மாணவப் பருவம் கட்டுரை

manava paruvam katturai in tamil

இன்றைய சமூகங்களின் முக்கிய கதாபாத்திரங்களே மாணவர்களாவர். அதாவது வளர்ந்து வரக்கூடிய நவீன சமூகங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை மிக்கவர்களாகவும், ஆற்றல் படைத்தவர்களாகவும் இந்த மாணவர்களே கருதப்படுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மாணவப் பருவத்தை கடந்து வருவது தான் இயல்பானதாகும். எனவே மாணவப் பருவம் என்பது வேறு எந்த பருவங்களை விடவும் மிகவும் சிறப்பானதொரு காலகட்டமாகும்.

மாணவப் பருவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மாணவர்கள் என்றால் யார்
  • மாணவர்களின் கடமைகள்
  • மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள்
  • சமூகத்தில் மாணவர்களின் பங்கு
  • முடிவுரை

முன்னுரை

“இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்” என்று வாசகத்துக்கு அமைவாக இன்றைய மாணவர் சமுதாயம் தான் நாளைய ஆளும் வர்க்கமாக மாறும்.

எனவே இந்த மாணவர் பருவம் என்பது மிகவும் கட்டுக்கோப்பாகவும், சீரானதாகவும் அமைதல் வேண்டும். அவ்வாறு அமைந்தாலே சிறந்ததொரு சந்ததியினரை பிற்காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

மாணவர்கள் என்றால் யார்

கல்வி கற்பதற்கு வயதெல்லை கிடையாது எனவே கல்வியை கற்க கூடிய அனைவரும் மாணவர்கள் எனும் அந்தஸ்தையே பெற்றுக் கொள்கின்றனர். இருந்தும் குறிப்பாக பாடசாலை பருவம், பல்கலைப்பருவம் ஆகியவற்றில் கல்வியை தொடர்புடையவர்கள் பெரும்பான்மையான மாணவர் சமூகமாக காணப்படுவர்.

இவர்கள் வெறுமனே உலக கல்வியை மாத்திரம் கற்பதோடு நின்று விடாமல், சமூகத்தை நிர்வகிப்பதற்கு தேவையான திறன்களையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

மாணவர்களின் கடமைகள்

மாணவர்களுக்கு என தனியான பொறுப்புகளும், கடமைகளும் காணப்படுகின்றன. அந்த வகையில் இளையோர், முதியோர் ஆகியோரிடம் அன்பு காட்டுதல், மரியாதை செய்தல், ஆசிரியர்களை மதித்தல், பாடசாலை, பல்கலைக்கழக விதிமுறைகளை கடைப்பிடித்தல்,

சமூகத்தில் நற்பிரஜையாக திகழ அடித்தளத்தினை உருவாக்குதல், ஒழுக்கம் என்னும் உயர்ந்த பண்பினை கைக்கொள்ளுதல், அனைவருக்கும் உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதோடு, நட்பழக்கங்களை மாத்திரம் கைக்கொள்வது ஒரு மாணவனுடைய கடமையாகவும், பொறுப்பாகவும் காணப்படுகின்றது.

மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள்

சமூகங்களில் மாணவர்கள் எதிர்கொள்ள கூடிய சவால்கள் பல காணப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானதாக, கிராமம் மற்றும் சேரி புறங்களில் வாழக்கூடிய மாணவர்கள் சிறந்த கல்வியையோ அல்லது கல்வி நடவடிக்கைகளுக்கான முறையான கட்டிட, தளபாட வசதிகளையோ பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் சமூகத்தில் காணப்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள் அதாவது சாதி ரீதியான பாகுபாடுகள், தீண்டாமை, சமூக அந்தஸ்து, மற்றும் ஏழை பணக்காரன் வேறுபாடு போன்ற காரணங்களினாலும் மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

சமூகத்தில் மாணவர்களின் பங்கு

எதிர்காலத்தில் சிறந்த ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவது மாணவர்களின் கைகளில் நிர்ணயிக்கப்படக் கூடிய ஒரு செயற்பாடாகும். எனவே சிறந்ததொரு சந்ததியினரையும், நாட்டிற்கான சிறந்த எதிர்காலத்தையும் கட்டி எழுப்புவதில் மாணவர்களின் பங்கு மகத்தானதாகவே காணப்படுகின்றது.

மேலும் சமூகத்தில் பல்வேறு தொண்டு செயல்பாடுகளை மாற்றுவதற்கும் மாணவர்கள் முன்வர வேண்டும். நாம் வாழக்கூடிய சமூகம் மற்றும் எம்மைச் சூழ உள்ள சூழல் ஆகியவற்றை முறையாக வழி நடத்துவதில் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியமானதாகும் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முடிவுரை

மனிதன் என்ற வகையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் தன்னுடைய வாழ்நாளில் அனுபவிக்க கூடிய ஒரு காலமே மாணவப் பருவமாகும்.

அந்த வகையில் மாணவப் பருவத்தில் நாம் எந்தெந்த விடயங்களை அதாவது எவ்வாறான கடமைகளை நிறைவேற்ற வேண்டும், எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும் மற்றும் சமூகத்துக்கு ஆற்றுவேண்டிய பணிகள் யாவை போன்ற அனைத்தையும் அறிந்து கொண்டு செயல்படுவது மாணவர்களின் தலையாயக் கடமையாகும்.

You May Also Like:

மாணவர்களின் கடமைகள் கட்டுரை

சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு