இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்வியலை கொண்டமைந்ததாகவே கிராம வாழ்க்கை காணப்படுகின்றது.
அதாவது நகரப் புறங்களில் வாழக்கூடிய மக்களை விடவும் கிராமப்புற மக்கள் இயற்கையாகவே ஒற்றுமை பண்புகளும், கூட்டுறவு தன்மையும், ஒருவரோடு இன்னொருவர் தங்கி வாழும் நிலைமையும் அதிகமாக காணப்படுகின்றன. எனவே இந்த கிராமமும் கூட்டுறவும் பிரிக்க முடியாததாகவே காணப்படுகின்றன.
கிராமமும் கூட்டுறவும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- கிராம வாழ்க்கை
- கிராமிய கூட்டுறவு
- உறவும், உபசரிப்பும்
- கிராமிய பண்பாடுகள்
- முடிவுரை
முன்னுரை
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கு இணங்க கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவரும் கூட்டுறவுத் தன்மை நீங்காத வகையில் இன்னும் தங்களது பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் கடைப்பிடித்து வருகின்றனர்.
அதாவது நகர்ப்புறங்களை விட கிராமப்புற மக்கள் கூட்டுறவு தன்மை அதிகம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
கிராம வாழ்க்கை
பசுமை நிறைந்த பயிர்களோடும், நீர் நிலைகளோடும், உயிரினங்களோடும் ஒட்டி உறவாடக்கூடிய வாழ்வாகவே கிராமிய வாழ்க்கை காணப்படுகின்றன. கிராமத்து மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை தாங்களாகவே பயிரிட்டு, ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக் கொள்கின்றனர்.
கிராமங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக உழவுத் தொழில் காணப்படுகின்றது. பஞ்சம், பட்டினி, வறுமை ஆகிய அனைத்துக்கும் மத்தியில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், ஒற்றுமை, கூட்டுறவு என்பன கிராமத்து வாழ்வியலில் பின்னிப்பிணைந்துள்ளது.
கிராமிய கூட்டுறவு
பொதுவாகவே கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் வறுமை, ஏழ்மை என்பவற்றால் சூழப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். எனவே இவர்களால் தனியாக தங்களுடைய தேவைகளை நிறைவேற்றுவது கடினமானதாகும்.
ஆகவே தான் கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் கூட்டுறவினை கடைப்பிடிக்கின்றனர். இதன் மூலமாக தங்களது உழவு வாழ்வியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
அதாவது கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் தங்களுடைய கிராம மக்கள் அனைவருடனும் ஏதோ ஒரு வகையில் தேவை உடையவர்களாக இருப்பதினால், அனைவரும் ஐக்கியமாக இணைந்து வாழ்வதனை காண முடியும்.
உறவும், உபசரிப்பும்
உறவுகள் எனும் போது, பொதுவாகவே நகர்ப்புறங்களில் இன்று தனி குடும்ப முறைகளே அதிகம் காணப்படுகின்றன.
ஆனால் கிராமப்புறங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது உறவுகளை வலுவாக இணைப்பதாகவும், பிணைப்பதாகவும் காணப்படுகின்றன.
உபசரிப்பு என்ற விதத்திலும், கிராமத்துக்கு புதிதாக ஒருவர் வந்தால் ஏதோ ஒரு வகையில் அவர் எமக்கு உறவினர் என, கிராமத்து மக்கள் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, நீர் உணவு என்பன வழங்கி உபசரித்து மனம் மகிழ வரவேற்பதனை காண முடியும்.
அந்த வகையில் கிராமத்து மக்களின் உறவும், உபசரிப்பு முறைகளும் கூட்டுறவுக்கு வலுச் சேர்ப்பதாகவே அமைகின்றன.
கிராமிய பண்பாடுகள்
கிராமத்தில் வாழக்கூடிய மக்கள் தங்களுக்கென தனியான பழக்க வழக்கங்களையும், மரபுகளையும், பண்பாடுகளையும் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் இவர்கள் தங்களுக்கு என பல்வேறு சம்பிரதாயங்களை நிகழ்வுகளை அல்லது பண்டிகைகளை கொண்டாடுகின்ற பொழுது, தங்களுடைய உறவினர்கள் அனைவருக்கும் முக்கிய இடம் வழங்குகின்றனர்.
அனைத்து உறவுகளையும் ஒன்றிணைத்தே இவ்வாறான சம்பிரதாய நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர். எனவே இவர்களுடைய பண்பாட்டு முறைகளில் கூட கூட்டுறவு தன்மை என்பது முக்கியமான பங்கினை வகிக்கின்றது.
முடிவுரை
கிராமிய வாழ்வு என்பது கூட்டுறவின் அடையாளம் என்றே குறிப்பிட முடியும். எனவே கிராமமும் கூட்டுறவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது என கூற முடியும்.
அந்த வகையில் கிராமத்து மக்கள் நாகரீகமற்றவர்கள் என்ற நேர் எதிரான எண்ணங்களை களைந்து, ஒற்றுமையும் கூட்டுறவுத் தன்மையும் நகர்ப்புற மக்களை விட அதிகமாக கொண்டவர்கள் கிராமத்து மக்களே என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
You May Also Like: