மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறையுள் போன்றன காணப்படுகின்றன. இவற்றுள் உணவு தேவையை நிறைவேற்றும் ஒரு பெரிய பகுதியாகவே இந்த விவசாயம் காணப்படுகின்றது.
அதாவது விவசாயம் செழித்து காணப்படுமே ஆனால் மக்களுடைய உணவு, உடை, உரையுள் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான வளமும் பெருகும் என்பதே உண்மையாகும். ஆகவே இந்த விவசாயத்தை காப்பது எமது கடமையாகவே காணப்படுகின்றது.
விவசாயம் காப்போம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- விவசாயத்தின் முக்கியத்துவம்
- ஏன் விவசாயத்தை காக்க வேண்டும்
- நவீன விவசாய முறைகளில் காணப்படும் தீமைகள்
- விவசாயத்தை காப்பதற்காக நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்
- முடிவுரை
முன்னுரை
ஒரு நாட்டினுடைய முதுகெலும்பாகவே விவசாயம் காணப்படுகின்றது. மனிதனுடைய அடிப்படை தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கும் விவசாயம் இன்றி அமையாததாக காணப்படுகின்றது.
“விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்” எனும் வாசகத்தை நோக்குகையில் விவசாயம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்றால் மாத்திரமே நாம் எம்முடைய உணவுத் தேவையை நிறைவு செய்து கொள்ள முடியும்.
விவசாயத்தின் முக்கியத்துவம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றுவது விவசாயத் துறையின் முக்கியத்துவத்தையே எடுத்துக்காட்டுகின்றது. அதுமட்டுமின்றி பசி, பட்டினி, பஞ்சம் போன்றவற்றிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கும் இந்த விவசாயத்துறை விருத்தி காரணமாக அமைகின்றது.
அத்தோடு முக்கியமாக நாட்டில் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க விவசாய உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவேதான் ஒவ்வொரு நாடுகளும் விவசாயத்திற்கு அதிக முக்கியம் அளித்து தன்னிறைவு பொருளாதாரத்தின் பால் நகர்ந்து செல்வதனைக் காண முடிகின்றது.
ஏன் விவசாயத்தை காக்க வேண்டும்
நாம் விவசாயத்தை காப்பதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துவதனை காணமுடியும். அந்த வகையில் சில முக்கியமான காரணிகளை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.
அதாவது மக்களை வறுமையில் இருந்து பாதுகாத்து கொள்ளவும், பல உயிரினங்களுக்கு வாழிடத்தையும் உணவையும் வழங்குவதற்காகவும், இயற்கை விவசாய முறைகளின் மூலம் மண் வளத்தை பாதுகாக்கவும், நாட்டின் பொருளாதார நலன்களை மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காகவும் நாம் விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
நவீன விவசாய முறைகளில் காணப்படும் தீமைகள்
நவீன யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று விவசாய துறையிலும் பல்வேறு வளர்ச்சி நிலைகள் எழுந்து உள்ளமையைக் காணலாம்.
அதன் அடிப்படையில் புதிதாக உருவாகியுள்ள கிருமி நாசினிகள் மற்றும் பசளைகள் போன்றன விவசாயத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுவதனால் மனிதனுக்கு அவை நச்சுத்தன்மையை ஊட்டுவதாகவும், பல்வேறு புதிய புதிய நோய்களை உருவாக்கும் காரணிகளாகவும் அமைகின்றன.
அத்தோடு இவ்வாறான அசேதன பசளைகள் மூலமாகவும், கிருமி நாசிகளின் மூலமாகவும் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, சூழல் மாசு, நீர் மாசு போன்ற அனைத்தும் ஏற்படுவதனைக் காண முடியும்.
விவசாயத்தை காப்பதற்காக நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்
உணவு என்பது மனிதனின் இன்றி அமையாத தேவையாக காணப்படுவதனால் நாம் இந்த விவசாயத்தை எப்படியேனும் பாதுகாத்தே ஆக வேண்டும். ஆகவே நாம் விவசாயத்தை காக்கக்கூடிய வழிமுறைகளாக பின்வரும் சிலவற்றை அடையாளப்படுத்தலாம்.
அதாவது விவசாயத்துக்கு தேவையான நீர் பலத்தையும் நீர் வடிகால் அமைப்புகளையும் முறையாக திட்டமிடுதல் வேண்டும், அரசாங்கம் விவசாயத்துக்கு தேவையான உரம் மற்றும் கிருமி நாசினிகளை மானிய முறையில் வழங்க வேண்டும் மற்றும் விவசாயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்காக அரசாங்கம் நஷ்டஈடுகளை வழங்க வேண்டும், அத்தோடு விவசாய துறைக்கு தேவையான நிதி திட்டங்களையும் வகுப்பது முக்கியமானதாகும்.
இவற்றோடு விவசாய நிலங்களில் கட்டாயம் விவசாயிகள் பயிரிடுதல் வேண்டும். இவ்வாறான எமது செயற்பாடுகள் மூலம் நாம் விவசாயத்தை பாதுகாக்கலாம்.
முடிவுரை
தற்போதைய நவீன காலங்களில் விவசாயத் தொழில் என்பது மக்களால் சற்று குறைவான தொழில் என்றே எண்ணப்படுகின்றது. ஆனால் அந்த எண்ணம் பிழையானதாகும்.
அதாவது எமது முன்னோர்கள் கௌரவத் தொழிலாகவே விவசாயத்தை முன்னெடுத்துள்ளனர். இவ்வாறான ஒரு தொழில் இல்லையெனில் மக்கள் உயிர் வாழ்வதே மிகவும் கடினமானதாகும்.
நாம் விவசாயத்தில் ஈடுபடாவிட்டாலும் விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதே எம் அனைவரதும் கடமையும் ஆகும். அவ்வாறு செயல்பட்டால் மாத்திரமே நாம் விவசாயத்தை காக்க முடியும்.
You May Also Like: