உலகில் மனிதனின் அவனது சந்ததிகளின் வழித்தோற்றத்திற்கும் அடிப்படையாக அமைவது பெண் என்பவள் தான். பெண் இல்லையென்றால் இவ்வுலகத்தில் மானிடர்களின் ஜெனனம் என்பது நிகழாது. போற்றுவதற்கு சிறந்த ஓர் படைப்பினமே பெண் இனம் ஆகும். பெண்மை என்பது பெருமைக்குரிய ஒரு வரம் ஆகும்.
பெண்ணே நீ பெருமை கொள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- பெண்மையின் குணாதிசயங்கள்
- தமிழர் பண்பாட்டில் பெண்மை
- பெண்மையின் உன்னதம்
- தாய்மையின் வடிவம் பெண்
- முடிவுரை
முன்னுரை
“மாதராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” என்பது ஒளவை பிராட்டியின் கருத்தாகும். இக்கருத்திற்கு இணங்க பெண்கள் சிறந்த படைப்பினராக எமது மானிட சமுதாயம் இன்று இயங்கிக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக அமைவது பெண்கள் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. பெண்ணாக பிறந்ததற்கு பல தவம் புரிதல் வேண்டும்.
பெண்ணே நீ பெருமை கொள் எனும் இக்கட்டுரையில் பெண்மையின் குணாதிசயங்கள், பெண்களை போற்றுவதற்கான அவசியம், தமிழர் பண்பாட்டில் பெண்மை, பெண்மையின் உன்னதம், தாய்மையின் வடிவம் பெண் என்பவற்றை பற்றி சுருக்கமாக நோக்குவோம்.
பெண்மையின் குணாதிசயங்கள்
இறைவனின் உன்னதமான படைப்புகளில் ஓர் அதிசய படைப்பாக காணப்படுகின்ற பெண்ணானவள் அன்பின் மறுவடிவம் ஆவாள்.
ஒரு பெண்ணானவள் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, மற்றும் நண்பியாக என பல்வேறு அந்தஸ்து நிலைகளில் நின்று அன்புடன் அரவணைக்க கூடியவளாக காணப்படுகின்றாள்.
குடும்பங்களில் வருகின்ற பிரச்சனைகளை கலைவதற்கு உறுதுணையாக நிற்பதோடு, பொறுமை தன்மையும், சகிப்புத் தன்மையும், இரக்க குணமும், தியாக உணர்வும் நிறைந்து ஒரு குடும்பத்தை சரிவர இயக்கும் ஆணிவேராகவும் காணப்படுகின்றாள்.
பெண்ணானவள் உடலளவில் மென்மையானவர்களாக காணப்பட்டாலும் மனதளவில் அவர்கள் மிகவும் வலிமையானவர்களாகவும் தன்னம்பிக்கை குணம் நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
குழந்தைகளை வளர்ப்பதிலும் அவர்களை பராமரிப்பதிலும் பெண்களை போன்று எவரும் செயற்பட முடியாது என்பது அவர்களின் தனித்துவமான பெருமையாக காணப்படுகிறது.
ஆண்களுக்கு நிகராக பொறுப்புடன் தொழிலாற்றும் திறன் கொண்டவர்களாகவும் எடுத்த விடயத்தை சரிவர முடிக்கும் மனநிலை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர்.
தமிழர் பண்பாட்டில் பெண்மை
பொதுவாகவே தமிழர் பண்பாட்டில் பெண்மை என்பது போற்றப்படும் ஒரு அம்சமாகவே காணப்படுகிறது. அதாவது பெண்களை தெய்வமாக போற்றும் தன்மையினைக் காணலாம். உதாரணமாக சரஸ்வதி, பார்வதி லட்சுமி போன்ற பெண் தெய்வங்களினைக் குறிப்பிடலாம்.
இன்றும் நதிகளுக்கு கூட காவேரி, யமுனா, சரஸ்வதி என பெண்களின் பெயர்களை சூட்டி அழைப்பதனையும் காண முடிகின்றது.
இவ்வாறாக தமிழர் பண்பாட்டில் பெண்களை போற்றும் குணம் காலப்போக்கில் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்களை அடிமைகளாக பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதனை எதிர்க்கும் வகையிலேயே பாரதியாரும் பெண்கள் விடுதலை கும்மி, பெண் விடுதலை போன்ற கவிதைகளை எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பெண்மையின் உன்னதம்
உலகில் மனித இனத்தின் பிறப்புக்கு இன்றியமையாததாக காணப்படுகின்ற பெண்கள் ஆண்களை விட சிறப்பு வாய்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.
இவர்கள் தாய்மை, அன்பு, இரக்கம், அரவணைப்பு, கருணை, தியாகம், புத்திசாதூரியம் ஆகியவற்றை ஒருங்க பெற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
பெண் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மனித தன்மையற்றவர்கள் என்ற கருத்து பரவலாக காணப்படுகின்றது. இதன் அர்த்தம் யாதெனில் பெண் ஒருவர் உள்ள குடும்பத்தில் அவரது குழந்தையானது சரியான முறையில் வளர்க்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.
தாய்மையின் வடிவம் பெண்
இந்த பாரினிலே ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்கும் உறுதுணையாக உள்ள தாய் என்பவள் புனிதமானவளாக காணப்படுகின்றாள். ஒரு பெண்ணின் பல தியாகத்தின் காரணத்தினாலேயே இந்த மண்ணில் ஒவ்வொரு குழந்தையும் சிறப்புற பிறக்கின்றது.
பெண்கள் சுயநல சிந்தனையோடு செயல்படுவார்களாக காணப்படுவார்களாயின், இந்த உலகத்தில் மானிடப் பிறவி என்பது எப்போதும் நிகழாது. இவ்வாறு பல சிறப்புகளை பெற்று காணப்படுகின்ற தாய்மை எனும் வரம் பெற்ற பெண்கள் அனைவருமே போற்றத் தகுந்தவர்களாவர்.
முடிவுரை
இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டு காணப்படுகின்ற பெண்மை என்பது பெருமை கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஆனால் தற்காலத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் வன்முறை செயற்பாடுகள் காரணமாக பெண்மை என்பது அனைவரிடையேயும் சாபமாக எண்ணப்படுகிறது.
இருப்பினும் பல பெண்கள் பல இன்னல்களுக்கு மத்தியிலும் பல சாதனைகளை புரிந்த வண்ணமே காணப்படுகின்றனர்.
உலகில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பெருமை கொள்ள வேண்டியவளே ஆவாள். பெண்மையை சரிவர மதித்து செயல்படுதல் உலகில் வாழும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
You May Also Like: