நேர்மறை எண்ணங்களால் ஒவ்வொரு மனிதரதும் ஆயுட் காலங்கள் அதிகரிக்கின்றது. நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது. இதனால் துன்பங்கள் மற்றும் கவலைகளைத் தாங்கக் கூடிய மன தைரியம் கிடைக்கிறது.
இவ்வாறு மனித வாழ்க்கைக்கு நன்மையை தருகின்ற நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி அதற்கான வழிகள் என்ன என்பதை இன்றைய இந்த பதிவில் பார்ப்போம்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி
ஆளிடைத் தொடர்பு
நம்முடைய வாழ்க்கையில் வரும் மனிதர்கள் மிகமிக முக்கியமானவர்கள். எனவே நாம் சமூகத்தில் சரியான ஆளிடைத் தொடர்புகளைப் பேண வேண்டும்.
எப்பொழுதும் நமக்கு ஆதரவாக எமக்கு சிறந்த வழிகாட்டியாக நம்முடைய கருத்துக்கள் அனைத்திற்கும் மதிப்பு கொடுப்பவர்களிடம் ஆளிடைத் தொடர்பு வைத்திருத்தல் வேண்டும்.
சிந்தனை
எந்தவொரு செயலை செய்யத் தொடங்கும் போதும் வழமை போல் அல்லாது வித்தியாசமாக வேறொரு கோணத்தில் யோசிக்க வேண்டும். எந்த பிரச்சனை வந்தாலும் நான் அதனை சமாளிப்பேன் என்னும் மன தைரியத்தை வளர்க்க வேண்டும். அதற்குரிய சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நகைச்சுவை உணர்வு
இயலுமானவரை வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் முடியுமானவரை புன்னகைக்க வேண்டும். மன அழுத்தங்கள் ஏற்படும் நேரங்களில் எல்லாம் இயலுமான வரை நகைச்சுவைகளை வாசிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் மன அழுத்தங்கள் குறையும்.
பிறருக்கு உதவி செய்தல்
மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களைப் போக்குவதற்கு மனதை வேறு கோணத்தில் திசை திருப்புவதற்கு கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல் நன்று. வேறொருவருக்கு நன்மை செய்வதால் மனத் திருப்தி கிடைப்பதோடு நம்மை அறியாமலே நமது மனம் தவறான எண்ணங்களில் இருந்து விடுபடுகிறது.
தத்துவங்கள்
மனதிற்கு உற்சாகம், புத்துணர்ச்சியை அளிக்க கூடிய நேர்மறையான கருத்துக்கள், தத்துவங்கள் போன்றவற்றை நாம் அடிக்கடி பயன்படுத்தும் இடங்களான கணினி, பிரிட்ஜ் கதவு, கண்ணாடி போன்றவற்றில் காகிதத்தில் பெரிய அழகான எழுத்துக்களில் எழுதி வைக்கலாம்.
இதனை அடிக்கடி பார்க்கும் போது மனமும் அவ்வாறான நேர்மறை எண்ணங்களையே சிந்திக்கவும் செய்கிறது.
தியானம் செய்தல்
குழப்பத்தில் இருக்கும் மனதை அமைதிப்படுத்த மனதில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்க அதிகாலையில் எழுந்து அமைதியான சூழலில் தியானம் செய்வது சிறந்த பண்பாகும்.
குறைந்தது 15 நிமிடங்களாவது தியானம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் பின்னர் தினமும் செய்து வர பழக்கத்திற்கு வந்து விடும்.
சுத்தம் பேணுதல்
நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.
இசை
மனதிற்கு பிடித்தமான இசையை அடிக்கடி கேட்டல் மனதிற்கு ஒருவிதமான புத்துணர்ச்சி மற்றும் எண்ணத் தோற்றப்பாடுகளை தோற்றுவிக்கும். அத்துடன் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் இல்லாமல் போய்விடும்.
மரம், செடி, கொடிகள் வளர்த்தல்
வீட்டுத்தோட்டம் உருவாக்க முடியுமானால் உருவாக்குங்கள். வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் நிலப்பரப்பை இதற்கு பயன்படுத்தலாம்.
அவ்வாறான இடப்பரப்பு இல்லாத பட்சத்தில் வீட்டின் மொட்டைமாடி, ஜன்னல் ஓரங்களில் சாடிகளில் சின்னஞ்சிறிய கொடிகள் போன்ற அழகு மிக்க தாவரங்களை வளர்க்கலாம்.
அவற்றுக்கு ஓய்வு நேரங்களில் நீர் ஊற்றலாம். அது வளர்ச்சி பெற நம்மை அறியாமலே நம்முடைய மனதில் புதுவித தன்னம்பிக்கையான நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
புத்தகம் படித்தல்
எதிர்மறையான எண்ணங்களை எப்போதும் நம்முடைய மனம் சிந்திக்க இடமளிக்க கூடாது. எனவே தன்னம்பிக்கை தரக்கூடிய நூல்களை ஓய்வு நேரங்களில் வாசித்தல் நன்று. எப்போதும் நம் மனது நேர்மறையான எண்ணங்கள் வளர்ப்பதை கவனம் செலுத்த வேண்டும்.
செல்லப்பிராணிகளை வளர்த்தல்
செல்லப் பிராணிகளை வளர்ப்பது அவற்றை பராமரித்தல் ஓய்வு நேரங்களில் அவற்றுடன் விளையாடுதல் போன்றவற்றால் மனதில் உள்ள அழுத்தம் குறைவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோல்வியை தூக்கி எறிதல்
நாம் சில வேளைகளில் ஏதாவது விடயங்களில் தோல்வி அடைந்து விட்டால் அதனைக்கண்டு துவண்டு விடக்கூடாது. ஒவ்வொரு தோல்வியும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கின்றது என்று நேர்மறையான எண்ணத்தை மனதில் வளர்க்க வேண்டும்.
மேலே குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி எம்முள் காணப்படுகின்ற எதிர்மறையான எண்ணங்களைத் தகர்த்தெறிந்து நேர்மறையான எண்ணங்களை வளர்ப்போம்.
You May Also Like: