உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

uzhavu thozhil katturai

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

மக்களுக்கு உணவு உற்பத்தி செய்யும் மகத்தான தொழிலாக உழவு தொழில் விளங்குகின்றது. கிராமப் புற மக்கள் தம் உழவுத் தொழிலை விட்டு நகர்புற வாழ்வை நோக்கி அதிகமாக மக்கள் நகர்வதால் பல நாடுகளில் உணவு உற்பத்தி வீழ்ச்சி கண்டு வருகின்றது.

உழவுத் தொழில் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. உழவு இல்லையேல் உணவு இல்லை.
  3. உழவுத் தொழிலின் மகிமை.
  4. உழவுத் தொழில் பற்றிய் வள்ளுவர் வாக்கு.
  5. உழவுத் தொழில் அவற்றின் ஒளவையார் வாக்கு.
  6. உழவுத் தொழில் பற்றிய் பிரச்சினைகள்.
  7. உழவுத் தொழிலை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.
  8. முடிவுரை.

முன்னுரை

ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவும் இல்லை” என்ற வாக்கிற்கு இணங்க உழவுத் தொழிலை விட மகிமையான தொழில் உலகில் எதுவும் இல்லை. உலகில் எந்த தொழிலை செய்தாலும் உழவுத் தொழிலை போல் சிறந்த தொழில் வேறேதுவுமில்லை.

குறிப்பாக இந்தியாவில் சங்க காலம் தொடக்கம் இன்றுவரை வளர்ச்சியைக் கொடுக்கும் தொழில் உழவுத் தொழிலாகவே காணப்படுகின்றது. இந்த உழவு தொழிலை வேளாண்மை என்றும் விவசாயம் என்றும் அழைப்பர்.

இவ்வாறான உழவுத் தொழிலின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவ்வகையில் உழவுத் தொழில் பற்றிய விடயங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

உழவு இல்லையேல் உணவு இல்லை

விவசாயி சேற்றில் கை வைக்காமல் நாம் சோற்றில் கை வைக்க முடியாது” விவசாயிகள் நெல்லை விதைக்காவிடில் நாம் உணவு உண்ண முடியாது. நம் உணவுச்சங்கிலியின் ஆரம்பம் விவசாயத்திலேயே தங்கி உள்ளது.

உழவர்கள் உழவுத் தொழிலை தங்களுக்காக அன்றி ஏனையவர் உணவு உண்ண வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்கின்றனர். இந்தியாவில் கிராமப்புற மக்களால் மேற்கொள்ளப்படும் விவசாயத்தை நம்பியே ஒட்டு மொத்த இந்திய மக்கள் வாழ்கின்றனர்.

கிராமப் புற மக்கள் விவசாயத்தை கைவிட்டார்களெனின் இந்தியருக்கு உணவுப்பஞ்சம் ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உழவு இல்லையேல் உணவு இல்லை.

உழவுத் தொழிலின் மகிமை

உழவுத் தொழிலைப் போன்ற தொழில் உலகில் வேறெந்த தொழிலும் இல்லை. உழவால் உயராத நாடே இல்லை என்றே கூறலாம். உழவுத் தொழிலின் மகிமை கூறும் இலக்கியங்கள் பல உள்ளன. அவ்வளவுக்கு உழவு என்பது உன்னதமானது.

உழவுத் தொழில் பற்றிய வள்ளுவரின் வாக்கு

உழவுத் தொழில் பற்றி பலர் போற்றியுள்ளனர். அவ்வாறு போற்றியவர்களில் திருவள்ளுவரும் ஒருவராவார். இவர் தன் நூலான திருக்குறளில் 104 வது அதிகாரத்தில்  சிறப்பித்து போற்றியுள்ளார்.

இவர் உழவுத் தொழிலைப் பற்றி கூறுகையில்“ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்”  என்கிறார்.

அதாவது உலகத்துக்கு உழவு செய்து உணவளித்து வாழும் மக்களே சிறந்தவர். மற்றவர் எல்லோரும் அவரை வணங்கியே வாழ வேண்டும் என்கிறார்.

இவ்வாறு அவர் 104 வது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளிலும் உழவின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார்.

உழவுத் தொழில் பற்றிய ஔவையாரின் வாக்கு

வள்ளுவர் மட்டுமல்ல ஔவையாரும் தன் வாக்கின் ஊடாக உழவுத் தொழிலின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். அவ்வகையில் அவர் “உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்…”

அதாவது உழவுத் தொழிலுக்கு ஒப்பான தொழில் வேறெதுவுமில்லை என்கிறார். அரச சபையில் தொழில் செய்பவர்க்கு கூட ஓய்வு உண்டு ஆனால் உழவுத் தொழில் செய்பவர்க்கு ஓய்வே இல்லை. அவர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பார்கள் என்கிறார்.

மேலும் “ வரம்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயர்வான், கோல் உயர கோன் உயர்வான்” என உழவுத்தொழிலின் மகிமை பற்றி கூறியுள்ளார்.

இவ்வாறு இவர்கள் மட்டுமல்ல கம்பர் போன்ற பல புலவர்கள் உழவின் சிறப்பைப் பற்றி கூறியுள்ளனர்.

உழவுத் தொழில் பற்றிய பிரச்சினை

உழவுத் தொழில் என்பது பல சிறப்பினைப் கொண்டு காணப்பட்டாலும் தற்கால சந்ததியின் மத்தியில் உழவுத்தொழிலானது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றது.

அதாவது இந்தியாவைப் பொருத்தமட்டில் கிராமப் புறங்களை ஒட்டியே உழவுத் தொழில் வளர்கின்றது. ஆனால் தற்காலத்தில் கிராமம்புற மக்கள் நகர்புறங்களை நோக்கி செல்கின்றமையால் உழவுத் தொழில் அங்கு தடைப்படுகின்றது.

மேலும் உழவு செய்யும் மக்களுக்கு போதிய ஊதியம் கிடைக்காமையினால் அவர்கள் உழவுத் தொழிலை கைவிட வேண்டியுள்ளது.

மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக விவசாயம் பாதிப்படைகின்றது இதற்கான சரியான தீர்வின்மை பாரிய பிரச்சிணையாகக் காணப்படுகின்றது. இவ்வாறான பல பிரச்சினைகள் உழவுத் தொழிலுக்கு ஏற்படுகின்றன.

உழவுத் தொழிலை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

உழவுத் தொழில் செய்பவர்கள் தற்காலத்தை பொருத்தமட்டில் குறைவாகவே காணப்படுகின்றனர். எனவே உடலை வருத்தி உழவுத் தொழில் செய்யும் உழவாளிகளுக்கு தகுந்த சன்மானங்களை வழங்க அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்.

உழவர்கள் என்றும் சமூக மத்தியில் புகழப்பட வேண்டும். விவசாயத்திற்கு ஏற்ற இலகுவான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்ற காப்புறுதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறான வசதிகளை உழவர்களுக்கு செய்தால் உழவுத் தொழில் பாதுகாக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

முடிவுரை

நிலத்தைப் பண்படுத்தி உணவை உற்பத்தி செய்து ஏனையவரின் பசியாற்றும் உழவுத் தொழிலின் மகிமை அறிந்து அதனை குன்றவிடாமல் கண்ணின் மணியைப் போல பாதுகாத்து உழவுத் தொழிலை உயர்த்துவோம்.

“உழவார் உலகத்தார்க்கு ஆணி”

You May Also Like:

மானாவாரி என்றால் என்ன