அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை

arignar anna katturai in tamil

இந்தியாவின் தமிழ்நாட்டில் மொழி உரிமை, சமூக உரிமை, மாநில உரிமை தொடர்பான பல சிறந்த சிந்தனைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய சிந்தனையாளராகவும் தற்கால அரசியல்வாதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்பவர் அறிஞர் அண்ணா அவர்களே ஆவார்.

அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தோற்றம்
  • கல்வி
  • கலைப்பணியும் இலக்கியப் பணியும்
  • அரசியல்
  • முடிவுரை

முன்னுரை

“அண்ணா” என்று அனைத்து மக்களும் அன்புடன் அழைக்கும் அளவுக்கு இவ்வுலகில் வாழ்ந்து அரசியலில் பாரிய மறுமலர்ச்சியை உருவாக்கிய மகானாக காணப்படுகின்ற அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் மொழி மற்றும் ஆங்கில மொழிகளிலும் சிறந்த பேச்சாற்றலைக் கொண்ட தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக காணப்பட்ட சிறந்த மாமனிதர் ஆவார்.

தோற்றம்

அறிஞர் அண்ணா அவர்கள் நடராஜன் மற்றும் பங்காரு அம்மாள் எனும் தம்பதியினருக்கு மகனாக 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.

இவருடைய இயற்பெயர் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்பதாகும். இவர் செங்குந்த முதலியார் வகுப்பை சார்ந்த ஒரு நடுத்தர நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவரை சிறு வயது முதல் அவரது தாயாரின் இளைய சகோதரியான ராஜமணியே அன்பும் அமைதியும் நிறைந்தவராக தன்னுடனே வைத்து வளர்த்தார்.

கல்வி

மிகுந்த நினைவாற்றலும் சாதுரிய தன்மையும் கொண்ட அண்ணாத்துரை அவர்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர் பள்ளியில் கல்வி கற்றார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக சிறிது காலம் பள்ளி வகுப்பை முடித்து விட்டு நகராட்சியில் எழுத்தாளராக ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

பின்னர் 1928 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரிகள் சேர்ந்து (B.A) படித்து முடித்தார். பின்பு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ (M.A) பட்டம் பெற்றார்.

கலைப்பணியும் இலக்கியப் பணியும்

அறிஞர் அண்ணா அவர்கள் சிறு வயது முதலே எழுத்து துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். இதன் விளைவாக பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளராக காணப்பட்டார்.

ரங்கோன், ராதா பார்வதி பி.ஏ முதலிய புதினங்களை எழுதியுள்ளார். ஓர் இரவு, சந்திரோதயம், வேலைக்காரி முதலான நாடகங்களை எழுதி கலைத்துறையிலும் தம்முடைய முத்திரையை சிறப்பாக பதிய வைத்துள்ளார்.

இவருடைய படைப்புகள் காஞ்சி, குடியரசு, திராவிட நாடு, தென்னகம், பகுத்தறிவு, நம் நாடு, முரசொலி, விடுதலை போன்ற இதழ்களை அலங்கரித்தன.

கதைகள், கட்டுரைகள், தம்பிக்கு கடிதம், நாடகங்கள், திரைப்படங்கள், சொற்பொழிவுகள் வாயிலாக தமிழின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். இவரது அடுக்குமொழிநடை பொதிகை தென்றல் போன்று அனைவருக்கும் இன்பம் ஊட்டியது.

அரசியல்

அறிஞர் அண்ணா அவர்கள் அரசியலில் செல்வதற்கு பெரியாரின் சந்திப்பு முக்கிய காரணமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு திருப்பூரில் இளைஞர் மாநாடு ஒன்று இடம்பெற்ற தருணத்தில் பெரியார் அவர்களை சந்திக்க அண்ணாதுரை அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது.

அவருடைய கொள்கைகள் அண்ணாதுரை அவர்களை மிகவும் ஈர்க்கச் செய்தது. அதனைத் தொடர்ந்து பல அரசியல் பணிகளில் ஈடுபட்டார். 1938 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயமாகி கற்பிப்பதற்கு எதிராக போராட்டத்தை செய்து கைதாகி சிறையில் நான்கு மாதங்கள் அடைக்கப்பட்டார்.

விடுதலை பெற்ற பின் சிறிது தனித்து நின்று மக்களுக்கு பல உதவிப் பணிகளை ஆற்றினார். அதன்பின்னர், 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார்.

இந்த அமைப்பின் மூலமாக மக்களுக்கு பல நற்பணிகளை ஆற்றினார். பின்னர் ராஜாஜி தலைமையிலான சுதந்திரக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பு வைத்து தேர்தலில் போட்டியிட்டு 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி தமிழ்நாட்டில் முதல்வராக தெரிவாகினார்.

முடிவுரை

அறிஞர் அண்ணா அவர்களுக்கு 1968 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகமானது “டாக்டர்” என்னும் உயரிய பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது. இவரது பணியையும் ஆக்கங்களையும் கண்டு வியந்த அமெரிக்கா நாட்டு “மேல்” பல்கலைக்கழகம் இவரை அங்கு வரவழைத்து இவருக்கு பாராட்டு விழா நடத்தியது.

இவ்வாறு பல சிறப்புகளைக் கண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 ஆம் ஆண்டு இப்பூவுலகை விட்டு விண்ணுலகம் சென்றார். அவ்வாறு அவர் உலகை விட்டு சென்றாலும் மக்கள் மனதில் தமது சிறந்த நடவடிக்கை மூலமாக எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

You May Also Like:

வாசிப்பின் முக்கியத்துவம் கட்டுரை