கடல் வளம் பற்றிய கட்டுரை

kadal valam katturai in tamil

இந்த பூமியின் பெரும் பகுதி கடலால் சூழ்ந்து காணப்படுகின்றது. இந்த கடலானது பல பயன்மிகு வளங்களை தருகின்றது. அதுமட்டுமின்றி போக்குவரத்திற்கும் பெரும் உதவியாக இருக்கின்றது.

கடல் வளம் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. கடல்
  3. கடல் வளங்கள்
  4. கடல் வளங்களின் நன்மைகள்
  5. கடல் மாசடைதல்
  6. முடிவுரை

முன்னுரை

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழப்பட்ட அலைகடல் பூமிப்பந்தின் பொக்கிஷம் ஆகும். உலகின் பெரும்பாகம் கடலால் சூழப்பட்டது. கடல் என்பது அழகியல் அம்சங்கள் பல நிறைந்த பகுதி ஆகும்.

அத்துடன் கடல் பல உயிரினங்களின் வாழ்விடமாக இருப்பதுடன் பல வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் கடல் வளங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இத்தகைய அருமையான வளம் மனிதனது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மாசடைகின்றது.

கடல்

பூமியின் மூன்றில் இரண்டு பங்கு கடலால் சூழப்பட்டது. இந்தியா 7517 கிலோமீட்டர் நீள கடற்கரைக்கு சொந்தமான நாடு ஆகும். இந்தியாவின் மேற்கே அரபிக்கடலும், கிழக்கே வங்காள விரிகுடாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலாலும் சூழ்ந்து காணப்படுகிறது.

உலகின் மேற்பரப்பில் அமைந்துள்ள பெருநீர்ப்பரப்பு ஐந்து பெருங்கடல்களாக பிடிக்கப்பட்டுள்ளது. தமிழில் கடலை முந்நீர் என்று குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் ஆற்று நீர், மழை நீர், நிலத்தடி நீர் ஆகிய மூன்று மூலங்களிலிருந்து கடலானது நீரைப்பெறுவது ஆகும்.

கடலின் மேற்பரப்பு ஒன்றாக காணப்பட்டாலும் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ள கடல் நீரின் வெப்பநிலை, உப்பின் அளவு, அடர்த்தி ஆகியன வேறுபடுகின்றன.

கடல் வளங்கள்

கடலில் கண்ணுக்கு தெரியாத பக்டீரியா முதல் பாரிய திமிங்கிலம் வரை பலதரப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. கடலில் உப்பு, மக்னீசியம், புரோமின், கந்தகம், தங்கம், இரும்பு, தகரம், பொட்டாசியம், யுரேனியம் போன்ற பல கனிப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ 1.5 கோடி இந்திய மக்களின் வாழ்வாதாரமாக மீன்பிடித்தொழில் விளங்குவதோடு ஆண்டுக்கு பல லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றது.

எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக்களும் கடலுக்கடியில் இருந்து கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் கிணறுகள் மும்பையில் இருந்து 160 கிலோமீட்டர் மேற்கே அரபிக் கடலின் கீழுள்ள “பாம்பே ஹை” என்ற பகுதியில் கிடைக்கிறது.

கடலில் நிலவும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப பவளங்கள் மற்றும் பவளப்பாறைகள் உருவாகின்றன. அதற்கான சூழ்நிலை இல்லாதவிடத்து கடல் உயிரினங்கள் மறைந்த பிறகு கடலின் அடியில் படிந்து சுண்ணாம்பு கற்களாக மாறுகின்றன.

கடலின் அடியிலிருந்து தூண்களை ஊன்றி காற்றாலைகள் மூலம் மின்னுற்பத்தி செய்ய முடியும். அது தவிர கடற்கரை மன ஆற்றுப்படுத்தலுக்கு ஒரு சிறந்த இடம் ஆகும்.

கடல் வளங்களின் நன்மைகள்

கடலின் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. கடலை பூமியின் நுரையீரல் என்று கூறுமளவிற்கு மரங்களை விட கடலே அதிகளவு காற்றை உற்பத்தி செய்கிறது. கடலை நம்பி பல மீனவ குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

கடலிலிருந்து பெறப்படும் கனிம வளங்கள் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கையின் அழகிய கொடையான கடல் சுற்றுலாதளமகவும் வருவாயை ஈட்டித்தருகிறது.

நண்டு, இறால், மீன், கணவாய் போன்ற கடல் உணவுப் பொருட்களை எமக்களித்து ஆரோக்கியத்துக்கு வலுவூட்டுகிறது. போக்குவரத்து மேற்கொள்வதற்கான ஊடகமாகவும் கடல் தொழிற்பட்டு வணிக நடவடிக்கைகளை இலகுபடுத்துகிறது.

கடல் மாசடைதல்

கடல் எமக்கு பலதரப்பட்ட நன்மைகளை செய்தாலும் மனிதர்களது சுயநல நோக்கினால் தொழிற்சாலை மற்றும் இதர கழிவுகளை கடலில் கலப்பதன் மூலமாக கடலை மாசுபடுத்துகிறோம்.

இதனால் கடல் வாழ் உயிரினங்களும் இன்னல்களை எதிர்கொள்கிறது. கடலிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களும் நச்சுத்தன்மை அடைகின்றன.

கப்பல் போக்குவரத்து, அளவுக்கு மீறிய மீன்பிடி, எண்ணெய் துறப்பணம், துறைமுக கட்டுமானம், கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலத்தல் போன்ற காரணங்களாலும் கடல் மாசுபடுகிறது.

முடிவுரை

கடல்களால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாது. மீனவத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான உணவு, தூயகாற்று போன்றவற்றையும் வழங்கும் கடல் வணிக நடவடிக்கைகளுக்கும் பாரிய பங்காற்றுகிறது.

மனித சமூகத்திற்கு கடல் வழங்கும் எண்ணற்ற செல்வங்களை இனங்கண்டு அதனைச் சிறப்பிக்கும் வகையில் உலகப் பெருங்கடல்கள் நாள் ஜூன் 8ம் திகதி அனுசரிக்கப்படுகிறது. இத்தகைய அரிய இயற்கை வளத்தை மாசுபடுத்தாமல் பராமரிக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.

You May Also Like:

நெகிழி மறுசுழற்சி கட்டுரை