எமது நாடு இலங்கை கட்டுரை

இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்ற தீவுகளுள் “இந்து சமுத்திரத்தின் முத்து” என வர்ணிக்கப்படுகின்ற எமது நாடான இலங்கை நீர் வளம், நில வளம், மலை வளம், கடல் வளம் என அனைத்து வளங்களும் ஒருங்கே அமையப்பெற்ற எழில்மிகு நாடாகும்.

எமது நாடு இலங்கை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மறுபெயர்கள்
  • சமயம்
  • அரசாங்கம்
  • தேசியம்
  • பொருளாதாரம்
  • முடிவுரை

முன்னுரை

வரலாற்றின் நினைவுகளுக்கும் முந்தைய காலப் பகுதியில் இருந்தே இலங்கை நாடானது அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாச்சாரம் என்பவற்றின் விளைவாக உலகம் முழுவதிலும் காணப்படும் ஏனைய நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் அழகிய தீவாக காணப்படுகிறது.

மறுபெயர்கள்

இலங்கை நாடானது ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. அவையான ஈழம், இரத்தினதுவீபம், தப்ரபேன், ஸ்ரீலங்கா, தம்பபன்னி, இலங்காபுரி, லங்கா, லங்காவ, செயிலான், நாகதபம் மற்றும் சிலேன் என்பனவாகும்.

சமயம்

இலங்கை நாட்டில் பன்முக சமயம் காணப்படுகிறது. அதாவது இங்கு இந்து, முஸ்லிம், பௌத்தம், கிறிஸ்தவர் என பல மதத்தவர்கள் பரவி காணப்படுகின்றனர். இவர்களுள் பௌத்த மதத்தவர்களே அதிகமானோராவர்.

அரசாங்கம்

இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியது ஆகும். இங்கு விகிதாசார தேர்தல் முறைகளான மக்கள் வாக்களிப்பின் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படுகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் மக்களின் வாக்கெடுப்புகளின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார்.

பாதுகாப்புத்துறை உட்பட நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது. பல கட்சி முறையைக் கொண்ட அரசாங்கம் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே தெரிவு செய்யப்படுகிறது.

தேசியம்

இலங்கையின் தலைநகராக ஸ்ரீஜெயவர்த்தனபுர கோட்டையும், வர்த்தக தலைநகரமாக கொழும்பு நகரும் காணப்படுகிறது. தேசிய பறவை காட்டுக்கோழி ஆகும். தேசிய விலங்கு மர அணிலாகும். தேசிய மரம் நாகமரம் ஆகும்.

தேசிய மலர் நீலோற்பலம் ஆகும். தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டம் ஆகும். தேசிய வனம் சிங்கராஜா வனமாகும். மற்றும் இயற்கையாக அமையப்பெற்ற துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுகிறது.

பொருளாதாரம்

இலங்கை கடலால் சூழப்பட்டுள்ள போதிலும் அதன் மத்தியில் உயர்ந்த மலைத்தொடர்கள் இருக்கின்றன.

இங்குள்ள மலைத்தொடர்களில் பேதுருதாலகால மலையே அதி உயர்ந்த மலையாகும். இம்மலைத் தொடர்களில் இருந்து பல ஆறுகள் உற்பத்தியாகி எமது நாட்டை வளமுறச் செய்கின்றன.

எமது நாட்டில் பாய்ந்து ஓடும் நதிகளில் மகாவலி கங்கை நதியே மிகவும் நீளமான நதியாகும். மற்றும் எமது நாடு ஒரு விவசாய நாடாகும். இங்கு தேயிலை, ரப்பர், தென்னை ஆகிய பொருட்கள் பிரதானமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிகச்சிறந்த தேயிலை வகைகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலையும் ஒன்றாக காணப்படுகிறது.

நமது நாட்டில் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை பிரதிபலிக்கும் முகமாக சீனித்தொழிற்சாலை, சீமந்துத்தொழிற்சாலை, புடவை ஆலை, இரசாயன பொருள் தொழிற்சாலை, ஒட்டுப்பலகை தொழிற்சாலை ஆகிய கைத்தொழிற் சாலைகள் காணப்படுகின்றன. அத்துடன் இங்கு பல ஆடை கைத்தொழிற்சாலைகளும் தற்காலத்தில் பரவலாக அமைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

எமது நாட்டில் காணப்படுகின்ற இயற்கை வளங்களின் அமைப்புகள் மற்றும் பண்பாட்டு அமைவிடங்கள் வெளிநாட்டவரை பெரிதும் கவருகின்றது. இதனால் உலகெங்கிலும் காணப்படுகின்ற மக்கள் அதிகப்படியாக எமது நாட்டிற்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்கின்றனர்.

பல்வேறு சிறப்புகளை கொண்டு காணப்படுகின்ற எமது நாட்டை மேலும் வளர்ச்சி பெற செய்வதற்கு எம்மவர்களது பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.

You May Also Like:

மாணவர்களின் கடமைகள் கட்டுரை

அறிவை விரிவு செய் கட்டுரை