உலகில் உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும்.
உணவை வீணாக்காதீர்கள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- உலக உணவு தினம்
- உணவை ஏன் வீணாக்கக் கூடாது?
- உணவும் ஆரோக்கியமும்
- உணவு வீண்விரயத்தை தடுக்கும் வழிமுறைகள்
- முடிவுரை
முன்னுரை
உணவு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் வளர்க்கின்ற விலங்குகள், செல்லப் பிராணிகள், அவர்கள் வளர்க்கும் பறவைகள், அவர்கள் வளர்க்கும் மீன்கள் எனபவற்றிற்கும் தொடர்ந்து தேவைப்படுகிறது.
உணவு வீணாக்கல் என்பது உலகளாவிய நிலையில் வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகளிலும் கூட தேவையில்லாமல் அன்றாடம் உணவானது வீணாக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இன் கூற்றுப்படி,உலக அளவில் வருடமொன்றுக்கு மூன்றில் ஒரு பங்கு உணவு உற்பத்தியானது வீணாக்கப்படுகிறது.
உலக உணவு தினம்
உலக உணவு தினமானது 1945 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அன்று ஒவ்வொரு வருடமும் சிறப்பாக ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக உணவு தினமானது, அன்றாடம் ஒருவேளை உணவு உண்பதற்கு வழியில்லாமல் துன்பப்படும் மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் ஆடம்பர செலவின் மூலம் அதிக உணவு வீணாக்கப்படுவதை தடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் அனுஷ்டிக்கப்படுகிறது.
உணவை ஏன் வீணாக்கக் கூடாது?
உலகில் அதிகரித்து வருகின்ற சனத்தொகையினாலும், காலநிலை மாற்றத்தினாலும் விவசாய நிலங்கள் வளமிழத்தல் போன்ற செயற்பாடுகளினால் உணவு பற்றாக்குறையானது உலகெங்கும் பரவி வருகின்றது.
இதன் விளைவாக பல நாடுகள் வறுமை கோட்டிற்குள் காணப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த ஒரு சில நாடுகளில் வாழ்பவர்கள் மாத்திரமே சரியான நேரத்தில் உணவை பெற்றுக் கொள்கின்றார்கள்.
உணவு இன்மையினால் உலகில் அன்றாடம் பலர் இறந்த வண்ணமே காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இன்று வரை உணவு தட்டுப்பாடு என்பது பாரிய சவாலாகவே காணப்படுகின்றது. இவ்வாறு இருக்க வசதி படைத்த சிலர் உணவை வீண்விரயம் செய்கின்றனர்.
விளைநிலங்கள் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படுவதனால் எதிர்காலத்தில் உணவு தட்டப்பாடு என்பது பாரிய ஒரு சவாலாக அமையும் என்பதை நாம் நினைவில் கொண்டு உணவை வீணாக்காமல் செயல்படுதல் வேண்டும்.
உணவும் ஆரோக்கியமும்
“சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்று கூறுவார்கள். அதாவது நல்ல ஆரோக்கியம் நிறைந்த சமூகம் ஒன்றுதான் நல்வாழ்வினை வாழ முடியும் நிதர்சனமான உண்மை ஆகும்.
இவ்வுலகின் இயற்கை நமக்கு ஏராளமான வளங்களை தந்துள்ளது. அவற்றில் இருந்து விளைகின்ற தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை நாம் சரியான முறையில் எடுத்துக் கொள்வதன் மூலமாக எமது உடல் ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்தி கொள்ள முடிகின்றது. இதன் வாயிலாக சுறுசுறுப்பான திடகாத்திரமான மனிதர்களாக நாம் இவ்வுலகில் வாழ முடியும்.
புரதம், காபோவைதரேற்று, கொழுப்பு, விற்றமின்கள், இரும்புச்சத்து மற்றும் கனிப்பொருட்கள் போன்ற போசணைக்கூறுகள் உடலை வளமாக வைத்திருப்பதோடு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றது.
உணவு வீண்விரயத்தை தடுக்கும் வழிமுறைகள்
உணவானது வீண்விரயமாவதை தடுக்கும் வழிமுறைகளாக பின்வருவனவற்றை நோக்கலாம்.
- தேவையான பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை மட்டும் சந்தைகளில் இருந்து பெற்றுக்கொள்ளல்.
- உணவு பொருட்கள் பழுதடையாமல் சரியான முறையில் சேமித்து வைத்தல்.
- உணவுகளை தேவைக்கேற்ப அளவாக சமைத்தல்.
- பதப்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துதல்.
- வீட்டில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு உணவை தயார் செய்தல்.
- மீதமுள்ள உணவு பொருட்களை சேகரித்து உரம் உருவாக்குதல்.
முடிவுரை
“உணவே மருந்து” என்ற கூற்றுக்கு ஏற்ப உணவு ஆனது மருந்துக்கு நிகரானது ஆகும். உணவை வீண்விரயம் செய்வதனால் பல உயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றது என்பதை அறிந்து உணவை வீணாக்காமல் சரியான முறையில் விழிப்புணர்வுடன் செயல்படுதல் ஒவ்வொருவரின் கடமையாகும்.
You May Also Like: