காதி என் பெருமை கட்டுரை

kathi en perumai katturai in tamil

காதி என்றவுடன் நம் ஒவ்வொருவருக்கும் முதலில் நினைவில் வருவது எமது தேசப்பிதாவாகிய மகாத்மா காந்தி தான்.

காதி என்பது வெறுமனே ஒரு துணி மட்டுமல்லாது எம்முடைய பாரம்பரியம், கலாச்சாரம் என்பவற்றுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாக இருப்பதோடு, மதிக்கத்தக்க ஒரு கைவினை கலையாகவுமே இது காணப்படுகின்றது.

அத்தோடு நம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் இந்த காதிக்கும் இடையிலான தொடர்பினையும் ஒருபோதும் மறந்து விடலாகாது.

காதி என் பெருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • காதி என்றால் என்ன
  • மகாத்மா காந்தியும் காதித் துணியும்
  • காதியின் பெருமைகள்
  • காதி மூலம் கிடைக்கும் பொருளாதாரம்
  • முடிவுரை

முன்னுரை

காலனித்துவ காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி, அடக்கி ஒடுக்கி ஆண்டனர். அவர்கள் இந்தியாவிற்கு முதன் முதலாக ஆடை வணிகம் செய்யத் தான் நுழைந்தனர். பின்பு இந்த இந்திய நாட்டையே தன் வசப்படுத்தி அடிமையாக்கினர்.

அந்நியர்களின் ஆடைகளை களைந்து நம் நாட்டு உற்பத்தியான காதி ஆடையை மட்டுமே இனி அணிய போவதாக காந்தி அவர்கள் 1920 ஆம் ஆண்டு உறுதிப்பூண்டதோடு, மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

காதி என்றால் என்ன

காதி என அழைக்கப்படுவது ஒரு வகைத் துணி ஆகும். இது கதர் எனும் இன்னுமொரு பெயராலும் அழைக்கப்படுகின்றது. அதாவது கை நூற்பு செய்யப்பட்டு, கை நெசவு செய்யப்பட்ட துணியே காதி எனப்படும்.

பொதுவாக பருத்தியில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் காதியானது. பட்டு, கம்பளி என்பவற்றிலும் இவ்வாறு கைநூற்பு, கை நெசவு என்பவற்றின் மூலம் உருவாக்கப்படுகின்றது.

இது பழங்கால துணி உற்பத்தி முறையாக காணப்படுவதோடு, எமது சமூகம் சார்ந்து பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. அத்தோடு எம்முடைய நாட்டின் பொருளாதாரத்திலும் செல்வாக்கு செலுத்தும் ஒன்றாகவும் இந்த காதி விளங்குகின்றது.

மகாத்மா காந்தியும் காதித் துணியும்

மகாத்மா காந்திக்கும் காதை துணிக்கும் இடையே நெருக்கமான ஒரு தொடர்பு காணப்படுகின்றது.

அதாவது “அந்நியர் ஆடை தொடும்…” என்ற வசனங்களின் சொந்தக்காரரான காந்தியவர்கள் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேன்மையடைய செய்வதற்கான ஒரு சிறந்த வழியே காதி என குறிப்பிட்டதோடு, மேலைநாட்டு ஆடைகளை களைந்து உள்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் காதியையே அணிய வேண்டும் என மக்களை அறிவுறுத்தியதோடு தான் காதி மட்டுமே அணிவேன் என உறுதிப்பூண்டவர் இறக்கும் வரைக்கும் காதி மட்டுமே அணிந்த ஒரு பெருமைக்குரியவராகவே காந்தி விளங்குகின்றார்.

காதியின் பெருமைகள்

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சின்னமாக காதி விலங்கியது காதியின் மிகப்பெரிய பெருமையாகவே காணப்படுகிறது.

மேலும் இந்த காதி துணியானது, கோடை காலத்தில் குளிர்ச்சி உணர்வையும், மழைக்காலத்தில் கதகதப்பையும் தரக்கூடிய சிறப்புமிக்க ஒன்றாகும்.

உடலுக்கு எவ்வித தீங்குகளையும் இழைக்காத காதித்துணிகளை பல வண்ணங்களிலும் தற்காலங்களில் காணலாம்.

அத்தோடு மிகவும் முக்கியமாக இந்திய தேசியக் கொடியானது காதித் துணியில் மாத்திரமே செய்யப்பட முடியும் என்பதும் இந்த காதியின் பெருமைகளை எமக்கு உணர்த்துவதாக காணப்படுகின்றது.

காதி மூலம் கிடைக்கும் பொருளாதாரம்

காதி என்பது உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாகும். அதாவது எமது பயன்பாட்டுக்காக நம்முடைய மக்களை வைத்து நாமே தயார் செய்து கொள்ளும் துணியாகும்.

மகாத்மா காந்தி மூலம் காதி பெருமைப்படுத்தப்பட்டு, அனைவராலும் அணியப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டமையினால், பலர் இந்த காதியை விரும்பி அணியும் மக்களாக மாறினர்.

இதன் மூலம் நாட்டின் ஆடை உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுவதோடு, நாட்டின் பொருளாதாரமும் அதிகமாகின்றது. ஆகவே காதி என்பது எமது பெருமை மட்டுமல்லாது, எம்முடைய பொருளாதாரத்தின் பெருமையாகவும் இடம் பிடித்துள்ளது.

முடிவுரை

மகாத்மா காந்தியின் கூற்றுக்கு இணங்க, காதி என்பது ஒவ்வொரு மனிதரதும் உணர்வுடன் கலந்த ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் எம்முடைய அடையாளம், பெருமை, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் கவனத்தில் கொண்டு காதியை ஆதரிப்பது இந்திய குடிமக்களாகிய ஒவ்வொருவரதும் பெருமையாகும்.

“காதி என் பெருமை” என்று மார்தட்டிக் கொள்வதில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமையே அடைகின்றான்.

You May Also Like:

காந்தியின் அகிம்சை கட்டுரை

காந்தியின் கொள்கைகள் கட்டுரை