சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை

sutru sulal pathukappu manavargalin pangu

நாம் வாழும் இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் எனில் சுற்றுச்சூழலை சீராக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் கல்வி அறிவு குறைந்த சமூகங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கட்டாயக் கடமையாகவே சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் காணப்படுகின்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் பங்கு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்
  • சுற்றுச்சூழல் மாசடைதல்
  • சுற்றுச்சூழல் மாசடைவதனால் ஏற்படும் பிரச்சனைகள்
  • சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள்
  • முடிவுரை

முன்னுரை

சுற்றுச்சூழல் எனப்படுவது எம்மைச் சூழவுள்ள காடுகள், மலைகள், ஆறுகள், கடல் போன்ற இயற்கை பரப்புகளை குறிப்பதாகும். இன்று இயந்திரமயமான உலகில் கைத்தொழில் சாதனங்களினாலும், தொழிற்சாலைகளின் வளர்ச்சியினாலும் இந்த இயற்கை பரப்புகள் பாதிக்கப்படுகின்றன.

எனவே நாம் வாழும் சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருந்தாலே நாமும் நீண்ட காலம் வாழ முடியும், என்பதனை கருத்தில் கொண்டு இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மாணவர்களதும் கடமையாகும்.

சுற்றுச்சூழலின் முக்கியத்துவம்

ஒரு போர் வீரனை அவனது போர்க்கவசம் போர்க்களத்தில் எவ்வாறு பாதுகாக்கின்றதோ, அதேபோன்றுதான் சுற்றுச்சூழலும் மனிதனை பாதுகாக்கின்றது.

அதாவது சூரியனிலிருந்து வரும் தீயகதிர் வீச்சுகளிலிருந்து ஓசோன் படை புவியை பாதுகாப்பதோடு, காற்றின் வேகத்தை குறைப்பதாக சமுத்திரங்கள் காணப்படுகின்றன.

மேலும் எம்மால் பாலைவனத்திலோ அல்லது பனிப்பாறைகளின் நடுவிலோ வாழ முடியாது. எனவே எம்மைச் சூழவுள்ள மரஞ்செடி, கொடிகள் நிறைந்த சுற்றுச்சூழல் முக்கியமானதாகவே காணப்படுகின்றது.

சுற்றுச்சூழல் மாசடைதல்

இன்று மனிதர்கள் பல்வேறு துறைகளிலும் நாகரிக வளர்ச்சி பெற்றுள்ளனர். இந்த அசுர வளர்ச்சியானது எமது சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்வதனை யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.

இந்த வரிசையில் உலகில் 75% காணப்படும் நீர் பரப்பானது இன்று தொழிற்சாலை கழிவுகளினாலும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் இரசாயனங்கள் நீரில் கலப்பதனாலும் மாசடைகின்றது.

இவ்வாறு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை நிலத்தில் புதைப்பதனாலும், சட்டவிரோதமான மண் அகழ்வினாலும் நிலம் மாசடைகின்றன.

மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் நச்சுப்புகைகளினாலும், வாகன புகைகளினாலும் காற்று மாசுபடுகின்றன. இவ்வாறாக நாம் வாழும் சூழல் மாசுபடுத்தப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசடைவதனால் ஏற்படும் பிரச்சனைகள்

எமது முன்னோர்கள் பெற்றிருந்த ஆரோக்கியத்தினை எம்மால் தற்காலங்களில் ஒருபோதும் பெற முடியாமல் உள்ளதற்கு மிகவும் பிரதான காரணமே எமது சுற்றுப்புற சூழலை நாமே மாசுபடுத்துவதாகும்.

அதாவது வாகன புகைகளினால் மாசுபட்ட வளியினை நாம் சுவாசிப்போமே ஆனால் அது புகைப்பிடித்தலுக்கு சமமாகின்றது. மேலும் இயற்கையாகவே கிடைத்த அருட்கொடையான நீர் தற்காலங்களில் விலைக்கு வாங்கப்படுவதும் சூழல் மாசின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய பிரச்சினையாகும்.

அத்தோடு ஆடம்பர வாழ்க்கைகளுக்கு ஆசைப்பட்டு மக்கள் காடுகளை அழித்து நகரமாக்குவது, வெப்பத்தை அதிகரிப்பதாக காணப்படுகின்றது. இவ்வாறு மனிதர்களின் செயற்பாடுகளின் மூலமே சூழல் மாசடைந்து நாம் அழிவு பாதையை நோக்கிச் செல்கின்றோம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள்

நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மாணவர்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும். எனவே மாணவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு தங்களது சூழலை மாசுபடுத்தாது பாதுகாக்க வேண்டும்.

அதற்காக உக்கும் குப்பைகள், உக்காத குப்பைகள் என குப்பைகளை பகுத்து அவற்றை உரிய முறையில் கழிவு தொட்டிகளில் இட வேண்டும், இயற்கையை பாதுகாக்கும் வகையில் வீட்டுத் தோட்டங்களை அமைத்து, அதில் மரக்கன்றுகளை வளர்த்தல், முடியுமான அளவு பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனைகளை குறைத்துக் கொள்ளுதல்

மற்றும் மாணவர்கள் பாடசாலை செல்வதற்காக பொதுப் போக்குவரத்துக்களை பயன்படுத்துதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் மாணவர்களால் சூழலினை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

அனைத்து உயிரினங்களுக்கும் சூழல் வாழிடமாக காணப்படுவதனால், அதனை பாதுகாப்பது அனைவரதும் கடமையாகும்.

எனவே மாணவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை சமூகத்துக்கு ஏற்படுத்துவதோடு, எம்மால் முடியுமான அளவு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

You May Also Like:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய கட்டுரை