்ட்ஸில் இருந்த பாதுகாத்தல் என பல தடுப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலமாக எய்ட்ஸ் நோய் எம்மை அண்டாமல் தடுக்க முடியும்.
முடிவுரை
எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் மனிதம் என்ற ரீதியில் மதிக்க கற்றுக்கொள்வது அனைவரதும் கடமையாகும்.
You May Also Like: