பாம்பன் சுவாமிகள் நூல்கள்

pamban swamigal noolgal in tamil

சைவ சமயத்தில் உள்ள கடவுள்களை பக்தியால் நிறைந்த பல அடியவர்கள் தங்களால் முடிந்தளவிற்கு பல பக்திப் பாடல்களை இயற்றிப் பாடி இறையருளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

பண்டைய காலத்தில் இயற்றப்பட்ட பல தேவாரங்கள் மற்றும் பக்திப் பாடல் தொகுப்புக்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட போதிலும் இன்றுவரை பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

முருகப்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட பாம்பன் சுவாமிகள் பற்றிய வரலாறு மற்றும் அவர் இயற்றிய நூல்கள் தொடர்பான விரிவான விளக்கத்தைப் பார்ப்போம்.

பாம்பன் சுவாமிகளின் தோற்றமும் ஆரம்ப நிலையும்

பாம்பன் சுவாமிகள் பாம்பன் என்னும் ஊரில் சாத்தப்ப பிள்ளை என்பவருக்கும் செங்கமல அம்மையார் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அப்பாவு என்பது பாம்பன் சுவாமிகளின் இயற்பெயர் ஆகும்.

இவர் 1850 அல்லது 1852ல் பிறந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்பாவு பிள்ளைப் பருவம் தொடக்கம் மொழியாற்றல் மிகுந்தவராக காணப்பட்டார்.

தமிழ் மொழியில் மட்டுமல்லாது சைவக் கடவுள்களுள் ஒருவரான முருகப்பெருமான் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். இவர் ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டியை 36 முறை ஓதினார். அருணகிரி நாதரைப் போன்று தானும் முருகனின் மீது பல பாடல்கள் இயற்ற வேண்டும் என்று ஆசை கொண்டார்.

இவர் 1872ல் காளி முத்தம்மையார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஒரு முறை இவர்களது பெண் குழந்தை தொடர்ச்சியாக இரவு நேரத்தில் அழுத போது முருகப்பெருமான் காவியுடை தரித்து வந்த தரிசனம் வழங்கி அழுகையை நிறுத்தினார்.

பழனி சென்று துறவறம் பூண வேண்டுமென்று இல்லற வயதில் ஆசை கொண்ட போதும் இறைவன் அசிரீரி மூலம் பயமுறுத்தி தடுத்தார்.

பாம்பன் சுவாமிகள் பல கோயில்களுக்கு ஊர் ஊராகச் சென்று முருகப்பெருமானை தரிசித்து வந்தார்.

குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், குமரகோட்டம், பெஜவாடா, கோதாவாரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா, சென்னை, காசி, போன்றன அவர் தரிசனம் செய்த இடங்களுள் சிலவாகும்.

முருகப்பெருமானை நேரிற் காண வேண்டுமென்று கடுமையான தவம் மயானத்தின் நடுவில் பல இன்னல்களுக்கு மத்தியில் இருந்து புரிந்து முருகப்பெருமானின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டார்.

பாம்பன் சுவாமிகள் இயற்றிய நூல்கள்

பாம்பன் சுவாமிகள் தனது தந்தையார் இறந்த சமயத்தில் தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்தார். இதனால் முருகன் மீது பக்தி கொண்டு அவரை நினைந்து உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் 30 எழுத்துக்களையும் கொண்டு 30 பாடல்களை உள்ளடக்கிய தொகுப்பாக “சண்முக கவசம்” என்னும் நூலை முதன்முதலில் இயற்றினார்.

இதனைத் தொடர்ந்து பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் என்ற தொகுப்பு நூலையும் அருளினார்.

ஒருமுறை பாம்பன் சுவாமிகளுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது அதில் இருந்து விடுபட குமாரஸ்தவம் என்ற அர்ச்சனை நூலை இயற்றி நோயிலிருந்து நிவாரணமும் பெற்றார்.

அதுமட்டுமல்லாது ஸ்ரீமத் குமார சுவாமியம், திருவலங்கற்றிரட்டு, திருப்பா, காசியாத்திரை, சிறு நூற்றிரட்டு, சீவயாதனா வியாசம், பரிபூரணானந்த போதம், செக்கர்வேள் செம்மாப்பு, செக்கர்வேள் இறுமாப்பு, தகராலய ரகசியம், குமாரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, சேந்தன் செந்தமிழ், தென்னாட்டுத் திருத்தலதரிசினம், பத்துப் பிரபந்தம், ஆனந்தக் களிப்பு, சமாதான சங்கீதம், சண்முக சகஸ்ர நாம அர்ச்சனை என மொத்தமாக 6666 பாடல்களை மொத்தமாக இயற்றினார்.

பாம்பன் சுவாமிகளின் சீடர் ஸ்ரீமத் சுப்பிரமணிய தாசர் ஆவார். உலகிற்கு அரிய பல சண்முகப் பெருமானின் கவசங்களை அருளிய பாம்பன் சுவாமிகள் 1929 மே மாதம் 30 அன்று உயிர் நீத்தார்.

You May Also Like:

அகநானூறு குறிப்பு வரைக

மழையும் புயலும் நூலின் ஆசிரியர்