தனது தாய் நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் அற்பமாக நினைத்து வீரத்தியாகம் செய்த வீரமங்கையே குயிலி. இவர் ஆங்கிலேயருக்கு எதிராக பல போர்களில் ஈடுபட்டமையானது இவரது துணிகரமான செயலை சுட்டி நிற்கின்றது.
குயிலி வரலாறு கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ஆரம்பகால வாழ்க்கை
- தற்கொலை படையாக மாறிய குயிலி
- வேலுநாச்சியாரின் உயிர் காத்த குயிலி
- மெய்காப்பாளராக செயற்படல்
- முடிவுரை
முன்னுரை
உலகின் முதல் தற்கொலை படைப் போராளியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவரே குயிலி ஆவார். இவர் சிறுவயதில் இருந்தே ஓர் வீரமிக்க பெண்ணாக திகழ்ந்ததோடு சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார். வேலுநாச்சியாரின் மீது மிகுந்த பற்றுடையவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் காணப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை
பெரியமுத்தன் மற்றும் ராக்கு தம்பதியினரின் மகளாக பிறந்தவரே குயிலி இவர் தனது தாயைப் போன்றே வீரமிக்கவராக திகழ்ந்தார்.
குயிலியின் தாயான ராக்கு தனது விவசாய பயிர்களை நாசமாக்கும் காளைக்கு அருகில் சென்று துணிகரமாக அடக்கமுட்பட்டவராவார். இவ்வாறு அடக்கமுட்பட்டு வீரமரணத்தை எய்தார். தனது தாயின் மரணத்திற்கு பின்பு குயிலி முத்துப்பட்டி கிராமத்திற்கு குடிபெயர்ந்தார்.
வேலுநாச்சியாரின் வீரசாகசங்களும் போர் பயிற்சிகளும் தந்தையால் குயிலிக்கு ஊட்டப்பட்டு வளர்ந்தார்.
தற்கொலை படையாக மாறிய குயிலி
ஆங்கிலேயர்களிடமிருந்து தன் நாட்டை மீட்பதற்காக தற்கொலைப்படையாகவே மாறினார். அதாவது ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியார் அழைப்பு விடுத்ததோடு வேலுநாச்சியாரின் தலைமையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அருகில் உக்கிரதாக்குதல் இடம்பெற்றது.
அந்த போரில் ஆங்கிலேயரின் ஆயுதங்களிற்கு முன்பு வேலுநாச்சியாரின் படை தோல்வியின் விளிம்பிலேயே காணப்பட்டது. இத்தகைய சுழ்நிலையை கருத்திற்கொண்டு குயிலி உடலில் எரி நெய்யை ஊற்றிக்கொண்டு ஆயுதக்கிடங்கினுள் குதித்து வீரமரணத்தை அடைந்தார்.
இதன் விளைவாக ஆங்கிலேயர்கள் தோல்வியினையே சந்தித்ததோடு வேலுநாச்சியாரின் படையே வெற்றி கண்டது.
வேலுநாச்சியாரின் உயிர் காத்த குயிலி
வேலுநாச்சியாரின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக காணப்பட்ட குயிலி சிவகங்கை பகுதிக்குள் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக இரகசிய உளவாளியாக இருந்து தகவல்களை சேர்ப்பவராக திகழ்கின்றார்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே சிலம்பாட்ட ஆசிரியரான வெற்றிவேல் ஓர் ஓலையும் பையுமாக வந்து இந்த ஓலையை சிவகங்கை அருகே உள்ள குறிப்பிட்ட இடத்தில் ஒப்படைத்து விடு என கூறி குயிலியிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
அந்த ஓலையை பிரித்து படித்த போதுதான் வேலுநாச்சியாருடைய போர் தந்திரங்கள் இடம்பெற்றிருப்பதை அவதானித்தார்.
இதன் பின்னர் வெற்றிவேலின் அறைக்கு சென்று இவரால் வேலுநாச்சியாரின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்பதனை அறிந்து சிறிதும் தாமதிக்காமல் அவரின் உயிரை பறித்து வேலுநாச்சியாரின் உயிர் காத்தவரே குயிலி.
மெய்காப்பாளராக செயற்படல்
வேலுநாச்சியாரின் நம்பிக்கைக்கு பத்திரமாக திகழ்ந்ததோடு மெய்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்டமையினை பலர் எதிர்த்தபோது சாதி பார்க்காதவர்கள் தான் என் படையில் திகழ வேண்டும் என பிரகடனம் செய்து குயிலியை தனது படையில் சேர்த்துக் கொண்டவரே வேலுநாச்சியாராவார்.
முடிவுரை
உலகம் போற்றும் வீரமங்கைகளுள் ஒருவராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் இவரது வீரதீர செயல்கள் இன்றும் எம்மை மெய் சிலிர்க்க வைப்பது குயிலின் தியாகத்தினை பறைசாற்றுகின்றது. மேலும் வேலுநாச்சியாரால் போற்றப்படக்கூடியவராகவும் குயிலி திகழ்கின்றமை சிறப்பிற்குரியதாகும்.
You May Also Like: