தாய்மொழியான தமிழ்மொழி உலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் இன்றுவரை போற்றப்பட்டு வருகின்றது. அத்தகைய தமிழ்மொழியில் பல அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம்முடைய படைப்பாற்றல் திறனை தம்முடைய எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தி மக்களிடையே அழியாத இடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய இந்த பதிவில் நாம் மழையும் புயலும் என்ற பிரபல நூலின் எழுத்தாசிரியரான “வ.ராமசாமி” அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புக்கள் பற்றி விரிவான விளக்கத்தை பார்ப்போம்.
ஆரம்ப நிலை
தஞ்சை மாவட்டத்தில் திங்களூரில் வைஸ்ணவ குடும்பத்தைச் சேர்ந்த வரதராஜ அய்யங்கார் என்பவருக்கும் பொன்னம்மாள் என்பவருக்கும் ராமசாமி பிறந்தார்.
ராமசாமி தன்னுடைய ஆரம்பக்கல்வியை உத்தம தானபுரம் கிராமப் பாடசாலையிலும் பின்னர் மேற்படிப்புக்களை தஞ்சை மற்றும் திருச்சியிலும் கற்றார். கொடியாலம் ரங்கசாமி என்பவர் ராமசாமியின் கல்விப்படிப்புக்கு பல சந்தர்ப்பங்களிலும் உதவி செய்தார்.
தனது கல்விப் படிப்பின் போதான காலத்தில் அரவிந்த சுவாமியின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து கல்வி பயின்றார். அரவிந்த சுவாமியின் ஆசிகளுக்கும் உரித்தானவர் ஆனார்.
தான் ஒரு வைணவ குடும்பத்தில் பிறந்த போதிலும் சமய பழக்க வழக்கங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை முற்றாக மறுத்தார். தான் கட்டாயம் பின்பற்ற வேண்டிய குல ஆசாரங்கள் அனைத்தையும் கைவிட்டார். தன்னுடைய பெற்றோர் முதற்கொண்டு அனைத்து உறவுகளையும் துறந்தார்.
திறமைகளும் ஆற்றல்களும்
வ.ராமசாமி சுருக்கமாக எல்லோராலும் வ.ரா என்று அழைக்கப்பட்டார். இவர் பத்திரிகைகள், கவிதைகள், நூல்கள், கருத்துக்கள், புதினங்கள் போன்றவற்றை எழுதுவதில் கைதேர்ந்தவராக காணப்பட்டார்.
வ.ரா புதினங்களில் பெண்களின் விடுதலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் தீண்டாமை ஒழிப்பு குறித்தும் பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணங்களைப் பிரதிபலிக்கும் முகமாக பல கருத்துக்களை புதினங்கள் மூலமாக வெளியிட்டார்.
இவர் சுதந்திரன், வர்த்தமித்திரன், பிரபஞ்ச மித்திரன், தமிழ்நாடு, சுய ராஜ்யா, வீரகேசரி, பாரததேவி போன்ற பல பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் மணிக்கொடி என்ற சிற்றிதழை எழுதினார்.
வ.ரா தான் எழுத்துப்பணியில் இருந்தமை மட்டுமல்லாது பல இளைய எழுத்தாளர்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கினார். கல்கி மற்றும் புதுமைப்பித்தன் போன்றன இவரது வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தின.
அரசியல் பயணம்
வ.ரா அவர்கள் காந்தியடிகள் மீது அளவு கடந்த பாசம் கொண்ட காரணத்தால் அவர்களின் அகிம்சை வழி நின்றார். பின்னர் உப்பு சத்தியாக் கிரகத்தில் பங்குபற்றி சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.
அதுமட்டுமல்லாது ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கட்டுரைகளை புரட்சியூட்டும் விதத்தில் அமைந்தன. தான் ஜெயிலில் அனுபவித்த துன்பங்களை “ஜெயில் டயரி” என்னும் நூலாக எழுதி வெளியிட்டார். குறிப்பாக வ.ரா மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் ஆவார்.
நூற்படைப்புக்கள்
வ.ராமசாமி வாழ்க்கை வரலாறுகள், சிந்தனை நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் உள்ளடங்கலாக மொத்தமாக பதினேழு நூல்கள் எழுதியுள்ளார்.
அவற்றுள் மேயோவுக்குச் சவுக்கடி, சுவர்க்கத்தில் சம்பாஷணை, கற்றது குற்றமா, மழையும் புயலும், வசந்த காலம், வாழ்க்கை விநோதங்கள், சின்ன சாம்பு, சுந்தரி, கலையும் கலை வளர்ச்சியும், விஜயம், ஞாற வல்லி, மகாகவி பாரதியார், வாழ்க்கைச் சித்திரம் போன்றன மிகவும் பிரசித்தி பெற்ற நூல்கள் ஆகும்.
சமூகத்திற்கு பெரும் புரட்சி ஏற்படுத்துவதில் பங்களிப்பாற்றிய வ.ரா 1951ல் உயிர் நீத்தார்.
You May Also Like: