அன்பே உலகாளும் கட்டுரை

anbu patri katturai in tamil

மானிடராக பிறந்த ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நட்பண்பாகவே அன்பு காணப்படுகின்றது. அள்ள அள்ள குறையாத இந்த அன்பினால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் கைக்கொள்வதற்கு பதிலாக அன்பையும் அகிம்சையையும் கடைப்பிடிப்பது இந்த உலகையே ஆளுவதற்கு வழிவகுக்கும்.

அன்பே உலகாளும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. அன்பின் அவசியம்
  3. அன்பின் மகிமை
  4. மனிதநேயத்தின் அடித்தளம்
  5. அன்பின் பயன்கள்
  6. முடிவுரை

முன்னுரை

இல்லறம் நல்லறமாக மாறுவதற்கு அன்பு இன்றியமையாததாகும். திருவள்ளுவரின் கருத்துப்படி, அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த உடம்பு. அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உயிர் வெறும் எலும்புகளின் மேல் போர்த்திய தோல் ஆகும் என குறிப்பிடுகின்றார். எனவே அன்பின் தேவையை நாம் இங்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.

அன்பின் அவசியம்

ஏழை, பணக்காரன் என்ற நிலைகளை தாண்டி மனிதன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு அன்பு அவசியமானதாகும். அதாவது பணம் ஏழை, பணக்காரன் என்பதனை நிர்ணயம் செய்கின்றது.

ஆனால் அன்பு எவ்வித பாகுபாடும் இன்றி எல்லா மனிதர்களுக்கும் மகிழ்ச்சியை தருகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது குடும்பத்துடன் உற்றார் உறவினர்களுடனும் சண்டை, சச்சரவுகள் இன்றி ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வதற்கு அன்பு அவசியமான ஒன்றாகும்.

பிறருக்கு உதவுவது என்பது சாதாரணமான ஒரு விடயம் அல்ல. இவ்வாறு நாம் பிறருக்கு உதவ முனைகையில் எமக்கு உறுதுணையாக நிற்பது, எமது மனதில் நிறைந்திருக்கும் அன்பு எனும் பெரு வெள்ளமாகும். எனவே அன்பின் அவசியம் இந்த உலகத்துக்கு தேவையானதாகும்.

அன்பின் மகிமை

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இனம், மதம், சாதி ஆகிய வேறுபாடுகளை களைந்து இன்னொருவர் மீது இரக்கத்தையும் நேசத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி இந்த அன்புக்கு உரியதாகும்.

அன்பினால் இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பது, அதன் மகிமையையே எடுத்துக்காட்டுகின்றது.

அன்புக்கு ஈடாக வேறு எதையும் கூறி விடவும் முடியாது, அன்பினை தடுக்கவும் முடியாது, அளவின்றி அள்ளிக் கொடுக்கக்கூடிய இன்பமாகும் அன்பு.

மனிதநேயத்தின் அடித்தளம்

மனிதர்கள் ஒவ்வொருவனுக்கும் மனிதநேயம் என்பது அவசியமான ஒன்றாகும். இந்த மனித நேயத்தினை வளர்க்கக்கூடிய அடிப்படை பண்பாகவே அன்பு என்பது காணப்படுகின்றது

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்கின்றார் ஔவையார். இவ்வாறான அரிதாக கிடைக்கக்கூடிய மனித வாழ்க்கையானது சிறப்பாக அமைவதற்கு அன்பு அவசியமான ஒன்றாகும்.

அதாவது பிறரோடு நட்பு பாராட்டுவதற்கும், நன்மைகள் புரிவதற்கும், ஒற்றுமையாக வாழ்வதற்கும் மனிதநேயம் அவசியமானதாகும். எனவே மனித நேயத்தினை வளர்க்கக்கூடிய அன்பு இன்றியமையாததாகும்.

அன்பின் பயன்கள்

கோபம், பொறாமை, வஞ்சகம் போன்ற தீய குணங்கள் தன்னைத் தானே அழித்துவிடக் கூடியவை. ஆனால் அன்பு என்பது உலகாலும் வல்லமை கொண்டதாகும். அதாவது அன்பினை கைக்கொள்ளக்கூடிய ஒருவருக்கு மக்கள் ஆதரவு சுலபமாகவே கிடைத்துவிடும்.

எனவே அவர் உலகை ஆளும் வல்லமையை பெற்றுக்கொள்ள முடியும். எமது ஆற்றல், மனவலிமை, உடல் வலிமை ஆகியவற்றை மென்மேலும் வளர்க்கக்கூடிய ஒன்றாகவே இந்த அன்பு காணப்படுகின்றது.

இவ்வாறாக மனிதர்களை புனிதர்களாக்கும் செயற்பாடுகளை அன்பு புரிகின்றது. எனவே அன்பின் பயன்பாடுகள் இன்றியமையாதவை என குறிப்பிடலாம்.

முடிவுரை

அன்பு இல்லாத உலகம் நரகமாகிவிடும். இந்த உலகில் அன்பு இல்லாமல் உறவுகளை பேணவும் முடியாது. உயிர்களிடத்தில் கருணை செலுத்தவும் முடியாது.

எனவே அன்பின் மகிமையைப் புரிந்து கொண்டு, இயற்கையிடத்திலும், எல்லா உயிர்களிடத்திலும், சக மனிதர்களிடத்திலும் அன்பு எனும் ஆயுதம் கொண்டு உறவாடுவது எமது தலையாய கடமையாகும்.

You May Also Like:

மக்கள் தொகை பெருக்கம் கட்டுரை

நற்செயல் என்றால் என்ன