தமிழின் முதல் கள ஆய்வு நூல்

பெரியபுராணம்

தமிழின் முதல் கள ஆய்வு நூல் என சிறப்பிக்கப்படுவது பெரியபுராணமாகும் இது பொருங்காப்பிய இலக்கணங்களை கொண்டமைந்ததாக இயற்றப்பட்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

பெரியபுராணம்

பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழர் ஆவார். செயற்கு அரிய செய்வர் பெரியார் எனும் குறள் வரிக்கேற்ப 63 நாயன்மார்கள் புரிந்த இறைபக்தியையும், தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் ஒரு நூலாக பெரியபுராணம் அமைந்துள்ளது.

இந்நூலானது பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையை விபரிக்கின்றது. இந்நூலானது இடைக்கால இலக்கியத்தில் மக்களின் வாழ்க்கை பற்றிய வரலாற்றை அரிந்து கொள்ள உதவுகின்றது.

பெரிய புராணத்தின் சிறப்புக்கள்

பெரியபுராணமானது பிறமொழிக் கதைகளை தழுவாமல், தமிழ் மக்களையும், தமிழக சூழலையும் மையமாக கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களை போலவே பெரியபுராணம் எனும் நூல் சிறப்புற்று விளங்குகின்றது.

அதாவது ஆண், பெண் வேறுபாடின்றி பல இனங்களையும் தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களை பற்றிய ஒரு நூலாக காணப்படுவதால் இந்நூலினை தேசிய இலக்கியம் என சான்றோர்கள் பாராட்டுகின்றனர்.

தமிழ் மொழியின் முதல் கள ஆய்வு நூலாகவும் பெரியபுராணமே திகழ்கின்றது. மேலும் திருமுறைகளின் தொகுப்பில் பனிரெண்டாவது திருமுறையாகவும் பெரியபுராணம் காணப்படுகிறது.

குலோத்துங்க சோழ மன்னனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றிய நூலாக பெரியபுராணமே அமைந்துள்ளது.

பெரிய புராணமானது அடியார்களை பன்மையில் கூறிய முதல் நூலாக திகழ்வதோடு இந்நூலில் மூன்று பெண் அடியார்களது வரலாற்றினையும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

சுந்தர மூர்த்தி நாயனார் அறுபது சிவனடியார்களை பற்றி எழுதிய திருத்தொண்டர் தொகை என்ற நூலை முதல் நூலாகவும் நம்பியாண்டார் நம்பி எழுதிய திருதொண்டர் திருவந்தாதி என்ற நூலினை வழி நூலாகவும் கொண்டு எழுதப்பட்ட ஒரு சார்பு நூல் என்ற சிறப்பினை பெற்று காணப்படுகிறது.

மேலும் ஏழ்மை பக்தனின் இறையருளை சித்தரிப்பதாகவும் பெரியபுராணம் காணப்படுகிறது.

பெரியபுராணத்தின் நோக்கம்

கி.பி 11,12ம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னர் குலோத்துங்க சோழனாவான். அம்மன்னனின் அவையில் முதலமைச்சராக பணிபுரிந்தவரே சேக்கிழர் ஆவார்.

சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையை கதைப்பின்னலாகக் கொண்டு பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார்.

அதாவது சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழி நூலாகவும் கொண்டு பெரியபுராணத்தை சார்பு நூலாக படைத்தார்.

சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாக காணப்படும் சைவத்தையும், அடியார்களது வரலாறு மற்றும் தொண்டு நிறைந்த வாழ்வு, முக்தி பெற்ற நிலை ஆகியவற்றை விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுவதை நோக்கமாக கொண்டே இந்நூலானது இயற்றப்பட்டுள்ளது.

பெரியபுராணத்தின் அமைப்பு

பெரியபுராணமானது 63 அடியார்களையும் பெருமக்களையும் மையமாகக் கொண்டதாகக் காணப்படுகிறது.

இந்நூலானது பெரும் பிரிவாக இரண்டு கண்டங்களையும் உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையதாகும். இது 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெருங்காப்பியமாகும்.

மேலும் முதல் கண்டத்தில் 5 சருக்கங்களையும் இரண்டாம் கண்டத்தில் 8 சருக்கங்களையும் உடையதாக அமைந்துள்ளது.

இந்நூலின் அமைப்பானது அடியார்களின் வரலாறு மற்றும் அவர்கள் கடைப்பிடித்த தொண்டு, நெறி மற்றும் இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதம் போன்றவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

மேலும் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் 1256 செய்யுட்களில் விரிவாக கூறப்பட்டுள்ளதால் பிள்ளை பாதி, புராணம் பாதி என்கிற பழமொழியும் இதன் காரணமாகவே ஏற்பட்டது எனலாம். எனவேதான் பெரிய புராணமானது ஒரு சிறந்த காப்பியமாகவே இன்று வரை காணப்படுகிறது.

You May Also Like:

திருக்குறள் குறிப்பு வரைக

அகநானூறு குறிப்பு வரைக