இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ரமலான் மாதம் எனப்படுகின்றது. இந்த புனித மாதத்தின் நோன்பானது இஸ்லாமிய முக்கிய ஐந்து கடமைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
அத்தோடு இம்மாதத்தின் நாட்கள் 29 அல்லது 30 என மாறுபட்டு ஒவ்வொரு வருடமும் வருவதனை காணலாம். இந்த மாதத்தில் காணப்படும் அனைத்து நாட்களிலும் நோன்பு அனுஷ்டிக்கப்படுவது முஸ்லிம்களின் கடமையாகவும் காணப்படுகின்றது.
ரமலான் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- ரமலான் நோன்பு
- ரமலான் மாதத்தின் மகிமைகள்
- ரமலானில் கிடைக்கும் நன்மைகள்
- ரமலான் காலத்தில் தடுக்கப்பட்ட செயல்கள்
- முடிவுரை
முன்னுரை
ரமலான் எனும் புனித மாதமானது முஸ்லிம்களால் புனிதமாக போற்றப்படும் நோன்பு தினங்களை கொண்ட ஒன்றாகும்.
அதாவது இந்த ரமலான் மாதம் சுய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அடக்கி வைக்க கற்றுக் கொடுப்பதோடு, பசி என்றால் என்ன என்பதனை அனைத்து முஸ்லிம்களுக்கும் புரிய வைப்பதாகவும் காணப்படுகின்றது.
அந்த வகையில் முஸ்லிம்களால் புனிதமாக போற்றப்படும் ரமலான் மாதம் பற்றி இக்கட்டுரையில் நோக்கலாம்.
ரமலான் நோன்பு
நோன்பானது அரபிய மொழியில் ஸவ்மு என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் “தடுத்து கொள்ளுதல்” என்பதாக அமைகின்றது. இந்த ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் புனிதமான நோன்பு எனும் விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகவும் இது காணப்படுகின்றது.
இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தில் இருந்து சூரியன் மறையும் வரை உணவும், பானமும் ஆற்றப்பட்டு முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகளிலும், நன்மையான காரியங்களிலும் ஈடுபடுகின்றனர்.
ஆகவே அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒரு புனித மாதமாக இந்த ரமலான் மாதத்தை முஸ்லிம்கள் கருதுகின்றனர்.
ரமலான் மாதத்தின் மகிமைகள்
முஸ்லிம்கள் பின்பற்றக் கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக இந்த ரமலான் மாதம் காணப்படுகின்றமையினால் அவர்கள் மத்தியில் இது மிகவும் சிறப்பான ஒரு மாதமாக காணப்படுகின்றது.
மேலும் இம்மாதத்தில் விண்ணில் உள்ள நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுவதாகவும், இறைவன் ஒரு சிறிய நன்மையான செயலுக்கும் பன்மடங்கு நன்மைகளை தருவதாகவும், அதுவரை காலம் செய்த பாவங்களுக்கான மன்னிப்பு கேட்கக்கூடிய சிறந்த மாதமாகவுமே இஸ்லாமியர்கள் இந்த ரமலான் மாதத்தை கருதுகின்றனர்.
அத்தோடு பொறுமை கஷ்டங்களை சகித்துக் கொள்ளுதல், சிக்கனத்தை பேணுதல், உடல் உள ஆரோக்கியத்தை பெறுதல், ஏழைகளின் பசியை உணர்தல் போன்ற நோக்கங்களுக்காக இம்மாதத்தில் நோன்பு நோற்பதும் இம்மாதத்தின் மகிமையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
ரமலானில் கிடைக்கும் நன்மைகள்
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பதன் மூலம் முஸ்லிம்கள் பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்வதாக கருதுகின்றனர்.
இந்த வகையில் ஆன்மீக ரீதியான நன்மையாக சுவர்க்கத்தை அடைந்து கொள்ளுதலையும், மன இச்சைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுதல், தீய செயல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், பிறரை மதிக்க கற்றுக் கொள்ளுதல், ஏழைகளின் பசியை உணர்ந்து கொள்ள முடிதல், உடலில் தேவையில்லாத படிந்திருக்கும் கொழுப்புகள் கழிவுகள் என்பவற்றை அகற்றி உடல் ஆரோக்கியத்தை பெற முடிதல் போன்றவாறான பல்வேறு நன்மைகளை ரமலான் மாதத்தில் அடைந்து கொள்ள முடியும்.
ரமலான் காலத்தில் தடுக்கப்பட்ட செயல்கள்
இஸ்லாம் மார்க்கமானது ரமலான் மாதத்தில் பல்வேறு தீய செயல்களையே தடுக்கின்றது.
இந்த வகையில் புறம் பேசுதல், பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், அவதூறு சொல்லுதல், கேலி செய்தல், வீண் பேச்சுக்களில் ஈடுபடுதல், திருடுதல், பொது சொத்துக்களை நாசமாக்குதல், சண்டைகளில் ஈடுபடுதல், பிறர் பொருட்களை அபகரித்தல், உடலால் பிறருக்கு துன்பம் விளைவித்தல், தீய பேச்சுக்கள் நடத்தைகளில் ஈடுபடுதல் போன்றவாறான பல்வேறு தீய செயல்பாடுகளை ரமலான் மாதத்தில் இஸ்லாம் தடை செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
முடிவுரை
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக நோன்பு காணப்படுகிறது. இந்த நோன்பை அனுஷ்டிக்கக்கூடிய புனித மாதமாகவே ரமலான் திகழ்கின்றது.
இம்மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பதன் மூலம் அவர்களுடைய உடல், உள ஆரோக்கியம் பேணப்படுவதோடு சமூகத்தில் ஏற்படக்கூடிய வீணான தர்க்கங்களும், விவாதங்களும் தடுக்கப்படுகின்றன. ஆகவே ரமலான் மாதம் பற்றி அனைவரும் அறிந்து கொள்வது சிறப்பானதாகும்.
You May Also Like: