பாரதியார் இலக்கிய பணி கட்டுரை

bharathiyar ilakkiya pani katturai in tamil

தமிழுக்கு தொண்டாற்றியவர்களுள் சிறப்புமிக்கவரே பாரதியாராவார். இவரது இயற்பெயர் சுப்ரமணி ஆகும். இவர் தனது கவிதை திறனின் மூலமாக எம்மை கவர்ந்த ஒரு மாமனிதராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் தமிழில் பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

பாரதியார் இலக்கிய பணி கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • ஆரம்பகால வாழ்க்கை
  • இலக்கியப் பணி
  • பாரதியின் இலக்கிய பணியில் பாஞ்சாலி சபதம்
  • தமிழ்ப் பணி
  • முடிவுரை

முன்னுரை

சுதந்திர போரட்ட வீரராகவும், கவிஞராகவும், பெண்விடுதலைக்காகவும் போரடியவரான பாரதியாரின் இலக்கிய பணியானது சிறப்புமிக்கதாகும். அதாவது தமிழ் மீது அதிக பற்றினை கொண்டு கற்றறியா பாமரர்க்கும் பல நற்கருத்துக்களை இலகு நடை கவிதைகளால் எடுத்துக்கூறிய சிறந்த கவிஞரே மாகாகவி பாரதியாராவார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் சின்னச்சாமி மற்றும் இலக்குமி அம்மால் தம்பதியினருக்கு மகனாக 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் திகதி தமிழ் நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தார். சுப்பிரமணியம் என்ற இயற்பெயரை கொண்டிருந்தாலும் சுப்பையா என்றே அழைக்கப்பட்டார்.

மேலும் இவர் தனது தாயின் மறைவை தொடர்ந்து தனது பாட்டியின் வீட்டிலேயே வளர்ந்து வந்தார். தனது பதினொரு வயதில் கவி படைக்கும் ஆற்றலை பெற்றதோடு 1897ம் ஆண்டு செல்லம்மா என்பவரை மணந்தார்.

இலக்கியப் பணி

தாய் மொழியான தமிழின் மீது அளவு கடந்த பற்றினை கொண்டவரே பாரதியார் ஆவார். இவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பணியானது அளப்பரியதாகும்.

அதாவது இலக்கியங்களை ஐயம் திரிபுற கற்று அவற்றை அடியொட்டியதாகவே பல கவிதைகளை இயற்றியுள்ளார். இக்கவிதைகள் இலகு மொழிநடையும், இலக்கிய நயத்தையும், பொருள் செறிவையும் உடைய புது கவிதைகளாகவே திகழ்கின்றமை இலக்கிய பணிக்கானதோர் எடுத்துக்காட்டாகும்.

புது கவிதைகளை தமிழ் இலக்கியத்தில் எடுத்துரைத்த பெருமை பாரதியாருக்கே உடையதாகும். அதாவது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற கவிதைகள் அவரது இலக்கிய பணியினையே எமக்கு எடுத்தியம்புகின்றது.

மேலும் சுதேச மித்திரன் பத்திரிகை மூலமாக அறியாமையில் மூழ்கி கிடந்த மக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவராவார்.

பழந்தமிழ் காவியங்களில் ஈடுபாடு கொண்டதோடு தேசிய கவி என்ற வகையில் உலகு தழுவிய சிந்தனைகளை உண்மையுடனும் அழகியலுடனும் எடுத்தியம்பிய சிறந்த கவிஞராகவே இவர் காணப்பட்டார்.

பாரதியார் இலக்கிய பணியில் பாஞ்சாலி சபதம்

பாஞ்சாலி சபதம் என்ற இவரது படைப்பானது அழகிய இலக்கிய நயத்தையும், அழகிய கவிநயத்தையும் உடையதாகவே காணப்படுகிறது. அதாவது இந்திய விடுதலை போராட்டத்தை பாரத போராகவும் பாஞ்சாலியை பாரத மாதாவாகவும் உருவகப்படுத்தி இயற்றிய படைப்பே பாஞ்சாலி சபதம் என்ற கவிதையாகும்.

இது தமிழ் அழியாக் காவியமாகவே திகழ்கின்றதோடு ஐந்து சருக்கங்களையும் 412 பாடல்களையும் கொண்டமைந்ததோர் இலக்கிய படைப்பாகும்.

தமிழ்ப் பணி

பாரதியார் ஆற்றிய இலக்கிய பணிகளுள் ஒன்றே இவர் தமிழுக்கு ஆற்றிய பணியாகும். அந்த வகையில் இவர் தமிழுக்கு பல புது கவிதைகளை அறிமுகம் செய்தார்.

உதாரணமாக பாரத மாத திருப்பள்ளி எழுச்சி, பெண்கள் விடுதலை கும்மி என பல்வேறுபட்ட கவிதைகளை தமிழிலேயே இயற்றி தமிழின் பெருமையை காத்தவராவார்.

இவர் மதுரையில் உள்ள சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து தமிழின் பெருமையை உலகறியச் செய்தவராவார். இவர் தமிழிற்கு ஆற்றிய பணியானது தனித்துவமிக்கதாகும்.

முடிவுரை

மகாகவி பாரதியார் உலகுக்கு தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்காட்டியதோடு மட்டுமல்லாமல் இலக்கிய பணிகளிலும் இவரது பணியானது இன்றியமையாததாகும். பாரதி வளர்த்த தமிழை நாமும் திறம்பட வளர்ப்பதன் மூலமே தமிழின் பெருமையை உலகறிய செய்ய முடியும்.

You May Also Like:

பாரதியார் பற்றிய பேச்சு போட்டி

பாரதிதாசன் இலக்கிய பணி கட்டுரை