உடற்கல்வி என்றால் என்ன

udarkalvi in tamil

மனிதனது வாழ்க்கைக்கு ஆதாரமாய் அடித்தளமாய் விளங்குவது உடல் நலமாகும். சிறப்பாக சந்தோசமாக வாழ்வதற்கே இந்த வாழ்க்கையாகும். அந்த வகையில் உடற்கல்வியானது உடல்நலத்திற்கு உகந்த கல்வியாகும்.

உடற்கல்வியானது சமூகத்தின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு ஒற்றுமையான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்றால் அதுமிகையல்ல.

உடற்கல்வி என்றால் என்ன

உடலுக்கான கல்வி உடற்கல்வி ஆகும். J.F வில்லியம் பிரௌனஸ் என்பவர் உடற்கல்வி பற்றி குறிப்பிடும் போது “உடற்கல்வி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்களை ஒரு மனிதரைச் செய்ய வைத்து அதில் சிறப்பான எதிர்பார்க்கும் விளைவுகளைப் பெறுவதாகும்” என்கின்றார்.

அதாவது உடற்கல்வி என்பது உடலுக்கான கல்வி, உடல் மூலமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி, உடல் நலம், பலம், வளம் என்பதையே குறிப்பாகக் கொண்டு கற்பிக்கும் கல்வி ஆகும்.

உடற்கல்வியின் நோக்கம்

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, உள்ளத்தின் ஆற்றலை மேம்படுத்துவது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழ வழி செய்வது, மனிதனின் ஆளுமைத் திறனை மேம்படுத்துவது ஆகியன உடற்கல்வியின் நோக்கங்களாகக் காணப்படுகின்றன.

சிறந்த உடற்கல்வியாளராக விளங்கிய து.கு வில்லியம்ஸ் என்ற மேல்நாட்டு அறிஞர் உடற்கல்வியின் நோக்கம் பற்றி கூறியதாவது,

“உடற்கல்வியின் நோக்கமானது மனிதர்களுக்குத் திறமைவாய்ந்த தலைவர்களையும், தேவையான வசதிமிக்க வாய்ப்புக்களையும் தனிப்பட்டவர்களுக்கும் கூடிவரும் பொதுமக்களுக்கும் உடலால் முழு வளர்ச்சியும், மனதால் உற்சாகமும், முனைப்பும் சமூகத்தில் சிறந்தவர்களாகவும் விளங்கிட, வேண்டியவற்றை வழங்கிடும் சந்தர்ப்பங்களை அளித்து அற்புதமாக வாழச் செய்கின்றது” என்கிறார்.

உடற்கல்வியின் பயன்கள்

உடற் கூறுகளின் வளர்ச்சி, சமூகவியல் வளர்ச்சி, மனவெழுச்சிக் கட்டுப்பாடு, செயற்பாடுகளை இலகுவாக்குதல் போன்றவற்றை உடற்கல்வி மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தையின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதனை உடற்கல்வி மூலமாக எளிதில் கண்டு கொள்ள முடியும். விளையாட்டு மைதானத்தில் அவர்களின் திறனை கண்டறிய முடியும்.

ஒரு குழந்தையின் தாழ்வும் மனப்பாங்கு, பயம், எதற்கும் பின்வாங்கும் குணம், சோம்பேறித்தனம் முதலானவற்றை இனம் கண்டு அவற்றை களைவதற்கு உடற்கல்வி உதவுகின்றது.

உடற்கல்வியின் மூலம் விளையாட்டுத் துறையில் சிறந்த வீரனாகவோ அல்லது, வீராங்கனியாகவோ மாற முடியும். சமுதாயப் பண்புகள் செழித்தோங்க உடற்கல்வி துணை புரிகின்றது.

பல பகுதிகளிலும், பல பிரதேசங்களில் இருந்தும் தனி நபர்களை அணி அணியாக ஒன்று சேர்த்த நடைமுறையை உடற்கல்வி செய்கின்றது.

வாழ்க்கை சூழ்நிலை, வாழ்க்கைப் பின்னணி, உடை, உணவு, பேச்சு போன்ற வழக்கங்களுக்கு மாறுபட்டதாக உள்ளவர்கள் ஒன்று சேர்க்கப்படும் போது அவர்களிடையே அனுசரித்துப் போக வேண்டி இருப்பதினால் தங்கள் நடத்தைகளை சமூகத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பாக மாற்றி அமைக்க முடியும்.

உடற்கல்வியானது தெளிவான கல்வியைக் கற்றிடவும் உதவுகின்றது. எனது சமுதாயம், எனது நாடு, எனது தேசம் போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்க்க உதவுகின்றது.

You May Also Like:

மன அழுத்தம் குறைய எளிய வழிகள்