நீர் பாதுகாப்பு கட்டுரை

neer pathukappu katturai in tamil

நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றிற்கிணங்க நீரானது நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளுள் ஒன்றாகும். அந்த வகையில் எம் உயிர் காக்கும் நீரை பாதுகாப்பது இவ்வுலகில் வாழுகின்ற அனைவரதும் கடமையாகும்.

ஒவ்வொருவரும் நீரை பாதுகாப்பதில் பங்காற்றுவதோடு நீரின் முக்கியத்துவத்தினையும் புரிந்து கொண்டு செயற்படல் வேண்டும்.

நீர் பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • நீர் பாதுகாப்பு என்பது
  • நீரின் முக்கியத்துவம்
  • நீர் பாதுகாப்பின் நோக்கங்கள்
  • நீர் மாசடைதல்
  • முடிவுரை

முன்னுரை

நீரானது இவ்வுலகில் எமக்கு கிடைக்கப் பெற்ற சிறந்த அருட்கொடைகளுள் ஒன்றாகும் என்ற வகையில் நீரைப் பாதுகாத்து நீர் நிலைகளை மாசடையாமல் சிறப்பாக பேணுவது அவசியமாகும். மேலும் நீரினை வீண்விரயம் செய்யாது சேமிப்பதன் ஊடாகவே எம்மால் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

நீர் பாதுகாப்பு என்பது

நீர் பாதுகாப்பு என்பது யாதெனில் நீர் வளத்தை முறையாக நிர்வகிப்பதற்கும், அதனை பாதுகாப்பதற்கும் நாம் மேற்கொள்ளும் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளாகும். அந்த வகையில் நீர் பற்றாக்குறை என்ற ஒன்றை இல்லாமல் செய்து நீரை பாதுகாத்தல் அவசியமாகும்.

இன்று சனத்தொகை பெருக்கம், வீண்விரயம் போன்ற காரணங்களால் நீரானது பாதிக்கப்படுகின்றது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ம் திகதி உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

நீரின் முக்கியத்துவம்

நீரானது மனித வாழ்வில் உயிர் வாழ்வதற்கானதொரு தேவையாகும். நீர் இன்றேல் மனித இனமே இல்லை என்றளவிற்கு நீரின் முக்கியத்துவமானது காணப்படுகின்றது.

உயிரினங்கள் மட்டுமல்லாது பல்வேறு தொழில் முறைகளை மேற்கொள்ளவும் நீரானது அவசியமானதாகும். மேலும் தாவரங்கள் சிறந்த முறையில் ஒளித்தொகுப்பு செய்யவும் நாம் பயிர்களின் பல்வேறு விளைச்சலை பெற்று கொள்ளவும் நீரின் பங்கு அளப்பரியதாகும்.

மனிதனானவன் சமைத்தல், குளித்தல், குடித்தல் என பல்வேறு அடிப்படை தேவைகளை நீரினூடாகவே மேற்கொள்ள முடிகின்றது. உணவின்றி சில நாட்கள் உயிர் வாழும் மனிதனால் நீரின்றி அதிக நாட்கள் உயிர் வாழவே முடியாது என்பதே நிதர்சனமாகும்.

நீர் பாதுகாப்பின் நோக்கங்கள்

நீர் பாதுகாப்பானது எமக்கு மட்டுமல்லாது எமது எதிர்கால சந்ததியினரின் சிறப்பான வாழ்விற்கு அவசியமானதாகும்.

நீர் விநியோகம், நீர் இறைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் போன்ற செயல்பாட்டிற்கு கணிசமான அளவு நீரே பயன்படுத்தப்படுவதோடு மொத்த மின் நுகர்வில் 15 சதவீதத்திற்கும் மேல் நீர் மேலாண்மைக்கும் ஒதுக்கப்பட்டு காணப்படுகின்றது.

அது போன்று மனித நீர் பயன்பாட்டை குறைப்பதனூடாக இடம் பெயரும் பறவை இனங்களுக்கான நன்னீர் வாழ்விடங்களை பாதுகாக்கவும், நீரின் தரத்தையும் பாதுகாக்கவும் முடியும் மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தலையும் நீர் பாதுகாப்பின் நோக்கங்களாக கொள்ளலாம்.

நீர் மாசடைதல்

இன்று நீர் வளமானது பல்வேறு விடயங்களினால் மாசடைந்து கொண்டே வருகின்றது. அதாவது நீர் நிலைகளில் குப்பைகளை இடுதல், நெகிழிகள் நீர் நிலைகளோடு கலத்தல், நச்சுப் பொருட்கள் நீருடன் கலத்தல் என பலவாறான மனித செயற்பாடுகள் நீரினை மாசடையச் செய்கின்றன.

இதன் காரணமாக எம்மால் தூய்மையான நீரினை அருந்த முடியாத ஒரு நிலையே காணப்படும். மேலும் நன்னீரில் வாழும் உயிரினங்கள் இறக்கும் நிலையே இன்று காணக்கூடியதாக உள்ளது.

நீரின் தன்மையை மாசடையச் செய்யும் மனித செயற்பாடுகளை தவிர்ப்பதனூடாகவே நீர் வளத்தை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

இன்று பல்வேறு நாடுகளானவை வறட்சியை கண்டு வருகின்றதாயின் அதற்கான பிரதானமான காரணம் மனிதர்களாகிய எம்முடைய நடவடிக்கைகளாகும். நீரினை பாதுகாப்பதினூடாக மாத்திரமே எம்மால் இவ் உலகில் சிறப்பாக வாழ முடியும். எம் உயிர் காக்கும் நீரை நாமும் காப்போம்.

You May Also Like:

விவசாயம் காப்போம் கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை