இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தத்தின் தாக்கம் மூலை, முடுக்குகளில் இருப்பவர்களைக்கூட விடாமல் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.
நம்மை சுற்றி நிலவும் சூழல்கள் மற்றும் சமூக அமைப்புகள் மன அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றன. இந்த மன அழுத்தம் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடலளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மன அழுத்தமானது தொடரும்போது பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு வடிவம் பெறும். எனினும் இந்த மன அழுத்தத்தை சில எளிய வழிமுறைகளின் ஊடாகக் குறைக்க முடியும்.
மன அழுத்தம் குறைய வழிகள்
உறக்கம்
பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணமாக உள்ளது. ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் மிகவும் முக்கியமானதாகும். நமது உடலுக்குப் புத்துணர்ச்சியை அளித்து அடுத்த வேலையை சுறுசுறுப்பாக செய்வதற்காக உடலையும், மனதையும் தயார்படுத்த உறக்கம் இன்றியமையாததாகும்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி மூலம் எண்டார்பின்கள் சுரந்து, புத்துணர்வை அளிக்கின்றன. உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் மனதையும் ஆரோக்கியமாக்குகின்றது.
நடைப்பயிற்சி
தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தால் மன அழுத்தம் குறையும். நடைப்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குங்கள். தனியாகவோ அல்லது மனதிற்கு நெருக்கமான நண்பர்களோ அல்லது உறவுகளுடனோ நடைபயிற்சி செய்யலாம். இது மன அழுத்தத்தை குறைப்பதுடன் உடல் ஆரோக்கியத்தையும் பேண உதவும்.
யோகா
உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய சிறந்த உடல் மற்றும் மனபயிற்சி முறையாக யோகா உள்ளது. யோகாவில் பலவித பயிற்சிகள் உள்ளன. குறிப்பாக தியானம், மூச்சுப்பயிற்சி போன்றன உள்ளன.
முறையான யோகா பயிற்சியாளரிடம் யோகாவை கற்றுக் கொள்வது சிறந்ததாகும். தொடர்ந்து யோகா மேற்கொள்ளும் போது மனம் ஒரு தெளிவான நிலையை அடையும். சரியாக சிந்தித்து செயற்பட கூடிய ஆற்றலைத் தந்து மன அழுத்தத்தை குறைக்கும்.
இசை
பொதுவாக இசையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். இதமான பாடல் மனதுக்கு இனிமையை ஏற்படுத்தக் கூடியது. நல்ல மென்மையான இசையை கேட்கும்போது மன இறுக்கம் தளர்ந்து மன அழுத்தம் குறையும்.
தன்னம்பிக்கை
எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருங்கள் அது உங்கள் மனதை வலிமைப்படுத்துவதுடன், என்னால் இதைச் செய்ய முடியும் என்று நம்பிக்கையையும் தர வல்லது.
நம் பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் திணிக்காது நாமே சரி செய்து கொள்ள தன்னம்பிக்கை உதவுகின்றது. மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் தன்னம்பிக்கை உதவும்.
உணவு
மனிதனது உயிர் வாழ்க்கைக்கு மட்டுமல்ல மகிழ்வான வாழ்விற்கும் உணவு பிரதானமானதாகும். உணவைப் பற்றி நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத போது அது ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்த நேரிடும். நோய்களை ஏற்படுத்தி உடல் ரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்தும். இதுவே பின்னாளில் மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.
உடலில் ஊட்டச்சத்து அளவு குறையும் போது அதுவே மனநிலையை மோசமாக்கும். எனவே ஆரோக்கியமான உணவை உண்பதன் மூலம் உடலில் ஊட்டச்சத்து அளவு அதிகரித்து மனநிலையை சீராக்கும். காலை உணவை தவறவிடாமல் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
You May Also Like: