நாம் வாழும் உலகில் இன்று பல மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது தற்காலங்களில் சொகுசு பயணங்களினாலும், துரிதமான உணவு பொருட்களாலும், இரசாயனத்தின் அதிக பயன்பாட்டினாலும் மக்கள் ஆரோக்கியம் குன்றியவர்களாகவே வாழ தலைப்படுகின்றனர். எனவே ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு நடை பயிற்சி அவசியமான ஒன்றாகும்.
நடைப்பயிற்சியின் நன்மைகள் கட்டுரை
குறிப்பு சட்டகம்
- முன்னுரை
- நடைப்பயிற்சி எப்போது செய்ய வேண்டும்
- நடைப்பயிற்சியில் எவ்வாறு ஈடுபடுவது
- நடைப்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள்
- நடைப்பயிற்சியின் போது தவிர்க்கப்பட வேண்டியவை
- முடிவுரை
முன்னுரை
தற்கால சமூகங்களில் உடல் வலுவினால் உழைக்கும் முறைமைகள் வெகுவாக குறைந்துள்ளமையினால், அதிகமான மக்கள் இன்று அதிக பருமன் கொண்டவர்களாகவும் கால், கை வலி, வாதம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கான அதி முக்கியமான தேவையாக இந்த நடைபயிற்சி காணப்படுகின்றது. அதாவது உடம்பில் உள்ள தேவையில்லாத கலோரிகளை அழித்து, உடல் ஆரோக்கியத்தை பெற்றுத் தருவதாக நடைபயிற்சி காணப்படுகின்றது.
நடைபயிற்சி எப்போது செய்ய வேண்டும்
நடைப்பயிற்சி செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் அதிகாலைப் பொழுதாகும். அதாவது இந்த அதிகாலை பொழுதிலே நாம் தூய்மையான காற்றினை சுவாசிக்க முடியும்.
இவ்வாறு அதிகாலைப் பொழுதுகளில் நடக்க முடியாதவர்கள் மாலை நேரங்களில் நடைபயிற்சியில் ஈடுபடலாம்.
இவ்வாறு நாம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது வெறும் வயிற்றுடன் நடக்கக்கூடாது. குறைந்தது தண்ணீர் அரை லிட்டர் அளவு அருந்திவிட்டு நடப்பது சிறந்ததாகும்.
நடைப்பயிற்சியில் எவ்வாறு ஈடுபடுவது
நடை பயிற்சியினை மேற்கொள்ளும் போது ஒரே சீரான வேகத்திலும், ஒரே நேர்கோட்டிலும் நடத்தல் சிறந்ததாகும்.
நெஞ்சை உயர்த்தியவாறு, தோள்களை சாதாரணமாகவும், கைகளை தளர்வாக வைத்துக் கொண்டு பார்வையை முன்னோக்கியவாறு செலுத்தி நடப்பதோடு, கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக அசைத்தவாறு நடக்க வேண்டும்.
அத்தோடு அடிவயிற்றை கெட்டியாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதோடு முதுகையும் நேரான முறையில் வைத்துக்கொண்டு நடைபயிற்சியில் ஈடுபடுவது அவசியமானதாகும். இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றியே நடைபயிற்சியில் ஈடுபட வேண்டும்.
நடைப்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகள்
இன்று பலர் நடைபயிற்சிகளின் மூலமாக பல்வேறு நன்மைகளை அடைந்து கொள்கின்றனர்.
அவற்றில் சிலவற்றை கூறுவோமே ஆனால், அதிகபடியான கலோரிகளை எரித்தல், நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க உதவுதல், அடிவயிற்று தொப்பையை குறைத்தல், முதுகு நரம்புகளை உறுதியாக்குதல், உடல் மனச்சோர்வுகளை குறைத்தல், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை அகற்ற உதவுதல், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் மாரடைப்பு போன்றவற்றினை கட்டுப்படுத்த உதவுதல் போன்றவாறான பல்வேறு நன்மைகளை நடைப்பயிற்சியின் மூலமாக நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
நடைப்பயிற்சியின் போது தவிர்க்கப்பட வேண்டியவை
நடைப்பயிற்சியானது ஒழுங்கு முறையாக செய்யப்படாவிட்டால், அதில் எந்தப் பயனையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது.
இந்த வகையில் நடைபயிற்சியின் போது நாம் அதிகமாக கதைப்பதையும், மேடு பள்ளமான இடங்களில் நடப்பதையும், உணவுப் பொருட்களை உண்டு கொண்டே நடப்பதையும், கைகளை ஒரே சீரான அமைப்பில் முன்னும் பின்னும் அசைக்காமல் நடப்பதனையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே நாம் நடைபயிற்சியின் உண்மையான அனுகூலங்களை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் இவ்வாறான விடயங்களை தவிர்ந்து கொள்வதே சிறந்ததாகும்.
முடிவுரை
நவீன உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் விளைவாக மனிதன் அதிகமாக நடமாடுவதை விட்டுவிட்டு, ஒரே இடத்தில் இருந்தபடியே தன்னுடைய அனைத்து வேலைகளையும் செய்து கொள்கின்றான்.
எனவே அவனுடைய ஆரோக்கியம் சற்று கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் ஒரு 30 நிமிட நடைபயிற்சியானது அவனுடைய ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்ததாகவே அமையும்.
எனவே நாம் ஒவ்வொருவரும் எம்முடைய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நடைபயிற்சியி பற்றிய தெளிவையும், அவற்றினால் எமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளையும் தெரிந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது அவசியமானதாகும்.
You May Also Like: