கலைஞரும் தமிழும் கட்டுரை

kalaignarum tamilum katturai in tamil

திராவிட கழகத்தின் தலைவராகவும் முத்தமிழறிஞராகவும் போற்றப்படக்கூடிய கலைஞர் கருணநிதி அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பானது அளப்பரியதாகும். இவர் ஓர் சிறந்த முதல்வராக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் தமிழினை வளர்க்கவும் அரும்பாடுபட்டவராவார்.

கலைஞரும் தமிழும் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • தமிழ் வழிக்கல்விக்கு வித்திட்ட கலைஞர்
  • சங்கத்தமிழ் நூலும் கலைஞரும்
  • கலைஞர் கவிதையில் தமிழின் பெருமை
  • கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகள்
  • முடிவுரை

முன்னுரை

தன் மூச்சுள்ள வரைக்கும் தமிழுக்காக போராடியவரே கலைஞராவார். செம்மொழி என்ற சிம்மாசனத்தை தமிழுக்கு வழங்கியவரே கலைஞர் ஆவார். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு மாமனிதராகவும் தமிழ்நாட்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக அரசியல் நுணுக்கங்களில் கைதேந்தவராகவும் காணப்பட்டார்.

தமிழ் வழிக்கல்விக்கு வித்திட்ட கலைஞர்

தமிழ்நாட்டில் 1967ம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் தமிழ் பயிற்சி மொழிக் கொள்கையை ஆதரித்து பேசியவரே கலைஞராவார். தமிழ் பாட மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து தமிழ் மொழிக்கல்விக்கு அடித்தளமிட்டவராவார்.

மேலும் தமிழை பயிற்று மொழியாக ஏற்று படிப்போருக்கு பதவிகளில் சலுகைகள் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்ததோடு தமிழை ஏற்று படிக்காதவர்கள் தமிழகத்தில் வாழமுடியாத நிலை ஏற்படும் எனவும் கலைஞர் கூறியுள்ளார்.

அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழியே முதல் மொழியாக காணப்பட்டமையானது தமிழ் கல்விக்கு கலைஞர் வித்திட்ட பங்களிப்பினையே எடுத்துக்காட்டுகின்றது.

சங்கத்தமிழ் நூலும் கலைஞரும்

கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பினை எடுத்தியம்பும் முகமாக காணப்படும் நூலே சங்கத்தமிழ் நூலாகும். கலைஞர் சங்க இலக்கியத்தில் காணப்படும் 100 பாடல்களுக்கு இந்நூலிலேயே விளக்க கவிதைகளை எழுதியுள்ளார்.

சங்க தமிழ் நூலானது இன்று அனைவரும் சிறந்த தமிழ் கவிதைகளை படிப்பதற்கு வித்திட்டதொரு நூலாக திகழ்கின்றது. இந்நூலானது இன்றும் தமிழின் பெருமையை எமக்கு எடுத்தியம்பக்கூடியதாகவே காணப்படுவதோடு கலைஞரின் தமிழ் மீதான பற்றினையும் வெளிப்படுத்துகின்றது. மேலும் கலைஞரானவர் பல நூல்களை தமிழில் எழுதியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

கலைஞர் கவிதையில் தமிழின் பெருமை

தமிழ் நாட்டின் முதலமைச்சராக திகழும் கலைஞர் ஒரு கவிஞராகவும் திகழ்கின்றார் என்பது போற்றப்படக்கூடியதொரு விடயமாகும்.

இவர் தனது கவிதைகளை தாய் மொழியாம் தமிழிலே படைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழை போற்றும் வகையில் தனது கவிதையில் தேன் கொண்ட தமிழ், தமிழ் தாய், அன்னைத்தமிழ், வண்ணத்தமிழ் என பலவாறான சொற்றெடர்களை பயன்படுத்தியுள்ளார்.

தமிழின் வாழ்வியற் பண்புகளான அருமை, இனிமை, வீரம், பழமை, செம்மை என பல்வேறு பண்புகளை கூறி தமிழின் பெருமையினை எடுத்தியம்பும் தமிழ்க் கவிஞரே கலைஞர்.

கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகள்

கலைஞரானவர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் எண்ணிலாடங்காதவையே என்ற வகையில் தமிழின் வளர்ச்சிக்காக தனித்துறை மற்றும் கட்டாய பாடமாக தமிழை ஆக்கியமை, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு,

கலைநயமிக்க வள்ளுவர் கோட்டம், திருக்குறளை மீட்டு, திருமண அழைப்பிதழ் முதல் அரசு பேருந்துகள் என அனைத்து இடங்களிலும் தமிழை கொண்டு சேர்த்தல், தமிழ் கவிதைகளை இயற்றியமை, தமிழ் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளித்தமை,

1974ம் ஆண்டு நிறுவிய தமிழ் பண்பாட்டு தனித்துறை அமைச்சகம், தமிழ் வழியில் கற்றவர்களுக்கென அரச பணியில் 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்க உத்தரவிடல் என பல்வேறு பணிகளை தமிழுக்கு ஆற்றியவர் கலைஞர் ஆவார்.

முடிவுரை

இன்று தமிழின் பெருமையை உலகறியச் செய்த சிறந்த மனிதராக கலைஞர் கருணாநிதி அவர்கள் வாழ்ந்தார். அதேபோன்று நாமும் எம் தாய் மொழியான தமிழினை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். தமிழ் வளர்த்த கலைஞரானவர் இன்றும் எம் மனதில் நீங்கா இடத்தை பெற்றவரே.

You May Also Like:

பெரியார் வழியில் கலைஞர் கட்டுரை

கலைஞர் கருணாநிதி வரலாறு கட்டுரை