மார்கழி மாதம் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரம் கூடிவரும் நாளன்று சிறப்பு பூஜை வழிபாட்டுடன் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர் இதுவே ஆருத்ரா எனப்படுகின்றது. இதனையொட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுகின்றனர்.
ஆருத்ரா தரிசன வழிபாட்டின் சிறப்பம்சங்கள்
சிவனுக்கு உகந்த நட்சத்திரமாக திருவாதிரை விளங்குகின்றது. பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் நாளன்று சிவன் ஆனந்த திருத்தாண்டவத்தினை ஆடி அதனை கண்டு மகிழும் பாக்கியத்தினையும் முனிவர்களுக்குத் தந்தருளினார் என சில வரலாற்று கதைகள் கூறுகின்றன. இந்நாளில் நடராஜர் பெருமானுக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
முதன் முதலில் ஆருத்ரா தரிசனத்தினை கொண்டாடிய தலம் திருஉத்திரகோசமங்கை ஆலயம் ஆகும். இந்த ஆலயம் தமிழ் நாட்டில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் யாதெனில் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதத்தினாலான நடராஜர் இத்தலத்தில் அமையப்பெற்றுள்ளது.
இச்சிலையானது மிகவும் மென்மையானது எனவும் ஒலி மற்றும் ஒளி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை கொண்டதெனவும் இதன் காரணமாக இந்த சிலையினை இந்த அதிர்வுகளில் இருந்து பாதுகாத்து வருகின்றனர் எனவும் கூறுகின்றனர்.
இத்தலத்தில் இந் நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக நடராஜர் பெருமானில் இருந்த சந்தனமானது களையப்பட்டு மீண்டும் அன்று இரவு பூசப்படும் எனக் கூறப்படுகின்றது.
இந்நாளை வெகுவிமர்சையாக கொண்டாடும் மற்றுமொரு திருத்தலமாக தில்லையில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் திருக்கோவில் விளங்குகின்றது.
சிதம்பர நடராஜரின் தரிசனத்தினைக் காண அனைத்து தேவர்களும் ஒன்று கூடி இந்நாளில் வருவார்களாம் எனவும் இந்நாளில் சிதம்பரம் சென்று வழிபட்டால் முக்தியினைப் பெறலாம் எனவும் வரலாறு கூறுகின்றது. மற்றும் சிதம்பரத்தில் நடராஜர் நடனமாடிய இடத்தை சிற்றம்பலம் எனக் கூறுவார்.
சிதம்பர நடராஜருக்கு கூத்த பெருமான், சபாநாயகர், விடங்கர், தட்சணமேருவிடங்கர், நடராஜர், மேருவிடங்கர், பொண்ணம்பலம் எனப் பல பெயர்கள் உண்டு.
பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாத முனிவர் இருவரின் தவத்திற்கிணங்க சிவபெருமான் தில்லையில் தனது திரு நடன காட்சியை திருவாதிரை நன்நாளிலே அருளினார் என்று வரலாற்றுக் கதையானது எடுத்தியம்புகின்றது.
திருவாதிரைக் களியின் சிறப்பு
புகழ் பெற்ற சிவனடியார்களில் ஒருவரான சேந்தனாரின் அளவு கடந்த பக்தியினை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்ட சிவபெருமான் சிவனடியார் வேடம் பூண்டு திருவாதிரை நன்நாளில் சேந்தனாரின் இல்லத்திற்கு சென்று வறுமை காரணமாக அரிசியினைப் பொடியாக்கி சேந்தனார் அன்புடன் தயார் செய்த களியினை அவரின் அன்பிற்கு கட்டுப்பட்டு எம்பெருமான் உண்டு மகிழ்ந்தார் என வரலாற்றுக் கதையின் விளக்கமானது எடுத்தியம்புகின்றது.
இதன் காரணமாகவே இந்நாளில் பல சிவாலயங்களில் சிறப்பு நெய்வேத்தியமாக களியானது படைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
திருவாதிரை விரத (நோன்பு) முறைகளும் அதன் பலன்களும்
திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் விரதம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். இந்த நோன்பினை திருமாங்கல்ய நோன்பு எனவும் அழைப்பார்கள்.
இந்நாளில் சிவாலயங்களிற்கு சென்று வழிபடலாம் அல்லது வீட்டில் உருவச் சிலைகள் இருந்தால் அதை அலங்காரம் செய்து பூக்கள், வில்வம் இலைகளை வைத்து வழிபாடு செய்யலாம்.
இந்நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இறைவனை மெய்யன்போடு வழிபாடு செய்வது சிறப்பு பலனைத் தரும் என்பர்.
இந்த விரதத்தினை திருமணமான பெண்கள் கடைப்பிடித்தால் அவர்களது கணவரின் ஆயுள் நீண்ட காலம் நீடிக்கும் என்பதும் பிணிகள் யாவும் அகன்று இன்பமான வாழ்வு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
இவ்விரதத்தினை திருமணமாகாத பெண்கள், ஆண்கள் இருபாலரும் கடைப்பிடிக்கலாம்.
சிவபெருமானின் ஐந்து சபைகள் என்பது
- பொற்சபை – சிதம்பரம் தில்லை நடராசர் கோவில்
- வெள்ளி சபை – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
- இரத்தின சபை – திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்
- தாமிர சபை – திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில்
- சித்திர சபை – குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோவில்
ஆருத்ரா தரிசனமானது இந்த ஐந்து சபைகளிலுமே வெகுவிமர்சையாக நடைபெறும் எனக் கூறுவர். இத்தினத்தில் சிவனின் பரிபூரண அருளினைப் பெற்று சிறப்புடன் வாழ்வோமாக.!
You May Also Like: