தொலைக்காட்சியின் நன்மை தீமைகள் கட்டுரை

tholaikatchi nanmaigal theemaigal in tamil katturai

உலகில் காணப்படும் பொழுதுபோக்கு சாதனங்களில் முதன்மையான ஒன்றாகவே இன்று தொலைக்காட்சி மாறிவிட்டது. அதாவது உலகில் வாழக்கூடிய ஏழை, பணக்காரன் என்ற எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒவ்வொரு வீட்டிலும் இந்த தொலைக்காட்சி என்பது காணப்படவே செய்கின்றது. தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை தற்காலத்தில் உள்ளமையை காண முடியும்.

தொலைக்காட்சியின் நன்மை தீமைகள் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தொலைக்காட்சியின் உருவாக்கம்
  • இந்தியாவில் தொலைக்காட்சி
  • தொலைக்காட்சியின் நன்மைகள்
  • தொலைக்காட்சியின் தீமைகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதர்களாகிய எம்மில் பலருக்கு இன்று தொலைக்காட்சி எம் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. தொலைக்காட்சி இன்றி வாழ்வை நடத்துவது கடினம் என்ற அளவுக்கு மக்கள் மாறிவிட்டனர்.

பெரும்பாலான ஆண்களும் சரி, பெண்களும் சரி, குழந்தைகளும் சரி இந்த தொலைக்காட்சிக்கு அடிமையாகவே உள்ளனர். இந்த தொலைக்காட்சியின் மூலம் எமக்கு சாதக பாதகங்கள் இரண்டுமே கிடைக்கின்றன.

தொலைக்காட்சியின் உருவாக்கம்

இன்று மக்கள் அனைவரும் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் தொலைக்காட்சியினை பயன்படுத்துகின்ற போதிலும், 1927 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ‘ஹவானிஸ் அடிமியான்’ என்பவரினால் முதலில் கருப்பு – வெள்ளை தொலைக்காட்சியே கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்காலத்தில் இது பெரும் புரட்சியாகவே காணப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இது வண்ணத் தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது. ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி பெட்டிகள் பெரிய அளவில் இருந்தது.

அமெரிக்காவை சேர்ந்த ‘ராபர்ட் அட்லேர்’ என்பவரே தொலைக்காட்சியை உட்கார்ந்து இடத்திலேயே இருந்து இயக்கக்கூடிய ரிமோட்டை கண்டுபிடித்தார். இவ்வாறாக தொலைக்காட்சியின் வடிவங்களும், வகைகளும் வளர்ச்சி அடைந்து மாற்றங்களுக்கு உட்பட்டு கொண்டே இருக்கின்றன.

இந்தியாவில் தொலைக்காட்சி

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும், வளர்ச்சியும் கடந்த 30 ஆண்டுகளை ஒட்டியே அமைகின்றது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் அதிக வளர்ச்சியை தொலைக்காட்சி துறை பெற்றுள்ளது.

1988 கொண்டுவரப்பட்ட புதிய ஒளிபரப்புக் கொள்கைகளின் மூலம் இந்தியாவில் அதிகமான தொலைக்காட்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு இன்று வரைக்கும் தொலைக்காட்சித் துறையில் வளர்ச்சி பெற்ற ஒரு நாடாகவே இந்தியா காணப்படுகிறது.

தொலைக்காட்சியின் நன்மைகள்

தொலைக்காட்சிகள் எம்மைச் சுற்றி உள்ள உலகத்தைப் பற்றி எங்களுக்கு விழிப்புணர்வை ஊட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதாவது நாம் தகவல்களை அறிந்து கொள்கின்றோம், உலகில் என்ன நடக்கின்றது என்பதை புரிந்து கொள்கின்றோம், கல்வி அறிவு, சமையல் அறிவு, புதிய விடயங்களை கற்றுக் கொள்ளுதல், மகிழ்ச்சிகரமாக பொழுதுபோக்குகளை கழித்தல், விளையாட்டு நிகழ்வுகளை கண்டு கழித்தல், சொந்த நாட்டிலும் சரி உலகிலும் சரி நடக்கக்கூடிய செய்திகளை அறிந்து கொள்ளுதல்,

உலகில் தற்கால நிலைமை தொடர்பாக அறிந்து கொள்ளுதல், அரசியல் சூழ்நிலைகள் பற்றி தெரிந்து கொள்ளுதல், யோகா ,உடல் ஆரோக்கியம் என்பவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான உதவி குறிப்புகளை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வைத்திய ஆலோசனைகளை பெறுதல்

போன்ற எல்லா வயது பிரிவினர்களும் பல்வேறு நன்மைகளையும் விழிப்புணர்வுகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஓர் தளமாகவே இந்த தொலைக்காட்சி காணப்படுகின்றது.

தொலைக்காட்சியின் தீமைகள்

தொலைக்காட்சியினால் எவ்வாறு நன்மைகள் கிடைக்கின்றனவோ அதேபோன்று தீமைகளும் அதிகமாகவே மக்களை வந்தடைகின்றன. அதாவது அதிகமாக தொலைக்காட்சியிலே மூழ்கி இருப்பதனால் மக்களின் நேரம் வீணடிக்கப்படுவதோடு, உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்படுகின்றன.

மேலும் வன்முறை காட்சிகளை குழந்தைகள் பார்ப்பதினால் அவர்களுக்குள் வன்முறை உணர்வு தூண்டப்படுகின்றன.

அத்தோடு போதைப் பொருளுக்கு அடிமையாகுதல், போதைப்பொருள் பாவனை, எதிர்மறையான எண்ணங்கள், சமூகத்திலிருந்து விலகி நடத்தல் மேலும் பாலியல் ரீதியான காட்சிகள் ஒளிபரப்பப்படுவதனாலும் சிறுவர்களின் உள்ளம் பாதிக்கப்படுவதனை காணலாம்.

இவ்வாறான தொலைக்காட்சி பாவனையானது குடும்பங்களுக்குள்ளேயே பிரச்சினைகளையும், சிக்கல்களையும் உண்டு பண்ணக் கூடியதாகவும் காணப்படுகின்றது.

முடிவுரை

இன்று தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லை. ஆனால் இந்த தொலைக்காட்சிகளினால் எந்த அளவு நன்மைகள் கிடைக்கின்றதோ, அதைவிட தீமைகள் அதிகமாகவே கிடைக்கின்றன என்பதை பெரிதாக யாரும் பொருட்படுத்துவதில்லை.

ஏனைய போதைப் பொருட்களைப் போன்று தொலைக்காட்சியும் ஒரு போதை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது ஆபத்தில் முடியலாம்.

எனவே எமது பொழுதுபோக்குகளை தொலைக்காட்சியோடு மாத்திரம் நிறுத்தி விடாமல் ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபடுவது சிறந்ததாகும்.

You May Also Like:

ஊடகம் என்றால் என்ன