சிறுசேமிப்பு பேச்சு போட்டி

அனைவருக்கும் எனது மனம் கனிந்த வணக்கத்தினை தெரிவித்து கொள்கின்றேன். சிறுதுளி பெரு வெள்ளம் என்பது ஒரு பழமொழியாகும். சிறியதாக சேமித்து வைக்கும் பழக்கமே என்றாவது ஒரு நாள் பாரிய சேமிப்பிற்கு வழிவகுக்கும் என்ற வகையில் இன்று சிறு சேமிப்பு பற்றியே பேசப்போகிறேன்.

சிறுசேமிப்பு

சிறுசேமிப்பு என்பது நாம் சம்பாதித்த பணத்தில் ஒரு சிறிய தொகையினை சேமித்து வைப்பதாகும். வாழ்வில் அனைத்தையும் செலவு செய்து விடாமல் சிறுசேமிப்பு செய்வது அவசியமானதொன்றாகும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதானது சிறுசேமிப்பின் அவசியத்தை எமக்கு உணர்த்துகின்றது.

முக்கியத்துவமிக்க சிறுசேமிப்பு

சிறுசேமிப்பு பழக்கமானது எமது வாழ்வில் சிக்கலானதொரு சூழலில் உதவக் கூடியதாக இருக்கும். நாம் சேமித்து வைத்த பணமானது எமக்கு எதிர்காலத்தில் ஏற்படுகின்ற எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படக் கூடியதாக காணப்படும்.

பல்வேறுபட்ட செலவுகளை சமாளித்து கொள்ளவும் தொழில் ரீதியாக முன்னேற்றம் அடையவும் சேமிப்பானது உதவுகின்றது. நாளை வரப்போகும் மழையை அறிந்து எவ்வாறு எறும்புகள் இன்றே உணவுகளை சேமித்து வைக்கின்றதோ நாமும் அதுபோல் சேமித்து வைக்க பழகிக் கொள்ள வேண்டும்.

பணமானது இன்று ஒருவருடைய வாழ்வில் மிக பிரதானமான இடத்தினை வகித்துள்ளது. இவ்வாறானதொரு சூழலில் வீண் செலவுகளை மேற்கொள்ளாது சேமித்து வைப்பதானது எமது தேவையின் போது எமக்கு பயனளிக்க கூடியதாகும்.

பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தினை அடைந்து கொள்வதற்கு சேமிப்பானது பக்கபலமாக அமைகின்றது.

சிறுசேமிப்பும் மனித வாழ்வும்

மனித வாழ்வில் இன்று அத்தியவசியமான ஒரு விடயமாக சேமிப்பானது காணப்படுகின்றது. சேமிப்பினூடாகவே ஒரு மனிதன் சமூகத்தில் சிறந்த அந்தஸ்த்தை பெற்றுக் கொள்கின்றான்.

ஏனெனில் மனிதனானவன் ஒரு தேவை ஏற்படுகின்ற போது பிறரிடம் கையேந்தாது தனது சொந்த சேமிப்பில் இருந்தே தனது தேவையினை பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

சேமிப்பு என்ற ஒன்றை கடைபிடிக்கும் போதே ஒரு தனி மனிதனானவன் தனது வாழ்வில் ஏற்படும் பணக் கஸ்டங்களை பூர்த்தி செய்யக் கூடியவனாக மாறுகின்றான். சேமிப்பு என்ற ஒன்று இருக்கும் போது எமது வாழ்வானது சிறப்பான எதிர்காலத்தை நோக்கி செல்ல கூடியதாக காணப்டும்.

சிறு வயதிலிருந்தே சேமிப்பினை கடைபிடித்து வரும் ஒருவருடைய எதிர்காலமானது சுபீட்சமானதாகவும் வளமானதாகவும் காணப்படும். ஒவ்வொருவரும் தத்தமது வாழ்வில் சேமிப்பினை கடைபிடித்தல் அவசியமாகும்.

அதாவது “இல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள் செல்லாது அவன் பேச்சு” என்ற முதுமொழியினூடாக இவ்வுலகமானது ஒருவரிடம் எந்தளவு பணம், பொருள் இருக்கின்றது என்பதனை வைத்தே ஒருவருக்கு சிறந்த அந்தஸ்த்தினை வழங்குகின்றதே தவிர எதுவுமில்லாத ஒருவனுக்கு சமுதாயத்தில் எதுவித அந்தஸ்த்தும் கிடைப்பதில்லை.

மனித வாழ்வின் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் முக்கியமானதொன்றாக சிறுசேமிப்பே காணப்படுகின்றது.

சேமிப்பதற்கான வழிகள்

சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் எவ்வளவு அதிகமான செலவுகள் ஏற்பட்டாலும் அதனுள் சிறுசேமிப்பை மேற்கொள்பவராகவே காணப்படுவார். அந்த வகையில் சேமிப்பதற்கான வழிகள் பல்வேறுபட்டதாக காணப்படுகின்றன.

சேமிப்பினை மேற்கொள்கின்ற ஒருவர் வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தினை பேணக் கூடியவராக காணப்படல் வேண்டும்.

எமது செலவுகளில் அதிகப்படியான செலவுகள் எவற்றில் ஏற்படுகிறது என்பதனை கண்டறிந்து அதனை விட்டு விலகியிருத்தல் வேண்டும். இன்று பல்வேறு நிறுவனங்கள் சேமிப்பினை ஊக்கப்படுத்த கூடியதாக காணப்படுகின்றன.

அதாவது ஆயுள் காப்புறுதி நிறுவனங்கள், சேமிப்பு திட்டங்கள் என பல்வேறு நிறுவனங்கள் சேமிப்பினை வளர்ப்பதற்கு உந்துதலாக திகழ்கின்றன.

சிறுக சிறுக சேமிப்பதே செழிப்பான வாழ்விற்கு சிறந்தது என்பதினூடாக ஒவ்வொருவரும் இன்றிலிருந்தே சிறுசேமிப்பினை தொடங்குவோம்.

You May Also Like:

குடியரசு தினம் பற்றிய பேச்சு போட்டி

போதை பொருள் விழிப்புணர்வு பேச்சு போட்டி