காமராஜர் கல்வி பணி கட்டுரை

kamarajar kalvi pani katturai in tamil

கல்வி கண் திறந்த காமராஜரின் கல்விப் பணிகளானவை அளப்பரியதாக காணப்படுகின்றது. நாட்டினுடைய நலனை அடிப்படையாகக் கொண்டே இவரது வாழ்க்கையானது அமைந்துள்ளதோடு மட்டுமல்லாது சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து சமூகத்திற்கு தொண்டாற்றியவரே காமராஜராவார்.

காமராஜர் கல்வி பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்ப கால வாழ்க்கை
  • கட்டாய கல்வித் திட்டம்
  • இலவசக் கல்வியும் சீருடை திட்டமும்
  • படிக்காத மேதை
  • முடிவுரை

முன்னுரை

தமிழ் நாட்டின் முதலமைச்சராக திகழ்ந்தவரும், கல்வி புரட்சிக்கு வித்திட்டவருமான காமராஜர் மாணவர்களின் கல்விக்காக பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கல்விக்கு பல பங்களிப்பினை செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தி மக்களால் கல்வி கண் திறந்தவர் என அழைக்கப்படுபவரான காமராஜர் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் 1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி விருது நகரில் பிறந்தவராவார். இவர் குமாரசாமி மற்றும் சிவகாமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது சிறுவயதிலேயே தந்தையை இழந்ததன் காரணமாக தனது மாமாவின் கடையில் வேலை செய்ததோடு தனது பள்ளி படிப்பையும் இடையில் நிறுத்திக்கொண்டார்.

இவர் தனது சிறு பராயத்திலிருந்து செய்தித் தாள்கள் மற்றும் தலைவர்களின் சொற் பொழிவுகளை கேட்டு தனது அறிவை வளர்த்துக் கொண்டவராவார்.

கட்டாயக் கல்வித் திட்டம்

தான் கற்காவிடினும் தன் சமூகத்தினர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் கல்வித் திட்டங்களை கொண்டு வந்தவரே காமராஜர் ஆவார். இவர் கல்விப் பணியில் பிரதானமானதொன்றே கட்டாயக் கல்வியாகும்.

கட்டாயக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி பள்ளிக்கு செல்பவர்கள் மற்றும் செல்லாதவர்கள் போன்றோரின் விபரங்களை எடுத்து பள்ளி செல்லாமல் இருப்பவர்களின் காரணம் என்ன என்பதனை கண்டறிந்து அவர்களுடைய பெற்றோர்களிடம் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

இலவச பாடநூல், சிலேட்டுக்கள் போன்றவற்றை வழங்கி பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கட்டாயக் கல்வியினூடாக எழுத்தறிவின்மையை ஒழித்து சிறந்த கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டார்.

இலவசக் கல்வியும் சீருடை திட்டமும்

காமராஜர் அவர்கள் 1963ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி இடம் பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பத்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி முறையை அமுலாக்க வேண்டும் என்பது தொடர்பாக கருத்தை வெளியிட்டார்.

இதனூடாக இலவச கல்வித் திட்டம் அமுலாக்கப்பட்டதோடு குழந்தைகளுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் முகமாக சீருடை திட்டத்தையும் கொண்டு வந்தார். இதன் காரணமாக சமூகத்தில் இவரது கல்விப் பணியானது சிறப்பிற்குரியதாகவே போற்றப்படுகின்றது.

படிக்காத மேதை

காமராஜர் அவர்கள் படிக்காதவராக காணப்பட்டாலும் இன்று கல்விக் கண் திறந்தவராக போற்றப்பட காரணம் அவர் அனைவருக்கும் வழங்கிய கல்வித் திட்டங்களே ஆகும்.

தனது பணிகளின் மூலமாக நாட்டின் தரத்தை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பல்வேறு சமூக நலத் திட்டங்களை கொண்டு வந்தவராவார்.

மேலும் தான் படிக்கவில்லை என்ற போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல தகவல்களை கற்றுக் கொண்டே இருப்பார். இதன் காரணமாகவே இன்று அனைவராலும் படிக்காத மேதையாக காமராஜர் அவர்கள் போற்றப்பட்டு வருகின்றார்.

முடிவுரை

தனது வாழ்வை தனது சமூகத்திற்காக அர்ப்பணித்ததோடு மட்டுமல்லாமல் இன்று கல்வியில் பல புரட்சிகரமான மாற்றத்திற்கு வித்திட்டவராகவே காமராஜர் திகழ்கின்றார் என்றவகையில் இன்று இலவசக் கல்வி முறையானது ஏழை, பணக்காரன் என்ற பேதத்தினை ஒழித்து அனைவரும் சமமானவர்கள் என ஒற்றுமையை வலுப்படுத்துவதாக காணப்படுகின்றது.

You May Also Like:

கல்வி கண் திறந்தவர் பேச்சு போட்டி

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜர் கட்டுரை