ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை

olukkam viluppam tharum

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை

ஒருவர் எவ்வளவு சிறந்து விளங்கினாலும் அவரிடம் ஒழுக்கம் இல்லையென்றால் அவரின் சிறப்புகளில் பயனில்லை. ஒழுக்கம் என்பது ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய உயரிய குணமாகும்.

ஒழுக்கம் விழுப்பம் தரும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஒழுக்கத்தின் முக்கியத்துவம்
  • ஒழுக்கப் பண்புகள்
  • ஒழுக்கம் நன்மை பயக்கும்
  • தீய ஒழுக்கத்தின் கேடுகள்
  • நல்லொழுக்கத்திற்கான சான்று
  • முடிவுரை

முன்னுரை

‘’ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்’’

அதாவது, ஒழுக்கம்‌ உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின்‌ தன்மையாகும்‌. ஒழுக்கம்‌ தவறுதல்‌ இழிந்த குடிப்பிறப்பின்‌ தன்மையாகிவிடும்‌ என்ற திருக்குறள் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

ஒழுக்கத்தின் முக்கியத்துவம்

ஒழுக்கம் என்பது நீதி நூல்களில் சொல்லப்பட்ட விதிகளின் படியும் பெரியோர் நடந்து காட்டிய படியும் ஒழுகுவதாகும். நல்லொழுக்கம் என்பது நன்னடத்தையைக் குறிக்கும்.

முன்னோர்கள் ஒருவரது வாழ்க்கையில் நான்கு படிகளை அமைத்தனர். அவை பிரம்மச்சாரிய வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, வானக வாழ்க்கை, துறவு முததலியனவாகும்.

ஒவ்வொரு படிகளிலும் கைக்கொண்டு ஒழுக வேண்டிய ஒழுக்க நெறிகளையும் உறைத்துச் சென்றனர். பொதுப்படக் கூறின் ஒழுக்க நெறிகள் அனைத்தும் மக்களை நல வாழ்விற்கு இட்டுச் செல்கின்றன.

ஒழுக்கப் பண்புகள்

அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, அண்ணன், ஆசிரியர் இவர்களை உயர்வாக மதித்து வழிபடும் ஒழுக்கம் முற்காலத்தில் நிலவியது.

திருவள்ளுவர் முதலிய சான்றோர் அன்புடைமை, அருளுடைமை, இன்சொற்கள் பேசுதல், இனியது செய்தல், செய் நன்றி பாராட்டுதல், சினம் கொள்ளாமை, அடக்கம் பேணுதல், பொறுமை காத்தல், அழுக்காறு இன்மை, ஆசை இன்மை, புறம் கூறாமை, உண்மை பேசுதல், உயிர்கள் மீது இரக்கம் காட்டுதல் முதலியவை ஒழுக்கப் பண்புகளாகும்.

ஒழுக்கம் நன்மை பயக்கும்

எமது உயிரினும் பார்க்க ஒழுக்கம் மேலானது. அது எம்மை வழி நடத்திச் செல்கின்றது. நாம் செய்யும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் அதுவே காரணமாக இருக்கின்றது. தீமை துன்பத்தை தருகின்றது, நன்மை இன்பத்தை தருகின்றது. நல்ல ஒழுக்கம் என்றும் நன்மையே செய்யும். இன்பத்தை விளைவிக்கும்.

எமது தமிழ் சான்றோர் நல்லவற்றை செய்ய இயலாவிடினும் தீயதை செய்யாமலும், ஏவாமலும் இருக்கும் படி கூறிச் சென்றுள்ளனர்.

தீய ஒழுக்கத்தின் கேடுகள்

நல்ல ஒழுக்கம் நன்றிக்கு வித்தாகும். அதாவது, இன்பமான வாழ்விற்கு காரணமாக அமைகிறது. தீய ஒழுக்கம் எப்பொழுதும் துன்பம், கவலை, பிணி இவற்றை உண்டு பண்ணும்.

சிலர் குறுக்கு வழியில் சென்று பணம் திரட்டுவர், மது,போதைப்பொருள் போன்றவற்றிற்கு அடிமையாகுவர், பிறர் மனை விரும்புவர் இவை எல்லாம் தீய ஒழுக்கத்தின் கேடு தரும் விளைவுகள் ஆகும்.

தீய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள் பிற்காலத்தில் துன்பத்தில் வருந்துவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கத்திற்கான சான்று

அரிச்சந்திரன் எத்தனையோ சோதனைக்கு இடையிலும் உண்மை பேசுதலாகிய ஒழுக்கத்தை இறுதி வரை பாதுகாத்து வாழ்ந்தார். அந்த  நல்ல ஒழுக்கம் முடிவில் அவருக்கு இழந்த நாட்டையும், மகனையும், மனைவியையும் தந்து உறு துயர் நீக்கி இன்பம் நிறைந்த வாழ்க்கையை அளித்தது.

சிலர் பிறர் இடத்தில் உள்ள குற்றங்களை விமர்சிக்க காண்கிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்கள் முதலில் தம் இடத்தில் உள்ள குற்றங்களை  எண்ணிப் பார்த்து தீர்த்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

வள்ளுவர் பெருமான், ஒவ்வொருவரும் பிறர் ஆக்கம் கண்ட போது பொறாமை கொள்ளாது இருக்கும் பண்பை ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பொறாமை உடையவர்களிடத்தே தரித்திரம் தான் தாண்டவம் ஆடும். நல்ல ஒழுக்கம் இல்லாதவர்கள் மேம்பாடு அடைதல் இயலாது. வேதனையும் விரக்தியும் தான் கிடைக்கும்.

நல்லொழுக்கம் உடையவர்களை உயர் கடி பிறந்தோர் என்று ஏடும், நாடும் போற்றும். அது அற்றவர்களை இழிந்தோர் என்று பழி தூற்றும். எனவே நாம் ஒழுக்கம் பேணி உயர்வாக வாழ்வோமாக.

You May Also Like:

இயற்கை வளங்கள் கட்டுரை