சமுதாயம் என்பது ஒரு நபர் அல்ல பல நபர்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பாகும். இன்றைய காகல கட்ட சமுதாயம் பல இன்னல்களை சந்திக்கின்றது. அவற்றை நீக்க உதவி செய்ய வேண்டியது எமது ஒவ்வொருவரின் கடமையாகும். அவ்வகையில் சமுதாயத்தில் மாணவரின் பங்கு என்பது இன்றியமையாதது.
சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முகவுரை
- மாணவர் என்றால் யார்?
- சமூக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்
- மாணவர்கள் சங்கங்கள்
- மாணவர்கள் சமூகத்திற்காக செய்ய வேண்டிய பணிகள்
- முடிவுரை
முகவுரை
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க மாணவர்கள் சமுதாயத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு. இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் அவர்கள் சமுதாய உணர்வுடையவர்களாக வாழ்ந்தால் வீடும் நாடும் நன்மையடையும்.
மாணவர்கள் என்றால் யார்?
கல்வி கற்பதற்கு வயதெல்லை என்பது கிடையாது. கல்வி கற்கும் பருவத்தில் உள்ள அனைவருமே மாணவர்கள் ஆவர்.
தொண்டு என்பது ஓர் உயிர் படும் துன்பத்தை கண்டு அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் உடனே ஓடிச் சென்று உதவுவது. அவ்வகையில் தொண்டு செய்வதற்கான சிறந்த பருவம் மாணவப்பருவம் ஆகும்.
இப்பருவத்தில் மாணவர்கள் ஏட்டுக் கல்வியை மட்டும் பயில்வதோடு நின்று விடாமல் சமூக தொண்டும் செய்ய வேண்டும்.
“நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும்” என்றார் அமெரிக்க நாட்டு அதிபர் ஜான்கென்னடி. அடுத்த சமூக வாரிசான மாணவர்களின் பங்கு என்பது சமூக மத்தியில் கட்டாயமாக காணப்பட வேண்டும்.
சமூக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்
இன்றைய சமூகத்தை பொறுத்த வரையில் அவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். அவ்வாறு நாட்டு சமூகத்தினர் வறுமை, கல்வியின்மை, தூய்மையின்மை, சாதி வேறுபாடு, தீண்டாமை, மூடப்பழக்கவழக்கங்கள், அறியாமை போன்ற பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.
குறிப்பாக கிராமங்களிலும் சேரிப்புறங்களிலும் வாழும் மக்கள் மிகவும் பின் தங்கியுள்ளனர். நாட்டில் உள்ள பின் தங்கிய மக்களுக்காக நாம் செய்ய வேண்டிய கடமை என்பதற்கு அளவே இல்லை. சமுதாயத்தின் கண்களாகிய மாணவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றுவது கடமையாகும்.
மாணவர் சங்கங்கள்
கல்வி கற்கும் பிராயத்தில் மாணவர்கள் சமூக தொண்டுகள் ஆற்ற வேண்டும் என பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பல சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் செஞ்சிலுவைச் சங்கம், சாரண சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட சபை போன்ற நிறுவனங்கள் சமுதாய தொண்டு செய்வதை நோக்காகக் கொண்டு பாடசாலைகளில் இயங்கி வருகின்றன.
இவற்றின் மூலம் பல தொண்டுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி மாணவர்கள் சமுதாயத்தில் பங்கு கொள்ளவும் தொண்டு செய்யவும் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
மாணவர்கள் சமுதாயத்திற்காக செய்ய வேண்டிய பணிகள்
மாணவர்களே சமுதாயத்தை கட்டிக்காக்க வேண்டும். அவ்வகையில் அவர்கள் பல பணிகளை சமுதாயத்திற்கென மேற்கொள்ள வேண்டும்.
அவ்வகையில் தெருக்களை தூய்மைப்படுத்தல், நீர் நிலைகளை தூய்மைப்படுத்தல், சாலைகளை செப்பனிடல், மருத்துவ உதவி பெற வழிகாட்டுதல், விழாக்காலங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல், எழுத்தறிவில்லாதவர்களுக்கு எழுத்தறிவை போதித்தல், இயற்கை சீற்றங்களான புயல் வெள்ளப்பெருக்கு போன்ற சீற்றங்களால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுதல்,
சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை மேற்கொள்ளல், ஒழுக்கம் தவறுவோரை நல்வழிப்படுத்தல் போன்ற பல பணிகளை மாணவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள முடியும்.
இவ்வாறான பணிகளை மேற்கொள்ளும் போது சமுதாயம் மேம்படுவதோடு மாணவர்களும் சமுதாய பங்குதாரராக மாற்றம் அடைவர்.
முடிவுரை
மாணவர் என்போர் நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவராக திகழ வேண்டும். “சிறந்த 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிக்காட்டுகின்றேன்” என்ற சுவாமி விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க மாணவப் பருவம் மாண்புடைய பருவம்.
எனவே நாடு, வீடு என்ற இரண்டின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் என்றும் விடாமல் உழைக்க வேண்டும்.
You May Also Like: